துரை வைகோ ரூட் க்ளியர் ‘சிக்னல்’ - திருச்சி தொகுதியில் மதிமுக போட்டி உறுதி?!

By நிவேதா தனிமொழி

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக இடம்பெற்றிருந்தது. அப்போது ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை இடத்தைக் கேட்டுப் பெற்றது மதிமுக. இம்முறை, அந்த எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால், மதிமுக தலைவர் வைகோ தன் மகனான துரை வைகோவை திருச்சியில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறார். அதன் பின்னணி என்ன?

2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மதிமுக சார்பாக ஈரோடு தொகுதியில் கணேச மூர்த்தி போட்டியிட்டார். இம்முறை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவைக் களத்தில் இறக்க காய்கள் நகர்த்தி வருகிறார் வைகோ. அவர் போட்டியிட புதிதாக திருச்சி தொகுதியை மதிமுக கேட்கிறது. ஆனால், அந்தத் தொகுதியில் சென்ற முறை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

எனவே, அந்தத் தொகுதியை மதிமுகவுக்கு கொடுப்பதில் திமுகவுக்கு சிக்கல் இருக்கும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால், திமுக கட்சி சென்றமுறை வெற்றி பெற்ற எம்பிக்கள் செயல்பாடு குறித்து ரகசியமாக சர்வே ஒன்றை எடுத்திருந்தது. அதில், திருச்சி தொகுதியில் திருநாவுக்கரசருக்கு எதிரான மனநிலையில் மக்கள் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், திருநாவுக்கரசர் மீது திமுக அதிருப்தியில் இருக்கிறது.

மேலும், சொந்தக் கட்சியிலும் திருநாவுக்கரசருக்கு எதிரான மனநிலையில் காங்கிரஸ் நிர்வாகிகள் இருக்கிறார்கள். குறிப்பாக, ’இவருக்கு தொகுதி ஒதுக்கக் கூடாது’ என தீர்மானம் போடப்பட்டு தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ளதாம். அமைச்சர் நேரு போன்ற சீனியர்களை இவர் மதிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. எனவே, இம்முறை காங்கிரஸ் பரிந்துரைக்கும் எம்பிக்கள் லிஸ்டில் இவர் பெயர் இடம்பெறும் வாய்ப்பு குறைவு என்னும் தகவல் சொல்லப்படுகிறது.

திருச்சி... காங்கிரஸுக்கா? மதிமுகவுக்கா? - இருப்பினும், மீண்டும் திருச்சி தொகுதியைக் கைப்பற்ற திருநாவுக்கரசர் முயற்சிக்கிறார். இதனால், திமுக கூட்டணியில் திருச்சியில் அவர்தான் போட்டியிடப்போவதாக வெளிப்படையாகப் பேசி வருகிறார்.

மறுபக்கத்தில், திருச்சியைக் குறிவைத்து துரை வைகோ தீவிரமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக, சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் தேர்தல் தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரை வைகோ பங்கேற்றார். மேலும், காவிரி விவகாரத்தில் தீர்வு காணாமல் இருப்பது மற்றும் நூறு நாள் வேலைத் திட்டத்தை முடக்க நினைப்பதாகக் கூறி மத்திய அரசைக் கண்டித்து திருச்சியில் துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தவிர, திருச்சியில் தேர்தல் நிதி வழங்கும் விழாவில் துரை வைகோ பங்கேற்றிருப்பதை அவர் போட்டியிடுவதை உறுதி செய்வதாக தகவல் சொல்லப்படுகிறது. அந்த விழாவுக்குப் பின் பேசிய துரை வைகோ, “நான் திருச்சியில் போட்டியிடுவது குறித்து திமுக தலைமையும், கட்சித் தலைமையும் முடிவு செய்யும்” என்றார்.

இப்படியாக, விரைந்து காய்களை நகர்த்தி திருச்சி தொகுதியைப் பெற துரை வைகோ தீவிரம் காட்டுகிறார். இவரின் நகர்வுக்கு திமுக விரைவில் பச்சைக்கொடி காட்டும் என்னும் தகவல், நம்பத்தகுந்த வட்டாரங்கள் வாயிலாகக் கிடைக்கப் பெற்றுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE