சென்னை: "மத்திய அரசின் தொகுதி மறுவரையறை குறித்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை தமிழக பாஜக புரிந்துகொள்கிறது" என்று பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்; தொகுதி மறுவரையறை ஆகிய திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானங்கள் கொண்டு வந்தார். இந்த தீர்மானங்கள் மீதான விவாதத்தில் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், "தென் மாநிலங்கள் பல்வேறு சமூக மேம்பாட்டு நடவடிக்கைகளாலும், மக்கள் தொகையை கட்டுப்படுத்திய விதத்திலும் ஒரு சிறப்பான இடத்தை அடைந்துள்ளன.
வருங்காலத்தில் தொகுதிகள் எண்ணிக்கை குறையும்போது நமக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பதற்கான வாய்ப்பு மறுக்கப்படுமோ என்ற அச்சம் நியாயமானது. பாஜகவை பொறுத்தவரை இந்த தீர்மானத்தின் மீதான கவலையை, அக்கறையை புரிந்துகொள்கிறது. நிச்சயமாக எந்த இடத்தில் என்ன நடவடிக்கை வேண்டுமோ, தமிழக பாஜக முழுமையாக அந்த தீர்மானத்தை புரிந்துகொண்டு நடவடிக்கை எடுக்கும்." இவ்வாறு பேசினார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, "தீர்மானத்தை ஆதரிக்கிறீர்கள், அப்படித்தானே" என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த வானதி, "ஆதரிக்கிறோம் என்ற வார்த்தை சபாநாயகருக்கு வேண்டும்" என்று கூற அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய வானதி, "தீர்மானத்தின் கவலையை புரிந்துகொள்கிறோம். அதில் அக்கறை எடுத்துக்கொள்கிறோம். வேண்டிய இடத்தில் நாங்கள் பேசுகிறோம் என எல்லாத்தையும் சொல்லிட்டேன்." என்றார்.
மேலும், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற இரண்டாவது தீர்மானத்தை பொறுத்தவரை உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. 1952ல் இருந்து நடந்த பொதுத்தேர்தல்களை பார்த்தால், அன்று நடைபெற்ற தேர்தல் முறை சிறிது சிறிதாக காலத்துக்கேற்ப மாற்றம் அடைந்தது. இதையெல்லாம் நாம் கடந்துவந்தோம். மக்கள் தொகை, கால மாற்றம், தொழில்நுட்ப வசதி இவற்றுக்கேற்ப தேர்தல் நடைமுறைகள், தேர்தல் செலவினங்கள் இவற்றையெல்லாம் நாம் மாற்றிக்கொண்டிருக்கும் போது, ஒரே நாடு, ஒரே தேர்தல் என்கிற அவசியம் ஏன் வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஒவ்வொருவரும் ஒரு கற்பனை செய்துகொண்டு நாமாகவே அச்சத்துக்கு சென்று காலத்துக்கேற்ப நடக்க வேண்டிய மாறுதல்களை தடுப்பதாக இருக்கக் கூடாது. ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து இப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவுக்கு யார் வேண்டும் என்றாலும் யோசனை தெரிவிக்கலாம். அப்படி இருக்கும்போது உள்ளாட்சித் தேர்தலையும் ஒரே நாடு, ஒரே தேர்தலில் சேர்க்கப்போவதாக இன்றைய தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலையும் இணைத்துக் கொள்ள போவதாக எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை.
முழுவதுமாக நாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு மட்டுமே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தின் கீழ் தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் எழுப்பப்படும் சந்தேகங்கள் எல்லாம் உண்மை தான். அவை தான் அதிலிருக்கும் சவால்கள். ஒவ்வோர் ஆண்டும் பல மாநில தேர்தல் நடக்கக்கூடிய இந்தியா என்ற மிகப்பெரிய நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை சீர்திருத்தமாக பார்க்க வேண்டுமே தவிர யாரோ ஒருவர் ஆட்சி வருவதற்காக நடத்தப்படும் தேர்தல் கிடையாது. அது தேவையில்லாத பயம். தேவையில்லாத பயத்தின் அடிப்படையில் இந்த தீர்மானம் வருவதாக நாங்கள் நினைக்கிறோம்.
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது நெஞ்சுக்கு நீதி புத்தகத்திலேயே ஒரே நாடு, ஒரே தேர்தல் கொண்டுவருவதற்காக தனது ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்களையும் தமிழக அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே இந்த தீர்மானம் அவசியமற்றது என பாஜக சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்" என தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago