சென்னை: பாரத் பந்த் வெற்றிகரமாக தமிழகத்தில் நடக்க அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக கூட்டுவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி விவசாயிகளின் சாகுபடிக்கான அடக்க விலையோடு 50 சதவீதம் கூடுதலாக விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்குவேன் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியில் அமர்ந்தார் நரேந்திர மோடி. பிரதமர் மோடியின் ஆட்சி 10 ஆண்டுகளை நோக்கி நிறைவுபெறப் போகிறது.
ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றி விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம் வழங்குகிற வகையில் சட்டப் பாதுகாப்பு அளிக்காமல் மக்களவையில் அச்சட்டத்தை நிறைவேற்றினார். இதை எதிர்த்து பல்வேறு விவசாய அமைப்புகள் தலைநகர் டெல்லியில் ஓராண்டு காலம் கடும் வெயிலையும், குளிரையும் பொருட்படுத்தாமல் போராடினார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் உயிரிழந்தார்கள்.
அன்றைக்கு நடைபெறவிருந்த தேர்தலை மனதில் கொண்டு மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கூறி விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால் இதுவரை விவசாயிகளின் எந்த கோரிக்கையையும் மத்திய பாஜக அரசு நிறைவேற்றவில்லை. மத்திய பாஜக அரசின் விவசாயிகள் விரோதப் போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஹரியாணாவில் இருந்து நேற்று தலைநகரை நோக்கி 'டெல்லி சலோ' என்ற முழக்கத்துடன் விவசாயிகள் பேரணி புறப்பட்டது.
அந்த பேரணியை முடக்குகிற வகையில் உத்திரப் பிரதேசம், ஹரியாணா பாஜக அரசுகள் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் பேரணி செல்லவிடாமல் தடுக்க சிமெண்ட் தடுப்புகள், இரும்பு ஆணிகள், பின்னப்பட்ட இரும்பு வலைகள் ஆகியவற்றை பல இடங்களில் அமைத்து பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார்கள். அதையும் மீறி பெருந்திரளான விவசாயிகள் பேரணியில் திரண்டதை சகித்துக் கொள்ளாத பாஜக அரசு, கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி விவசாயிகள் மீது தடியடி நடத்தி பேரணியை சிதறடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டது.
இதன் மூலம் காவல் துறையினரின் அடக்கு முறையை விவசாயிகள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. விவசாய சங்கங்கள் தங்களது கோரிக்கைகளாக விளைபொருளுக்கு வழங்கப்படுகிற குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டப் பாதுகாப்பு, விவசாயிகளின் விளைபொருள் கொள்முதலில் கார்பரேட்டுகளை அனுமதிக்கக் கூடாது, பயிர் காப்பீட்டு திட்டம், கடன் நிவாரணம் , மாதந்தோறும் குறைந்தபட்ச நிவாரணத் தொகை என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.
இது குறித்து மோடி அரசு விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்த தயாராக இல்லை. பாஜக அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்கள் வருகிற பிப்ரவரி 16ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை நாடு முழுவதும் பாரத் பந்த் நடத்த வேண்டும் என அழைப்பு விடுத்திருக்கின்றன. இந்த அழைப்பை ஏற்றுக் கொண்டு அகில இந்திய காங்கிரஸ் தமிழ்நாடு காங்கிரசுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின்படி தமிழகத்தில் பாரத் பந்த் வெற்றிகரமாக நடைபெற 77 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
விவசாயிகள் போராட்டம் என்பது தலைநகர் டெல்லியோடு முடிவடைந்து விடாமல் அங்கே போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவாக இன்றைக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. விவசாயிகள் பிரச்சினை என்பது நாட்டிலுள்ள அனைத்து விவசாய பெருங்குடி மக்களின் நலனை உள்ளடக்கியதாகும்.
எனவே, மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் தங்கள் பகுதியில் உள்ள விவசாய அமைப்புகளோடு கலந்து பேசி அன்றைய தினம் அனைவரும் பச்சை துண்டை அணிந்து பாரத் பந்துக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை வெளியிட்டு, பொது மக்களிடம் விநியோகம் செய்ய வேண்டுகிறேன். பாரத் பந்த் வெற்றிகரமாக தமிழகத்தில் நடக்க அனைத்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்" என கே.எஸ்.அழகிரி கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago