“சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன” - கிளாம்பாக்கம் குறித்து சட்டப்பேரவையில் விவாதம்

By செய்திப்பிரிவு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த பிரச்சினைகள் சரி செய்யப்பட்ட பிறகே பேருந்து நிலையம் திறக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.13) விவாதம் எழுந்தது. அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று கூறி விவாதத்துக்கு வித்திட்டார்.

செல்லூர் ராஜு கேள்விக்கு பதிலளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “கிளாம்பாக்கத்தை தேர்ந்தெடுத்தது அதிமுக ஆட்சியில்தான். அதிமுக ஆட்சியில் 30 சதவீதத்தில் விட்டுச் சென்ற பணியை முழுமைப்படுத்தி இன்னும் கூடுதல் வசதிகள் உடன் திறக்கப்பட்டது. பாரிமுனையில் இருந்து கோயம்பேடுக்கு பேருந்து நிலையத்தை மாற்றும்போது இதேபோன்றுதான் பிரச்சினைகள் எழுந்தன. ஒரு மாற்றம் ஏற்படும்போது அதை ஏற்றுக்கொள்ள தயக்கம் இருக்கும். ஆனால், கிளாம்பாக்கத்தை பொறுத்தவரை முழுவதுமாக மக்கள் ஏற்றுக்கொண்டு அங்கே பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் பிரச்சினைகளை எழுப்பவில்லை. பேருந்துகளில் பயணிக்காதவர்கள்தான் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டம் திமுக ஆட்சியில் மிகச் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட பேருந்துகளில் தற்போது 20 சதவீதம் பேருந்துகள் மாதவரத்தில் இருந்தும், 80 சதவீத பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்தும் இயக்கப்படுகிறது. வடசென்னை மக்களின் நலனுக்காக 20 சதவீதம் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்படுகிறது. கிளாம்பாக்கம் முழுவதுமாக செயல்பட துவங்கிவிட்டது." இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நவீன வசதிகள் அதிகம் உள்ளது. முதல்கட்டமாக திறந்துள்ள நிலையில் சிறு சிறு பிரச்சினைகள் இருப்பது இயல்பு. காலப்போக்கில் இதனை சரி செய்துவிடலாம். ஆனால், பேருந்து நிலையத்துக்கு கலைஞர் பெயரை வைத்ததை ஏற்றுக்கொள்ள மனமில்லாதவர்களே தொடர்ந்து பேருந்து நிலையம் குறித்து புகார் தெரிவித்து வருகிறார்கள். எனினும், பேருந்து நிலையத்துக்கு இன்னும் தேவைப்படுகின்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த 45 நாட்களில் சரி செய்துள்ளோம். இன்னும் பிரச்சினைகள் இருக்கிறது என்றால், யார் சொல்கிறார்களோ அவர்களை நேரடியாக பேருந்து நிலையத்துக்கு அழைத்துச் செல்கிறோம். குறைகளை தெரிவியுங்கள். அத்தனையும் இந்த அரசு சரி செய்யும்” என்று தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசுகையில், “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை அவசரப்பட்டு திறந்துவிட்டீர்கள். சிறு சிறு வசதிகளை சரி செய்து திறந்திருந்தால் பிரச்சினைகள் எழுந்திருக்காது. பயணிகளுக்கு தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்பதே எங்களுடைய எண்ணம்.” இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கையில், “அவசரப்பட்டு திறந்துவிட்டோம் என்கிறார்கள். அதிமுக ஆட்சி செய்ய தவறியதை திமுக ஆட்சி செய்துள்ளது. 2021 மார்ச் மாதமே கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணிகள் நிறைவடைய ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் காலகட்டத்துக்குள் 30 சதவீத பணிகளே அதிமுக ஆட்சியில் முடிந்திருந்தது. ஆனால், மீதமுள்ள 70 சதவீத பணிகளை முடித்ததுடன், மேலும் ரூ.100 கோடிக்கு பயணிகளுக்கு தேவையான வசதிகளையும் திமுக ஆட்சி செய்தது” என்றார். அமைச்சர் சேகர்பாபுவின் பேச்சின்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர்.

மீண்டும் எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, “2020ல் கரோனா காலம். இதனால் ஓராண்டு காலம் எந்தப் பணியும் மேற்கொள்ள இயலவில்லை. இதனால் குறிப்பிட்ட காலத்தில் பேருந்து நிலைய பணிகளை முடிக்கவில்லை. பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. நீங்கள் அதனை செய்தீர்கள். இப்போது கேட்பது சிறு, சிறு பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும் என்பதே. சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்து திறந்திருந்தால் இந்த விவாதமே எழுந்திருக்காது.” என்றார்.

முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்கையில், ”“சிறு சிறு பிரச்சினைகள் அல்ல, பெரிய பிரச்சினைகளே இருந்தன. அத்தனையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தை திறந்து வைத்துள்ளோம். இன்னும் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், நேரடியாக வாருங்கள் சொல்லுங்கள் தீர்த்து வைக்க காத்திருக்கிறோம். எனவே, இத்துடன் இந்த விவாதத்தை முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்