சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்தி தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை: உயர் நீதிமன்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் சொத்துகளுக்கான வழிகாட்டி மதிப்பீட்டை மறு நிர்ணயம் செய்ய பத்திரப் பதிவுத் துறைத் தலைவர் தலைமையிலான மதிப்பீட்டுக் குழு செயல்பாட்டில் உள்ளது.

கடந்த 2023-24 தமிழக அரசின் பட்ஜெட் உரையில், தமிழகத்தில் சொத்துகளுக்கான மதிப்பு பலமடங்கு அதிகரித்துள்ளதால், வழிகாட்டி மதிப்பீட்டையும் உயர்த்ததமிழக அரசு முடிவு செய்துள்ளதுஎன்றும், மதிப்பீட்டுக் குழு வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்யகாலஅவகாசம் எடுத்துக்கொள்ளும் என்பதால், தற்காலிக நடவடிக்கையாக 2017-ம் ஆண்டு ஜூன்8 வரை அமலில் இருந்த வழிகாட்டி மதிப்பீட்டின் அடிப்படையில் புதிய மதிப்பீடு நிர்ணயம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

புதிய வழிகாட்டி மதிப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டு, கடந்த 2023 ஏப்.1 முதல் அமல்படுத்தப்படும் என கடந்த ஆண்டு மார்ச் 30-ல் சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டது.

தமிழக அரசின் இந்த சுற்றறிக்கையை எதிர்த்து கிரெடாய் மற்றும் 3 கட்டுமான நிறுவனங்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, வழிகாட்டி மதிப்பீட்டை உயர்த்துவதற்கான விதிகளின்படி துணைக் குழுக்கள் அமைத்து, அறிக்கைகளைப் பெற்று, ஆய்வு செய்து, பொதுமக்களின் கருத்துகளையும் கேட்டு அதன்பிறகே புதிய வழிகாட்டி மதிப்பீட்டை நிர்ணயம் செய்ய முடியும். ஆனால், இந்த சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தமிழக அரசின் சுற்றறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டிருந்தார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசுத் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி, இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.சுப்ரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சுற்றறிக்கையை ரத்து செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தனர். மேலும், இது தொடர்பாக கிரெடாய் உள்ளிட்ட எதிர்மனுதாரர்கள் 4 வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE