கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே கடலில் மிதந்த ஆயில் பேரல் மீட்பு

By செய்திப்பிரிவு

கல்பாக்கம்: கல்பாக்கம் அணுமின் நிலையம் அருகே சட்ராஸ் மீனவர் பகுதியில் உள்ள கடலில், நேற்று மர்மமான முறையில் மிதந்து கொண்டிருந்த பேரலை மீட்டு கரைக்கு கொண்டு வந்த மீனவர்கள், அதை திறந்து பார்த்தபோது ஆயில் இருப்பது தெரிந்ததால் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் பகுதியில் சென்னை அணுமின் நிலையம் உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் அணு ஆராய்ச்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால், நகரியப்பகுதி உட்பட கடலிலும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், பாதுகாக்கப்பட்ட பகுதியாக விளங்கி வருகிறது.

இந்நிலையில், அணுமின் நிலையத்துக்கு மிக அருகே சதுரங்கப்பட்டினம் மீனவர் பகுதியில் உள்ள கடலில், கரையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் மர்மமான முறையில் இரும்பிலான பேரல் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை மீனவர்கள் பார்த்தனர். மேலும், 5 படகுகளின் உதவியோடு கயிற்றால் பேரலை கட்டி கரைக்கு இழுத்து வந்தனர்.

மேலும், போலீஸாருக்கு தகவல் தெரிவித்து பேரலை திறந்து பார்த்ததில் ஆயில் இருப்பது தெரிந்தது. மேலும், சம்பவ இடத்துக்கு வந்த சதுரங்கப்பட்டினம் போலீஸார் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், பேரலை மீட்டு ஆய்வுக்காக காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE