செம்படமுத்தூர் கிராமத்தில் குரங்குகளிடம் இருந்து தோட்ட பயிர்களை காக்க ‘போராடும்’ விவசாயிகள்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் கிராமத்தில் சுற்றித் திரியும் குரங்குகள் கூட்டம் தோட்டப் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி அருகே செம்படமுத்தூர் ஊராட்சியில் எஸ்.மோட்டூர், மொட்டுபாறை, தோணிகுட்டை, குட்டகொல்லை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயத்தைப் பிரதானத் தொழிலாகச் செய்து வருகின்றனர்.

தென்பெண்ணை ஆறு: இக்கிராமங்களை ஒட்டி தென்பெண்ணை ஆறு செல்கிறது. இதனால், இங்கு தென்னை, வாழை, நெல், ராகி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த இரு மாதங்களுக்கு மேலாக விளை நிலங்களில் உள்ள பயிர்களைக் குரங்குகள் கூட்டம் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

பழங்களை குறிவைக்கும் நிலை - இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் சிலர் கூறியதாவது: செம்படமுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் அதிக அளவில் குரங்குகள் கூட்டம், கூட்டமாக சுற்றி வருகின்றன. அவை தென்னை தோட்டங்களில் புகுந்து இளநீரைப் பறித்து, கீழே வீசி சேதப்படுத்தி வருகின்றன. தற்போது மாமரங்களில் பூக்கள் பூத்துள்ள நிலையில், பூக்களைச் சேதப்படுத்தி வருகின்றன. மேலும், கொய்யா, பப்பாளி தோட்டங்களில் புகுந்து காய், பிஞ்சு உள்ளிட்டவற்றை உதிர்த்துவிட்டுச் செல்கின்றன. இதனால், மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகிறோம்.

விவசாயிகளுக்குச் சவால்: ஏற்கெனவே விளைநிலங்களில் காட்டுப்பன்றிகளிடமிருந்து பயிர்களை பாதுகாப்பது பெரும் சவாலாக இருந்து வரும் நிலையில், தற்போது, குரங்குகள் கூட்டத்தால் விளை பொருட்களைப் பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக விளை நிலங்களில் இரவு, பகலாகக் காவல் இருக்கும் நிலையுள்ளது. இதே போல, ஊருக்குள் வலம் வரும் குரங்குகள் வீடுகளுக்குள் புகுந்து உணவு மற்றும் தானியங்களை சூறையாடிச் செல்கின்றன.

இதனால், வீட்டிலும், விளை நிலத்திலும் அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலையுள்ளது. இதனிடையே, கோடைக் காலம் தொடங்கவுள்ளதால், காப்புக்காடுகளில் உணவு மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலையில், வரும் நாட்களில் வனவிலங்குகள் அதிக அளவில் விளை நிலங்கள் மற்றும் ஊருக்குள் வரும் அபாயம் உள்ளது.

பழ வகை மரங்கள் வேண்டும்: எனவே, காப்புக்காடுகளில் வன விலங்குகளின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யவும், குரங்குகள் ஊருக்குள் வருவதைத் தடுக்கவும் காப்புக்காடுகளில் பழவகை மரங்களை அதிகளவில் வனத்துறை நடவு செய்து, பராமரித்து வளர்க்க வேண்டும். மேலும், செம்படமுத்தூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் சுற்றித் திரியும் குரங்குகளைக் கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE