தலைமை தேர்தல் ஆணையர் பிப்.23-ல் சென்னையில் ஆலோசனை

By செய்திப்பிரிவு

சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பிப்.23ம் தேதி காலை 10.35 மணிக்கு சென்னை வருகிறது. இரண்டு நாட்கள் இந்த குழுவினர் தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்கின்றனர்.

சென்னை கிண்டியில் உள்ள ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில், காலை 11.30முதல் பிற்பகல் 1 மணிவரை, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி, அவர்களின் பரிந்துரைகள், கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பெறுகின்றனர். தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ முன்னிலையில், மாவட்ட தேர்தல் அதிகாரிகளான சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் இதர மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை பொறுப்பு அதிகாரிகள், காவல் ஆணையர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுடன் நேரடியாகவும், காணொலிவாயிலாகவும் அந்தந்த மாவட்ட தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து, அறிவுறுத்தல்களை வழங்குகின்றனர்.

மறுநாள் 24-ம் தேதி காலை, 9 முதல் 11 மணிவரை தமிழகம், கர்நாடகா, கேரளா மாநிலங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள், காவல்துறை பொறுப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அப்போது, தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் தங்கள் மாநிலங்களின் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை வழங்குகின்றனர். காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணிவரை, வருமான வரி, வருவாய் புலனாய்வு, போதைப் பொருள் தடு்ப்பு பிரிவு, சுங்கத்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை உள்ளிட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். தொடர்ந்து, பிற்பகல் 2 மணி முதல், 3 மணிவரை தமிழக தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவிட்டு, அன்று மாலையே டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE