சென்னை: வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இது குறித்து வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு அவரது பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் புறக்கணித்து விட்டு, வள்ளலார் பன்னாட்டு மையத்திற்கு நாளை அடிக்கல் நாட்டுவதற்கு தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வள்ளலாரின் கொள்கைக்கும், மக்களின் விருப்பத்திற்கும் மதிப்பளிக்காமல் தமிழக அரசு செயல்படுவது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டம், வடலூரை அடுத்த பார்வதிபுரம் என்ற இடத்தில் 1867 ஆம் ஆண்டில் சத்திய ஞான சபையை அமைத்த வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார், அதற்காக பார்வதிபுரம் மக்களிடமிருந்து 106 ஏக்கர் நிலங்களை கொடையாக பெற்றார். அவ்வாறு பெறப்பட்ட நிலத்தில் தென்கோடியில் சத்திய ஞானசபை, தருமசாலை, ஒளித்திருக்கோயில் ஆகியவற்றை அமைத்த வள்ளலார், மீதமுள்ள இடத்தை அவரை பின்பற்றும் பக்தர்கள் கூடுவதற்கான பெருவெளியாக பயன்படுத்தினார். அங்குள்ள ஒளிக்கோயிலில் ஏற்றப்படும் தீபத்தின் ஒளி ஏழு திரைகளை விலக்கி காட்டப்படும் போது, அதை பக்தர்கள் எந்தத் தடையுமின்றி பார்க்க வேண்டும் என்பது தான் 70 ஏக்கரில் பெருவெளி அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.
ஆனால், வடலூர் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க முடிவு செய்த தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஒளிக்கோயிலின் தீப ஒளியை பக்தர்கள் வழிபடுவதற்காக உருவாக்கப்பட்ட பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்கத் துடிப்பது வள்ளலாரின் விருப்பத்திற்கும், நோக்கத்திற்கும் எதிரானது என்பதால் அந்த முயற்சியை கைவிட வேண்டும்; பெருவெளிக்கு பதிலாக அருகிலுள்ள காலி இடங்களில் பன்னாட்டு மையத்தை அமைக்கலாம் என்றும் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன்.
» “சமூக நீதியைக் காப்பதில் அரசுக்கு அக்கறையும் தெளிவும் இல்லை” - ராமதாஸ் @ ஆளுநர் உரை
» மீனவர் பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலினின் கடிதங்களால் எந்தப் பயனும் ஏற்படாது: ராமதாஸ்
உலகம் முழுவதும் வாழும் வள்ளலார் பக்தர்களின் விருப்பமும் அதுவாகவே உள்ளது. ஆனால், அதை மதிக்காத தமிழக அரசு, நான் அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து சரியாக ஒரு மாதம் கழித்து பிப்ரவரி 17 ஆம் நாளான நாளை சனிக்கிழமை வடலூர் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அடிக்கல் நாட்டவுள்ளது. சென்னையிலிருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டவிருப்பதாக தெரிகிறது.
வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்த போது அதை பா.ம.க. வரவேற்றது. அதற்கு காரணம் வள்ளலாரின் புகழும், பெருமையும் உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்படுவதற்கு இந்த மையம் உதவும் என்று நம்பியது தான். தமிழ்நாட்டு மக்களும் கூட இத்தகைய நம்பிக்கையைத் தான் கொண்டிருந்தனர். ஆனால், வள்ளலார் அவரது உயிராக நேசித்த பெருவெளியை சிதைத்து தான் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்படும் என்பது நிச்சயம் அவருக்கு சிறப்பு சேர்க்காது. மாறாக, அருட்பிரகாச வள்ளலாரின் பெருமையையும், செல்வாக்கையும் அது குறைத்து விடும்.
வடலூர் சத்தியஞான சபையில் பெருவெளி அமைக்கப்பட்டு 157 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஒன்றரை நூற்றாண்டு காலத்தில் அங்கு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பெருவெளி அமைக்கப்பட்ட நாளில் இருந்து 7 ஆண்டுகள் வள்ளலார் உயிருடன் வாழ்ந்தார். அப்போது பெருவெளியில் கட்டிடங்களைக் கட்டலாம் என்றும், வேளாண்மை செய்யலாம் என்றும் யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. ஆனால், அவற்றை ஏற்க வள்ளலார் மறுத்து விட்டார். அதற்கு அவர் கூறிய காரணம், 'இன்னும் பல பத்தாண்டுகள் கழித்து தீபத்தின் ஒளியைக் காண பல லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள். அதற்கு வசதியாக பெருவெளி அதே நிலையில் பராமரிக்கப்பட வேண்டும்' என்பது தான். அவர் கூறியதைப் போலவே சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற தைப்பூசத் திருவிழாவில் ஒளி தீபத்தை காண்பதற்காக 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான பக்தர்கள் கூடினர். பெருவெளியின் தேவை 15 நாட்களுக்கு முன்பு கூட நிரூபிக்கப்பட்ட நிலையில், அதை உணராமல் அங்கு பன்னாட்டு மையத்தை கட்டி பெருவெளியை சிதைக்கத் துடிப்பதை அனுமதிக்க முடியாது.
சத்திய ஞானசபையிலிருந்து 3 கி.மீ சுற்றளவில் வள்ளலார் பிறந்த மருதூர், அவர் தங்கியிருந்து நிர்வாகம் செய்த கருங்குழி, அவர் சித்தி அடைந்த மேட்டுக்குப்பம் ஆகியவை உள்ளன. அப்பகுதிகளில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பது தான் சரியானதாக இருக்கும். அதற்கு மாறாக, பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையம் அமைக்கப்பட்டால், அது அவருக்கு இழைக்கப்படும் அவமதிப்பாகவே கருதப்படும். எனவே, வடலூர் பெருவெளியில் பன்னாட்டு மையத்தை அமைக்கும் முடிவை கைவிட்டு, சத்திய ஞானசபைக்கு எதிரில் நிலக்கரி சுரங்கம் இருந்து மூடப்பட்ட நிலம், கடலூர் சாலை, கும்பகோணம் சாலை, சேத்தியாத் தோப்பு சாலை, விருத்தாசலம் சாலை ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தில் மையத்தை அமைக்க வேண்டும்; அதுகுறித்து முடிவெடுக்கப்படும் வரை அடிக்கல் நாட்டுவதை ஒத்தி வைக்க வேண்டும். அதற்கு மாறாக, வடலூர் சத்திய ஞானசபை பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க அரசு முயன்றால் அதற்கு எதிராக மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago