53 ஏக்கர் நிலத்தை மீட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி மனு கொடுக்கும் போராட்டம்

By செய்திப்பிரிவு

செங்கல்பட்டு: தனியார் ரிசார்ட் இயக்குநர் உள்ளிட்டோரால் அபகரிக்கப்பட்ட 53 ஏக்கர் நிலத்தை மீட்டு சிறுதாவூர் தலித் மக்களுக்கு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியினர் செங்கை ஆட்சியரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், சிறுதாவூர் கிராமத்தில் தலித் மக்கள் 20 குடும்பங்களுக்கு விவசாயம் செய்ய தலா ஒரு நபருக்கு 2.5 ஏக்கர் வீதமும், வீட்டுமனையாக தலா 10 சென்ட் இடமும் பொது பயன்பாட்டுக்கு ஒரு ஏக்கரும் என மொத்தம் 53 ஏக்கர் நிலம் 1967-ம் ஆண்டு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இந்த நிலங்கள் தனியார் ரிசார்ட் இயக்குநர் உள்ளிட்ட நபர்களால் மோசடியாக அபகரிக்கப்பட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தை தொடர்ந்து 2007-ம் ஆண்டு நீதியரசர் கே. பி.சிவசுப்பிரமணியம் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேற்படி விசாரணை ஆணையம் சாட்சியங்களையும் ஆவணங்களையும் விசாரணை செய்து விவசாயிகளிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும் இந்த நிலங்களுக்கு அருகாமையில் உள்ள சிறுதாவூர் பங்களா வளாகத்தில் வளைக்கப்பட்டுள்ள 34 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலங்களையும் அரசு கையகப்படுத்த வேண்டும் எனவும் பரிந்துரை செய்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, 2014-ம் ஆண்டு, ஜூலை 4-ம் தேதி முடித்து வைக்கப்பட்ட நிலையில் நிலங்களின் ஆவணங்களில் பெயர் மற்றும் நிலவகை மாற்றம் செய்து தமிழக அரசு உடனடியாக நிலமிழந்த சிறுதாவூர் கிராமத்தைச் சேர்ந்த 20 குடும்பங்களில் உள்ள பயனாளிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு நிலத்தைப் பிரித்து வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் தலைமையில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் க.பகத்சிங்தாஸ், திருப்போரூர் வட்ட செயலாளர் எம்.செல்வம், விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைசெயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்டத் தலைவர் வி.அரிகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் பேசினர். முன்னதாக செங்கல்பட்டு ராட்டினங் கிணறு பகுதியில் இருந்து ஊர்வலமாகச் சென்று மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE