‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம், தொகுதி மறு சீரமைப்புக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த 2 தனி தீர்மானங்கள் நிறைவேற்றம்

By செய்திப்பிரிவு

சென்னை: மக்களாட்சி தத்துவத்துக்கு எதிரான ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டத்தை செயல்படுத்த கூடாது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த 2 அரசினர் தனி தீர்மானங்களும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்துக்கு பிறகு, தொகுதிமறு சீரமைப்பு மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக 2 அரசினர் தனி தீர்மானங்களை முதல்வர் ஸ்டாலின் முன்மொழிந்தார். அப்போது அவர் பேசியதாவது: நாடு மற்றும் நாட்டு மக்களை அச்சத்திலும், பதற்றத்திலும் வைக்கும் மிக முக்கியமான 2 பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டிய நெருக்கடியான அரசியல் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதுமுற்றிலும் நடைமுறைக்கு சாத்தியமற்றது, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலுக்கு எதிரானது. இதன்மூலம் சட்டப்பேரவைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும். அப்படி கலைப்பது அரசியல் சட்டவிரோதம் என்பதால், இதை எதிர்க்க வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து, மத்தியில் ஆட்சி கவிழ்ந்தால், அனைத்து மாநில அரசுகளையும் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்துவார்களா. சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்துதேர்தல் நடத்த வேண்டி இருந்தால், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவார்களா.

மக்களவை தேர்தலைக்கூட, நாடு முழுவதும் ஒரே நாளில் நடத்த தயாராக இல்லாத சூழலில், மக்களவை தொகுதிகள், 30 மாநில சட்டப்பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது மாயாஜாலமா.

தவிர, மாநில நிர்வாக அமைப்புகளான நகராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றுக்கும் சட்டப்பேரவை, மக்களவையுடன் சேர்த்து தேர்தல் நடத்துவது அரசியல் சட்டத்துக்கு எதிரானது, மாநில உரிமைகளை பறிப்பது ஆகும். எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறையை நாம் கடுமையாக எதிர்த்தாக வேண்டும்.

அதேபோல, தொகுதி மறு சீரமைப்பு திட்டத்தில் தென்னிந்திய மக்கள், குறிப்பாக, தமிழக மக்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை குறைக்கக்கூடிய ஆபத்து, சூழ்ச்சிஇருக்கிறது. அரசியல் விழிப்புமிக்க தமிழகத்தை வஞ்சிக்கும் அநீதியான முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

இந்தியாவில் 1976-ம் ஆண்டு வரை ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு பிறகும், மக்களவை, மாநிலங்களவை, சட்டப்பேரவை தொகுதிகள் மறுநிர்ணயம் செய்யப்பட்டு வந்தன. இவ்வாறு செய்யும்போது, மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. இதன்மூலம், மக்கள்தொகையை குறைக்கும் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறையும். மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் செலுத்தாத மாநிலங்களின் பிரதிநிதித்துவம் அதிகமாகும். இதை ஏற்க முடியாது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்தால், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் பெரும் பின்னடைவை சந்திக்கும். எனவே, கூட்டாட்சி தத்துவத்தை மீறும் எந்த செயலையும் மத்திய அரசு மேற்கொள்ள கூடாது.

தவிர்க்க முடியாத காரணங்களால், தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலைஏற்பட்டால், 1971-ம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில், அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறோம்.

தீர்மானங்கள்: வரும் 2026-ம்‌ ஆண்டுக்கு பிறகு மக்கள்தொகை கணக்கெடுப்பின்‌ அடிப்படையில்‌ மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்‌. தவிர்க்க முடியாத காரணங்களால்‌, மக்கள்தொகை அடிப்படையில்‌ சட்டப்பேரவை, நாடாளுமன்ற தொகுதிகள் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால்‌, 1971-ம்‌ ஆண்டு மக்கள்‌தொகை அடிப்படையில்‌ தற்போது எந்த விகிதத்தில்‌ தொகுதிகள் எண்ணிக்கை உள்ளதோ, அதே விகிதத்தில் தொடரும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த கூடாது என்று மத்திய அரசை சட்டப்பேரவை வலியுறுத்துகிறது. இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதையடுத்து, இரு தீர்மானங்களையும் வரவேற்று அமைச்சர்துரைமுருகன், செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), சிந்தனைச் செல்வன் (விசிக), டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), ம.சின்னதுரை (மார்க்சிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக), தி.வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொமதேக), ஜவாஹிருல்லா (மமக) ஆகியோர் பேசினர்.

வானதி சீனிவாசன் (பாஜக): தொகுதி மறு சீரமைப்பு குறித்துமத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தீர்மானம் தேவையற்றது.

தளவாய் சுந்தரம் (அதிமுக): ஒரே தேர்தல் தொடர்பாக 10 பரிந்துரைகளை அதிமுக வழங்கியுள்ளது. அதன் மீதான நடவடிக்கையை பொருத்து ஆதரிப்போம்.

அருண்மொழிச்செல்வன் (அதிமுக): தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது.

இவ்வாறு உறுப்பினர்கள் பேசினர். இதையடுத்து, தொகுதி மறு சீரமைப்பு தொடர்பான தீர்மானம் ஒருமனதாகவும், ஒரே நாடு ஒரே தேர்தல் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவு அடிப்படையிலும் குரல்வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு அறிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

25 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்