சென்னை: “மத்திய பாஜக அரசு தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது” என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், “2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா, ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல் சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும்" என்று திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களு்ககு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “திமுகவின் கொள்கை பலமும், தொண்டர்களாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது. மதவெறி அரசியல் நடத்தும் பாஜகவை கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திமுகவுக்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு என்பதால்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜகவின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் திமுகவை விமர்சிக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது திமுக எனும் பேரியக்கம். அவர்களுக்கே அப்படியென்றால், அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான்.
அரசியல் கருத்துகளை, கொள்கை முரண்பாடுகளை ஜனநாயக வழியில் எதிர்கொள்ள வலுவோ, நேர்மையோ இல்லாத மத்திய பாஜக அரசு, தன் வசப்படுத்தியுள்ள அமலாக்கத்துறை, மத்திய புலனாய்வுத்துறை, வருமானவரித்துறை இவற்றை ஏவி, தனக்கு எதிரான இயக்கங்களை நசுக்கிவிடலாம் என நினைத்து வன்மத்துடன் செயல்பட்டு வருகிறது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடிகளை ஏற்படுத்துவதுடன், சட்டமன்றத்திலும் தனது கைப்பாவையாக உள்ள ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என நினைத்து, அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. சுருக்கமாகச் சொன்னால், ஹிட்லர் போன்ற சர்வாதிகாரத்தன்மையுடன் செயல்பட்டு, தங்களால் ஒருபோதும் வெற்றி பெற முடியாத தமிழ்நாடு போன்ற மாநிலங்களின் உரிமைகளையும் அதிகாரங்களையும் பறிக்கும் வகையில் மத்திய பாஜக ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில், ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், மாநில உரிமைகளை மீட்கவும் நாடெங்கும் அந்தக் குரல் ஒலிக்க வேண்டும் என்பதற்கான முதல்படியாக பிப்ரவரி 16, 17, 18 ஆகிய நாட்களில், ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு - புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திமுகவின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது.உரிமை முழக்கக் கூட்டம் உங்களில் ஒருவனான என் பெயரில் அமைந்திருந்தாலும், ஒலிக்கப் போவது தொண்டர்களாம் உங்களின் குரல்தான்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் களம் என்பது இந்தியாவில் இனி தேர்தல் முறை என ஒன்று இருக்குமா, மக்களின் வாக்குரிமை மதிக்கப்படுமா, ஜனநாயகம் நீடிக்குமா, அரசியல்சட்டம் நிலைக்குமா, பன்முகத்தன்மையும் மாநில உரிமைகளும் உயிர்த்திருக்குமா என்பதற்கான இறுதி விடையைத் தரக்கூடியக் களமாகும்.
தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? மத்திய பாஜக அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது. மத்திய பாஜக அரசின் உழவர்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திமுகவும் தோழமைக் கட்சிகளும் எதிர்த்தபோது, அந்தச் சட்டங்களை ஆதரித்தது அதிமுக.
பல்வேறு மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் மத்திய பாஜக அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு முழுமையாகத் துணை நின்ற இயக்கம் திமுக. சிறுபான்மை முஸ்லிம்களுக்கும் இலங்கைத் தமிழ் மக்களுக்கும் எதிரான குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை ஆதரித்தது அதிமுக.
நாட்டிலேயே மிகச் சிறந்த மருத்துவக் கட்டமைப்பைக் கொண்டுள்ள தமிழகத்தில் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் நீட் தேர்வு, மாநிலங்களின் வரி வருவாயைப் பறிக்கும் ஜிஎஸ்டி, மின்னுற்பத்தியையும் விநியோகத்தையும் சீரழிக்கும் உதய் மின்திட்டம் என மத்திய பாஜக அரசின் மக்கள் விரோத மாநிலக் குரோத திட்டங்களுக்கும் சட்டங்களுக்கும் ஆதரவு தந்து, உரிமைகளை அடகு வைத்து, கஜானாவைக் கொள்ளையடித்து ஆட்சிக்காலத்தை நிறைவு செய்து கொண்டவர்கள்தான் அதிமுகவின் பழனிசாமியும் அவரது அமைச்சரவைக் கூட்டாளிகளும்.
பாஜகவின் பாசிச நடவடிக்கைகள் அனைத்துக்கும் துணை நின்று ஆதரித்த அதிமுகதான் இப்போது பாஜக சொல்லிக் கொடுத்ததுபோலவே கூட்டணி இல்லை என்று பசப்பிக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களுக்கும் இந்திய அளவிலும் பாஜக செய்த அத்தனை பாவங்களுக்கும் உடந்தையாக இருந்ததுதான் அதிமுக மக்களின் எதிரிகளான இந்த இரண்டு கட்சிகளையும் அம்பலப்படுத்த வேண்டிய கடமை கட்சித் தொண்டர்களாகிய உங்களுக்கு இருக்கிறது.
பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறந்துபோனதையும், அறிவிக்கப்பட்ட திட்டங்கள் காற்று போன பலூன்களானதையும் எடுத்துரைக்கத்தான் திமுகவின் உரிமை மீட்கும் முழக்கம் ஒலிக்கவிருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள 68 ஆயிரத்து 36 வாக்குச்சாவடிகளுக்கும் பி.எல்.ஏ-2 எனப்படும் பாகமுகவர்களை நியமித்து, பூத் கமிட்டிகளை அமைத்து, ஒரு வாக்குச்சாவடிக்கு சராசரியாக 10 பேர் என்ற அளவில் ஏறத்தாழ 6 லட்சத்து 80 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்களாம் முன்கள வீரர்களைக் கொண்டுள்ள இயக்கம் திமுக. அவர்களுக்கு களப்பயிற்சியும் இணையதளப் பயிற்சியும் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்தல் களத்தை எதிர்கொள்ளும் வியூகத்தைக் கற்றுத்தரும் வகையில் கட்சி முன்னணியினரின் சிறப்புரையுடன் இந்தப் பொதுக்கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.
மாவட்டச் செயலாளர்களும் பொறுப்பு அமைச்சர்களும் அவரவர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து, சரியான முறையில் திட்டமிட்டு, கழக உடன்பிறப்புகளுடன் பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொள்ளும் வகையில் இந்தப் பொதுக்கூட்டங்கள் அமைந்திட வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து கட்சியினருக்குப் பயிற்சி தரும் வகையிலும், பொதுமக்களுக்கு பாஜக - அதிமுக மறைமுகக் கூட்டாளிகளின் நேரடித் துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் ‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ அமைந்திட வேண்டும். அதுதான், பாசிசத்தை வீழ்த்தி, ‘இந்தியா’ வென்றிடுவதற்கான களத்தை அமைத்துத் தரும்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
18 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
5 hours ago