நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை வெற்றி

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: கத்தரிக்கோல் குத்தி படுகாயமடைந்த 11 வயது சிறுவனுக்கு,திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

சென்னை, மதுரைக்கு அடுத்த படியாக மிகப்பெரிய மருத்துவமனையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திகழ்கிறது. இங்கு நாள்தோறும் 2,000-க்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இருதயவியல், சிறுநீரகவியல் மற்றும் நரம்பியல் என அனைத்து துறைகளும் இங்கு செயல்படும் நிலையில், 1,500-க்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சமீபத்தில் நடைபெற்ற 2 சிறப்பான சிகிச்சைகள் குறித்து, இக்கல்லூரி முதல்வர்டாக்டர் ரேவதி பாலன் கூறியதாவது: தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சந்திரன் என்பவரது மகன் ஸ்டாலின் கிரேஸ் டேனிசன் என்ற 11 வயது சிறுவனின் மார்பில், எதிர்பாராத விதமாக கத்தரிக்கோல் குத்தி படுகாயமடைந்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவெடுத்தனர். 30 நிமிடங்களில் அறுவை சிகிச்சை பணிகள்தொடங்கப்பட்டு, 3 மணி நேரம்சிகிச்சை நடைபெற்றது. சிறுவனுக்கு இருதயத்தின் தமணியில் ஓட்டை விழுந்திருந்த தால் அதிக ரத்த இழப்பு ஏற்பட்டிருந்தது. அதனை சரி செய்து வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் பள்ளிக்கு செல்லும் அளவில் உடல்நலம் தேறி உள்ளார்.

மற்றொரு சிகிச்சை: மேலும், மற்றொரு சாதனையாக மருத்துவப் பட்ட மேற்படிப்பு பயிலும் மாணவனுக்கு, குடலில் ஏற்பட்ட அழற்சி காரணமாக கணையம் பகுதியில் சீழ் வைத்ததால், கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்குஅறுவை சிகிச்சை செய்யாமல், மருத்துவமனையில் உள்ள நவீன உபகரணங்கள் மூலம், என்டாஸ்கோபி முறையில் ஸ்டென்ட் பொருத்தி 15 நிமிடங்களில் சீழ் அகற்றப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் மருத்துவமனையின் இருதய மற்றும் நரம்பியல் துறை மருத்துவர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE