தமிழகத்தில் ரூ.19,100 கோடி மதிப்பில் புதிதாக 13 குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ஆய்வு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ரூ.19,110 கோடி மதிப்பில், புதிதாக 13 குடிநீர்த் திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் நடைபெற்ற விவாதம்:

ராஜேஷ்குமார் (காங்கிரஸ்): 2006-ல் நிறைவேற்றப்பட்ட சுனாமி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான குழாய்கள் கிள்ளியூர் தொகுதி வழியாக கன்னியாகுமரிக்கு செல்கிறது. இந்தக் குழாய் பழுதடைந்து உடைந்துள்ளதால், விபத்துகள் நேரிடுகின்றன. இவற்றை மாற்ற வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு: தமிழகத்தில் 60 இடங்களில் குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பத்தில் உள்ளேயும், வெளியிலும் சிமென்ட் பூச்சுடன் கூடிய இரும்புக் குழாய்கள் தற்போது அமைக்கப்படுகின்றன. வரும் பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கி, தேவைப்படின் உங்கள் பகுதிக்கு முன்னுரிமை அளித்து குழாய்கள் பதிக்கப்படும்.

துரை சந்திரசேகர் (திமுக): கொள்ளிடத்தில் 35 இடங்களில் ஆழ்குழாய்க் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. தடுப்பணை அமைத்தால், அப்பகுதியில் நீராதாரத்தைப் பாதுகாக்கலாம்.

அமைச்சர் கே.என்.நேரு: முதல்வருடனும், நீர்வளத் துறை அமைச்சருடனும் இதுகுறித்து பேசியுள்ளோம். ஆயிரம் இடங்களுக்கு மேல் தடுப்பணை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காவிரியிலும், கொள்ளிடத்தில் 244 இடங்களில் தண்ணீர் எடுக்கப்படுகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறையாமல் இருக்க, தடுப்பணை கட்ட வேண்டும். இந்த திட்டம் அரசின் கவனத்தில் உள்ளது. நிதிநிலைக்கேற்ப திட்டம் நிறைவேற்றப்படும்.

எஸ்.பி.வேலுமணி (அதிமுக): கோவையின் குடிநீர் தேவைக்காக சிறுவாணி அணையில் இருந்து தினசரி 72 மில்லியன் லிட்டருக்கு பதில் 38 மில்லியன் லிட்டரே தண்ணீர் வழங்கப்படுகிறது. இதனால் 25 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இதுகுறித்து விசாரித்தபோது, சிறுவாணி அணையில் இருந்து கேரள அரசு 35 மில்லியன் லிட்டர் குறைவாக நீர் வழங்குவதாக கூறுகின்றனர். கேரள அரசிடம் பேசி, நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: சிறுவாணியில் இருந்து கேரள அரசு 83 மில்லியன் லிட்டருக்குப் பதில், 38 மில்லியன் லிட்டரே தருகின்றனர். மழையில்லாத காரணத்தால் ஆழியாறில் இருந்து குறைவாக தண்ணீர் வருவதால், நாங்கள் சிறுவாணியில் தண்ணீர் தரவில்லை என்றனர்.

கடந்த முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தமிழக செயலாளர் மூலம் கேரள முதல்வரிடம் பேசி, தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, கோவை எம்.பி. நடராஜனிடம் கூறியுள்ளோம். அவரும் கேரள முதல்வருடன் பேசுவதாகத் தெரிவித்துள்ளார். சிறுவாணி தண்ணீரை பெறும் முயற்சியை அரசு மேற்கொண்டு வருகிறது. பில்லூர் 3-வது திட்டத்தில் 110 மில்லியன் லிட்டர் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. புதிதாக தினமும் 300 மில்லியன் லிட்டர் தரும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, கோவை நகருக்கு ஒரு நாள் விட்டு ஒருநாள் தண்ணீர் வழங்கப்படும்.

சதாசிவம்(பாமக) : மேட்டூர் தொகுதியில் தனி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

அமைச்சர் கே.என்.நேரு: திமுக ஆட்சியில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் குடிநீர் வாரியம் சார்பில் ரூ.7,148 கோடியில் 58 புதிய திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், 15,156 கோடியில் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு, மறு சீரமைப்புத் திட்டங்கள் ரூ.1,658 கோடியில் நடைபெற்று வருகின்றன. புதிதாக ரூ.19,110 கோடியில் 13 திட்டங்கள் ஆய்வில் உள்ளன. 4.35 கோடி மக்கள் பயன்பெற்று வந்த நிலையில், மேலும், 3 கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டமும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்