ஒரு யூனிட்டுக்கு 75 பைசா வரை - புதுச்சேரியில் வீட்டு மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்த கடும் எதிர்ப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மீண்டும் வீட்டு மின் கட்டணத்தை உயர்த்த, நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ரூ. 500 கோடி வரை உள்ள மின் கட்டண பாக்கிக்கும், கட்டண உயர்வுக்கும் சம்பந்தமில்லை என்று மின் துறை தலைவர் தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது.

நாடு முழுவதும் உள்ள யூனியன் பிரதேசங்களில் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்ய இணை ஒழுங்கு முறை மின்சார ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான புதுவையிலும் ஆண்டு தோறும் மின் கட்டணம் புதிதாக நிர்ணயிக்கப்படுகிறது. இதன் படி இந்த ஆண்டு வீட்டு உபயோகத்துக்கு, ஒரு யூனிட்டுக்கு சராசரியாக 50 பைசா முதல் 75 பைசா வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கு சராசரியாக ஒரு ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. 2024 - 25-ம் ஆண்டுக்கு மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள பிஎம்எஸ் அரங்கில் நேற்று நடந்தது.

இணை ஒழுங்கு முறை மின்சார ஆணைய தலைவர் அலோக் டண்டன், உறுப்பினர் ஜோதி பிரசாத் ஆகியோர் பொது மக்களிடம் கருத்து கேட்டனர். கூட்டம் தொடங்கியவுடன், புதுவை மின்துறை தலைவர் சண்முகம் உத்தேச மின் கட்டண விவரம் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், மார்க்சிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், பெற்றோர் ஆசிரியர் சங்க வை.பாலா, நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த முருகானந்தம், நுகர்வோர் குரல் சுப்பராயன், சமூக சேவகர் கோபால், மாணவர் பெற்றோர் ஆசிரியர் சங்க நாராயணசாமி உட்பட பலர் பேசினர்.

இதில், மின் கட்டண ரசீதில் பலவிதமான பெயர்களில் பணம் வசூலிக்கப்படுகிறது. 94 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.300 கட்டணம் வந்துள்ளது. ஏன் இவ்வளவு பெரிய தொகை வருகிறது? மின் கட்டணத்தில் பராமரிப்பு என்ற வகையில் தொகை வசூலிக்கப்படுகிறது. வீட்டு உபயோக மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. என்று கூறி கண்துடைப்புக்காக இக்கூட்டம் நடத்துவதாக பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பெற்றோர் ஆசிரியர் மாணவர் சங்க பாலா பேசுகையில், புதுச்சேரியில் எவ்வளவு தொகை மின் துறையில் நிலுவையில் வைக்கப் பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினார்.

தொடக்கத்தில் நிலுவைத் தொகைக்கும் இக்கூட்டத்துக்கும் தொடர்பில்லை என்று மின்துறை தலைவர் சண்முகம் தெரிவித்தார். ஒரு கட்டத்தில், அரசு துறைகள் ரூ. 300 கோடியும், நுகர்வோர் ரூ. 200 கோடியும் நிலுவையில் வைத்துள்ளனர். நுகர்வோர் நிலுவைத்தொகை அடுத்த பில்லுக்குள் வசூலாகிவிடும். அரசு நிலுவைத்தொகையால் மக்களுக்கு பாதிப்பில்லை என்றுகுறிப்பிட்டார். ஆனால் அது தவறாக குறிப்பிடுவதாக தெரிவித்து வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் மின் திருட்டு தொடர்பாக, எவ்வித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கும் அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை.

இக்கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன் பேசுகையில், பிற மாநிலங்களில் ஒரு ஆண்டுக்கு எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது? புதுவையில் நடப்பாண்டில் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் துறையின் நிதி பற்றாக்குறையை கணக்கீட்டு மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல கோடி ரூபாய் மின் கட்டண பாக்கி நிலுவையில் உள்ளது. இதை வசூலிக்க எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இந்தச் சுமை புதுவை மக்கள் மீது திணிக்கப்படுகிறது. புதுவை மின் துறையை தனியார்மயமாக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின் கட்டணத்தை யாருக்காக உயர்த்துகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.

விரைவில் முடிவு: வழக்கமாக கருத்துக் கேட்பு கூட்டத்துக்கு பின்னர் மின் கட்டணத்தை நிர்ணயம் செய்வார்கள்.இதன் அடிப்படையில் மின் கட்டண உயர்வு வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வர உள்ளது. புதுச்சேரி மின் துறை உயர்த்தி கேட்கும் மின் கட்டணமே, புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்படுவது தொடர்கிறது. தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக மின் கட்டணம் புதுச்சேரியில் உயர்ந்து வருகிறது. தற்போது மின் துறையை தனியார் மயமாக்க நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், மின் கட்டணம் அதிகரிக்கவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE