ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் நீக்கம்: பேரவையில் சட்ட மசோதா தாக்கல்

By செய்திப்பிரிவு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வாரிசுதாரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், அதை பராமரிக்க உருவாக்கப்பட்ட அறக்கட்டளை சட்டத்தை நீக்குவதற்கான சட்ட முன்வடிவு நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தைத் தொடர்ந்து, 2 சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதில் ஊராட்சிகள் சட்டத்திருத்த முன்வடிவை, அமைச்சர் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தார். இதற்கான நோக்க காரண விளக்க உரையில், ‘‘6-வது மாநில ஆணையமானது வீட்டு வரி என்ற சொல், வீடுகளுக்கு மட்டுமே வரி விதிக்கப்படும். மற்ற வகை கட்டிடங்களுக்கு அல்ல என்ற தவறான கருத்துப்பதிவை ஏற்படுத்துகிறது. இதை கருத்தில் கொண்டு வீட்டு வரி என்ற பெயரிட்டு முறையை, சொத்து வரி என்று மாற்றம் செய்ய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை தொடர்பான சட்ட முன்வடிவை, அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிமுகம் செய்தார். இதற்கான நோக்க காரண உரையில், ‘‘கடந்த 2020-ம் ஆண்டு ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம், சென்னை போயஸ் தோட்டப்பகுதியில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றியமைக்கவும், பராமரிக்கவும், அதனை மேலாண்மை செய்வதற்குமான நீண்டகால ஏற்பாடுகளாக ஓர் அறக்கட்டளையை நிறுவுவதற்காக இயற்றப்பட்டது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றம், போயஸ் தோட்ட நிலம் மற்றும் கட்டிடத்தை கையகப்படுத்தி மறைந்த முதல்வரின் சட்டப்பூர்வ வாரிசுகளான, மனுதாரர்களிடம் வேதா நிலையத்தின் சாவியை ஒப்படைக்கவும் உத்தரவிட்டது. நீதிமன்றம் உத்தரவிட்டவாறு, அக்கட்டிடத்தின் சாவி சட்டப்பூர்வ வாரிசுகளிடம் வழங்கப்பட்டது.

இதன் அடிப்படையில் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை சட்டம் இயற்றப்பட்டதன் நோக்கம் தற்போது செயல்பாட்டில் இல்லாத நிலையில், அச்சட்டம் காலாவதியாகிவிட்டது. எனவே, அந்த சட்டத்தை நீக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதற்கு இந்த சட்ட முன்வடிவு வகை செய்கிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 2 சட்ட முன்வடிவுகளும் குரல் வாக்கெடுப்பு மூலம் அறிமுகம் செய்யப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE