வெயிலில் தாகத்தை தீர்க்க  குழாய் பொருத்திய மண்பானைகள் விற்பனை @ ஓசூர்

By கி.ஜெயகாந்தன்

ஓசூர்: ஓசூரில் கோடை வெயிலில் தாகம் தீர்க்க குழாய் பொருத்திய மண்பானைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.

கிருஷ்ணகிரி மாட்டம் - ஓசூரில் கோடைக்கு முன்னரே வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கிய நிலையில், பொதுமக்கள் இளநீர், நுங்கு, கரும்புச்சாறு போன்ற குளிர்ச்சியான பொருளை தேடிச் செல்கின்றனர். கோடை காலங்களில் முன்பு எல்லாம், மண்பானையில் தண்ணீர் வைத்து குடிப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், நாளுக்கு நாள் நாகரிக வளர்ச்சியால் குளிர்சாதனப் பெட்டியில் கிடைக்கும் அதிக குளிர்ச்சியான நீரால் மண்பானையின் மோகம் நாளடைவில் குறைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது உணவு பழக்க வழக்கத்தால், சிறுவயதிலியே பல்வேறு நோய்களுக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கம் மீண்டும் சிறுதானியம் போன்ற பழைய உணவு பழக்கத்தை தேடிச் செல்கின்றனர். அதேபோல் நம் பாரம்பரிய மண்பானையில் வெயில் காலங்களில் தண்ணீர் ஊற்றி வைத்து குடிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த முறையில் வெயில் காலம் தொடங்கிய நிலையில் ஓசூர், பாகலூர், உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் குழாய் பொருத்திய மண் பானைகளை விற்பனை செய்வதை ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து மண்பாண்ட தொழிலாளர்கள் கூறும்போது, ''முன்பெல்லாம் பொதுமக்கள் மத்தியில் மண்பானைக்கு போதிய வரவேற்பு இல்லை. ஆண்டுதோறும் பொங்கல் சீசனில் மட்டும் மண்பானைகள் விற்பனை செய்யப்பட்டு வந்ததது. ஆனால், தற்போது கோடை காலங்களில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு கேடு என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். மேலும், மண்பானை தண்ணீரை குடித்தால் உடலுக்குக் குளிர்ச்சி என்பது குறித்தும் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

பொங்கல் சீசனுக்கு பிறகு கோடை சீசனில், வீடு, பள்ளி, கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மண்பானைகளை தண்ணீர் ஊற்றி வைக்க வாங்கிச் செல்கின்றனர். இதனால் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதால் மண்பானையில் குழாய் பொருத்தி விற்பனை செய்வதால் இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. 10 லிட்டர் முதல் 20 லிட்டர் வரை ரூ.250-முதல் ரூ. 400 விரை விற்பனை செய்கிறது. குழாய் பொருத்திய மண்பானைகளை பொதுமக்கள் ஆர்டர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE