பேரவையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றம் - திமுகவின் ‘திடீர்’ முடிவின் பின்னணி என்ன?

By நிவேதா தனிமொழி

பல நாட்களாக இருக்கை விவகாரத்தைக் கையிலெடுத்து பேசிவந்தது அதிமுக. இதனால், பேரவை வெளிநடப்பைக் கூட நிகழ்த்தியது. இந்த நிலையில், தற்போது இருக்கை மாற்ற ஒப்புதல் அளித்திருக்கிறது திமுக. அதன் பின்னணி என்ன? இருக்கையை மாற்ற திமுக தீவிரம் காட்டியதா? எதற்காக இந்த மாற்றம்?

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் 2024, கடந்த 12-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கியது கூட்டத் தொடர். இரண்டாவது நாளில் ’ஜீரோ ஹவரில்’ எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் துணை தலைவராக நியமிக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு தலைவர் பக்கத்தில் இடம் ஒதுக்கி தருமாறு பல நாட்களாகக் கோரிக்கை முன்வைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டி பேசினார்.

இதற்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “அதிமுக கட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் உதயகுமாருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என தொடர்ந்து அவையில் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை வைக்கிறார். அதில் சபாநாயகருக்கு உரிமை இருப்பது பற்றி பல முறை பேசப்பட்டுள்ளது. இருப்பினும், எதிர்க்கட்சிகள் எடுத்து வைத்திருக்கும் கோரிக்கையினை மறுபரிசீலனை செய்யுமாறு சபாநாயகரைக் கேட்டுக்கொள்கிறார்” எனக் கோரிக்கை முன்வைத்தார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் இருக்கை மாற்றும் கோரிக்கையை வைத்திருக்கிறார். அது பரிசீலிக்கப்படும்” எனக் கூறினார். இந்த நிலையில், ஓபிஎஸ் இடம் மாற்றப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த திடீர் மாற்றத்தின் பின்னணி என்ன? - திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ’இபிஎஸ் - ஒபிஎஸ்’ என இரு தலைவர்கள் மத்தியில் உடைசல் ஏற்பட்டது. அப்போது, எதிர்க்கட்சித் துணை தலைவர் பதிவிலிருந்த ஓ.பன்னீர்செல்வத்தை நீக்கிவிட்டு, உதயகுமார் நியமிக்கப்பட்டார். அதன்பின், பலமுறை இருக்கையை மாற்றச் சொல்லி அதிமுக கோரிக்கை வைத்தது.

குறிப்பாக, இதை தனிப்பட்ட கோரிக்கையாக அதிமுகவினர் பலமுறை சபாநாயகரை சந்தித்தும் பேசியுள்ளனர். கடந்த 13-ம் தேதியும். கூட்டத்தொடர் தொடங்குவதற்குன் முன்பு வேலுமணி, செங்கோட்டையன் மற்றும் சில அதிமுகவினர் சபாநாயகரிடம், ‘நேரமில்லா நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஒரு பிரச்சினையை எழுப்பப் போகிறார்’ என தகவல் தெரிவித்தனர். அதற்கு சபாநாயகரோ, ’தாராளமாக எழுப்பலாம். ஆனால், என்னப் பிரச்சினை என சொல்லாமல் கேட்டால், எப்படி ஒப்புதல் தருவது’ எனக் கேட்டிருக்கிறார். அதற்கு வேலுமணி, “உங்கள் முதல்வர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது சபாநாயகரிடம் ஒப்புதல் பெறாமல் பலமுறை கேள்வி கேட்டிருக்கிறார்” எனச் சுட்டிக்காட்டி பேசினார்.

அப்போது அமைச்சர்கள் சக்கரபாணி, எ.வ.வேலு, “தனபால் சபாநாயகராக இருக்கும்போது ’ நேரமில்லா நேரத்தில் பிரச்சினையை எழுப்புகிறோம்’ என சொல்லுவோம். அவர் அமைச்சர் பதில் இல்லாமல் பிரச்சினையை எழுப்பி மட்டும் என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்பார். ’பதிவு மட்டும் செய்து விடுகிறோம்’ எனக் கேட்போம். அதற்கு அதிமுக தரப்போ, “எல்லாம் பழைய விசயம் தொடர்பாகத்தான்” எனக் கூறியுள்ளனர். அதன்பின் அவையில் இதுகுறித்து கேள்வி எழுப்பிய போது முதல்வர் இவ்வாறு பதிலளித்துள்ளார். எனவே, திட்டமிட்டபடி அவர்கள் இருக்கையை மாற்ற திமுக முன்பே முடிவு செய்திருக்கிறது.

இருக்கையை மாற்ற திமுக எந்த முயற்சியும் எடுக்காதபோது, ’ஓபிஎஸ்ஸுக்கு திமுக துணை நிற்கிறது. எனவே, திமுக பி-டீம்தான் ஓபிஎஸ்’ என அதிமுகவினர் குற்றச்சாட்டை முன்வைத்தனர். ஆனால், இப்போது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருக்கிறது. ஆனால், ஓபிஎஸ் பாஜகவிடம் நெருக்கமாக இருக்கிறார். மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறார். எனவே, இதைக் கருத்தில்கொண்டு திமுக அவர் இருக்கையை மாற்ற முடிவெடுத்துள்ளது. பாஜகவைச் சேர்ந்தவர்களுக்கு எந்த முன்னுரிமையும் இல்ல இந்த அவையில் இல்லை என்பதை வெளிக்காட்ட திமுக இப்படியான முடிவை எடுத்திருப்பதாகவும் தகவல் சொல்லப்படுகிறது.

இதனால், உதயகுமாருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அருகில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தில் இருக்கை மாற்றப்பட்டுள்ளது. இரண்டாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE