மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் மீண்டும் இடமாற்றம்: அதிகாரிகள் குழப்பம் @ மதுரை

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு, மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மாநகராட்சி அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்படுவதின் பின்னணியை அறிய முடியாமல் மாநகராட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதோடு நிர்வாகப் பணிகளும் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளராக இருந்தவர் அரசு. இவர், கடந்த அதிமுக ஆட்சியில் மதுரை மாநகராட்சி நகர் பொறியாளராக செல்வாக்குடன் இருந்தார். திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மேயராக இந்திராணி பொறுப்பேற்றப்பிறகு திடீரென்று இவர், கோவை மாநகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அரசு, மேயர் தரப்பினருக்கு நம்பிக்கைக்குரியவராகவும், அவரது ஆதரவாளராகவும் இருந்து வந்தார். அப்படியிருந்தும் அவர் மாற்றப்பட்டது அவருக்கு மட்டுமில்லாது மாநகராட்சி வட்டாரத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

அதன்பிறகு அவர் கோவையில் இருந்து மதுரை மாநகராட்சிக்கு வருவதற்கு பல்வேறு வகைகளில் முயற்சி செய்தார். மேயர் இந்திராணி தரப்பு ஆதரவுடன் மீண்டும் மதுரை மாநகராட்சி நகர் பொறியாளராக மாறுதலாகி வந்தார். அதோடு கண்காணிப்பு பொறியாளர் பதவி உயர்வும் அவரை தேடி வந்தது. அரசும் பழைய உற்சாகத்தோடு மாநராட்சி பொறியியல் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால், திடீரென்று அவருக்கு மேல் தலைமை பொறியாளராக ரூபன் என்பவர் நியமிக்கப்பட்டார்.

இதனால், கண்காணிப்பு பொறியாளர் அரசுவால் முன்புபோல் செல்வாக்குடன் செயல்பட முடியாமல் விரக்தியடைந்தார். ஆனால், மாநகர பொறியாளர் அலுவலகத்தின் பிரதான அறையில் அரசே இருந்து வந்தார். ரூபன் தலைமை பொறியாளராக இருந்தாலும் அவர் அமர்ந்து பணிபுரிய அறை கிடைக்காமல் இருந்து வந்தார். அதன்பிறகு ரூபனுக்கு மாநகராட்சி இரண்டாவது தளத்திலே ஓரமாக ஒரு மூலையில் தனி அறை தயார் செய்து கொடுக்கப்பட்டது. தலைமை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் இவருக்கும் இடையேயான பணிப்போர் நிடீத்தநிலையில் தற்போது மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் அரசு திடீரென்று வேலூர் மாநகராட்சி நகர பொறியாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரசுக்கு பதிலாக மதுரை மாநகராட்சி நகர் பொறியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். வண்டியூர் கண்மாய் பகுதியில் ரூ. 48 கோடி, ரூ.440 கோடியில் வைகை கரை பாதாளசாக்கடை திட்டம் போன்ற திட்டப்பணிகளை அரசு கவனித்து வந்தார். தற்போது அரசு சென்றுவிட்டதால் அந்த பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாநகராட்சி ஆணையாளர் மாற்றப்பட்ட அடுத்த சில நாளில் மாநகர கண்காணிப்பு பொறியாளர் அரசும் இடமாற்றப்பட்டுள்ளதால் மாநகராட்சி அலுவலகத்தில் குழப்பமும், அதிகாரிகள் மத்தியில் கலக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘கண்காணிப்பு பொறியாளர் அரசுக்கு ‘செக்’ வைக்கும் வகையிலே அவருக்கு மேல் ரூபன் என்பவரை தலைமைப்பொறியாளராக அமைச்சர் நேரு தரப்பினர் நியமித்தனர். இதனால், அரசு மனவருதத்தத்திலே செயல்பட்டு வந்தநிலையில் அவருக்கு மற்றொரு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தற்போது வேலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேயர் தரப்புக்கும், நேரு தரப்புக்கும் நடக்கும் மோதலில், அரசு பலிகடாக்கப்பட்டுள்ளார். மாநகராட்சியில் தற்போது யார் எதற்காக இடமாற்றப்படுகிறார்கள் என்ற அரசியல் பின்னணி தெரியாமல் மற்ற மாநகராட்சி அதிகாரிகள் குழப்பமடைந்து உள்ளனர். வளர்ச்சிப்பணிகளும், நிர்வாகப்பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE