தமிழகத்தில் குழந்தைத் திருமணங்களைத் தடுக்க பள்ளிகளில் பாலியல் கல்வி தேவை: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: “குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை குறித்த பாடங்களை பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலமே குழந்தைத் திருமணங்களையும், குழந்தை மகப்பேறுகளையும் தடுக்க முடியும். இதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் கடந்த 34 மாதங்களில் மட்டும், 18 வயது நிறைவடையாத குழந்தைகள் 1448 பேருக்கு மகப்பேறு நடைபெற்றிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகள் கவலையளிக்கின்றன. வளர்ச்சியடைந்த மாநிலமாகக் கருதப்படும் தமிழ்நாட்டில் குழந்தைத் திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையே இந்த புள்ளிவிவரங்கள் உறுதி செய்கின்றன.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த வெரோனிகா மேரி என்ற நலவாழ்வு செயல்பாட்டாளர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற விவரங்களில், நெல்லை மாவட்டத்தில் 2021 ஜனவரி முதல் 2023 அக்டோபர் மாதம் வரையிலான 34 மாதங்களில் 1448 குழந்தை மகப்பேறுகள் நடைபெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இவற்றில் மிக அதிகமாக நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 347 குழந்தை மகப்பேறுகளும், மேலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், மானூர் ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் முறையே 88, 44 குழந்தை மகப்பேறுகளும் நடைபெற்றுள்ளன என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. குழந்தைகளே குழந்தைப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை நிச்சயமாக அதிர்ச்சியளிக்கும் ஒன்று தான். இதற்கான பின்னணி என்ன என்பதை கண்டு பிடித்து சரி செய்ய வேண்டியது அரசின் கடமை.

நெல்லை மாவட்டத்துடன் ஒப்பிடும் பொது தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்களும், அதன் விளைவாக குழந்தை மகப்பேறுகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 10 குழந்தைத் திருமணங்கள், அதாவது ஆண்டுக்கு 3650 குழந்தைத் திருமணங்கள் நடப்பதாக தமிழக அரசின் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குழந்தைத் திருமணங்கள் தமிழ்நாட்டில் காலம் காலமாக நடைபெற்று வரும் சூழலில், அவற்றை கட்டுப்படுத்துவதில் அரசு ஓரளவு வெற்றி பெற்றிருக்கும் நிலையில், முழுமையாக தடுத்து நிறுத்துவதில் இன்னும் வெற்றி கிடைக்கவில்லை; தமிழ்நாடு அரசும் அதில் தீவிரம் காட்டவில்லை.

குழந்தைத் திருமணங்களை முழுமையாக தடுக்க வேண்டும் என்றால், அதற்கான காரணங்களை முதலில் கண்டறிய வேண்டும். குழந்தைத் திருமணங்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை, பெண் குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துதல், புரிதல் இல்லாத காதல், குடும்பச் சூழ்நிலை, வேலைவாய்ப்பின்மை ஆகியவை தான் குழந்தைத் திருமணங்களுக்கான முக்கியக் காரணம் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் சிறுமிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் அவசர, அவசரமாக திருமணம் செய்து வைக்கின்றனர்; திருமணம் மற்றும் திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கை குறித்த புரிதல் இல்லாமலேயே ஏற்படும் காதல் ஆகியவை தான் குழந்தைத் திருமணத்திற்கான முக்கியக் காரணங்கள் என்று சமூக செயல்பாட்டாளர்கள் தெரிவிக்கும் கருத்துகளை புறக்கணித்து விட முடியாது.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் நிலவும் வறுமையும், வேலைவாய்ப்பின்மையும் தான் குழந்தைத் திருமணங்களுக்கான முக்கியக் காரணம் ஆகும். இந்த மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளிலும் வாழும் பழங்குடியினரும், பிற சமுதாய மக்களும் பொருளாதாரத்தில் மிகமிக பின்தங்கியவர்களாக உள்ளனர்.

உள்ளூரில் அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில், குடும்பத்தில் உள்ள தாயும், தந்தையும் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லும்போது தங்களின் பெண் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்வதோ அல்லது வீட்டில் தனித்து விட்டுச் செல்வதோ சாத்தியமில்லை. அதன் காரணமாகவே தங்களின் பெண் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்து விட்டு, வேலைக்கு செல்கின்றனர்.

இந்த மாவட்டங்களில் உள்ளூர் அளவிலான வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தாமல் குழந்தைத் திருமணங்களைத் தடுப்பது குறித்து நினைத்துக் கூட பார்க்க முடியாது என்பதை அரசு உணர வேண்டும்.

குழந்தைத் திருமணத்தின் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பாலியல் கல்வியை அறிமுகம் செய்தல், குழந்தைத் திருமணம், குழந்தை மகப்பேறு ஆகியவை குறித்த பாடங்களை பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்தல் ஆகியவற்றின் மூலமே குழந்தைத் திருமணங்களையும், குழந்தை மகப்பேறுகளையும் தடுக்க முடியும். இதை உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்