சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது: 4 நிமிடம் மட்டுமே உரையை படித்த ஆளுநர்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, உரையின் தொடக்கத்தை மட்டும் வாசித்து விட்டு மற்றவற்றை தவிர்த்தார். இதையடுத்து, அரசு தயாரித்த உரை மட்டும் பேரவை குறிப்பில் இடம்பெறும் வகையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டதால், பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் நேற்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூட்ட அரங்கில் தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அரங்கத்தில் வந்து அமர்ந்திருந்தனர். 9.56-க்கு சட்டப்பேரவை கட்டிடத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வந்தார். அவரை, பேரவைத்தலைவர் மு.அப்பாவு பேரவை செயலர் கி.சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து, ஆளுநருக்கு சென்னை காவல்துறையின் மரியாதை அளிக்கப்பட்டது.

அதன்பின், பேரவையில் 10 மணிக்கு முதலில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அதன் பிறகு, ஆளுநர், சட்டப்பேரவை தலைவர், முதல்வர், உறுப்பினர்கள், அலுவலர்கள், ஊடகத்தினர் மற்றும் பொதுமக்களுக்கு தமிழில் வணக்கம், வாழ்த்து தெரிவித்துவிட்டு உரையை வாசித்தார்.

அப்போது அவர், ‘‘2024-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் உரையை நிகழ்த்துவதை நான் பெரும்பேறாகக் கருதுகிறேன். அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதோடு, இப்புத்தாண்டில் நமது மாநிலத்தில் மகிழ்ச்சியும், வளமும், நலமும் தழைத்தோங்க எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் வளர்ச்சி குறித்த இந்த அரசின் உயர்ந்த நோக்கங்களை காலத்தை வென்ற திருவள்ளுவரின் குறள் ஒன்றை குறிப்பிட்டு உரையை தொடங்க விரும்புகிறேன்’’ என்றார். அதன்பிறகு, ‘பிணியின்மை செல்வம்’ எனத் தொடங்கும் 738-வது குறளை வாசித்தார்.தொடர்ந்து, உரை தொடர்பான சில கருத்துகளை தெரிவித்துவிட்டு 10.04 மணிக்கு அமர்ந்தார்.

இதையடுத்து, பேரவைத்தலைவர் மு.அப்பாவு, ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை முழுமையாக வாசித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் ஆற்றல் மையமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. இந்திய பொருளாதாரத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்கை அளிக்கிறது. 2022-23ம் ஆண்டில் 7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி மாநில பொருளாதாரம் 8.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. பணவீக்கமானது, நாட்டின் 6.65 சதவீதத்தை ஒப்பிடும்போது தமிழகத்தில் 5.97 சதவீதமாக உள்ளது. முதல்வரின் சீரிய தலைமையில், அரசின் அயராத முயற்சியால் குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் கண்டுள்ளது.

மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 4-வது இடத்தில் இருந்த தமிழகம் 2022-23-ல் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நிதி ஆயோக்கின் 2022-ம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலைக் குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் குஜராத்தை விஞ்சி, முதல் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

வலுவான பொருளாதாரம், சமூக இணைக்கத் தன்மை, மகத்தான மக்களாட்சி ஆகியவை, தமிழகம் தொடர்ந்து நாட்டிலேயே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக திகழ வழிவகுக்கின்றன.

மிக்ஜாம் புயல், தென் மாவட்ட எதிர்பாரா மழை பொழிவால் மாநிலத்தில் பொது சொத்துகள், கட்டமைப்புகளுக்கு பெரும் சேதம் ஏறபட்டுள்ளது. எனவே, தற்காலிக மற்றும் நிரந்தர சீரமைப்புக்காக தென் மாவட்டங்களுக்கு ரூ.18,214 கோடியும், சென்னை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ரூ.19,692 கோடியும் மத்திய அரசு, பேரிடர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக வழங்கும் என்று நம்புகிறோம்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 1.15 கோடிக்கும் அதிகமான மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. புதுமைப் பெண் திட்டத்தில் மாதம் 2.73 லட்சம் மாணவிகள் பயன்பெறுகின்றனர். முதல்வரின் காலை உணவுத் திட்டத்தால், மாணவர்களின் ஊட்டச்சத்து உயர்வதுடன், வருகைப்பதிவும், கற்றல் விளைவும் அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சமூக நல்லிணக்கத்தை பேணுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளதால், மத்திய அரசின் குடியுரிமை திருத்தச்சட்டத்தை தமிழகத்தில் ஒரு போதும் நடைமுறைப்படுத்த அனுமதிப்பதில்லை என்பதில் அரசு உறுதியாக உள்ளது. தேசிய பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பையும் ஒருங்கிணைத்து நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசின் மீது நம்பிக்கை வைத்துள்ள தமிழக மக்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், சமூக நீதி, மத நல்லிணக்கம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் மக்களாட்சியின் மாண்புகள் போன்றவற்றுக்கு நாட்டுக்கே வழிகாட்டியாக தமிழகம் தொடர்ந்து திகழும் வகையில் இந்த நம்பிக்கை வரும் காலங்களிலும் நிலைக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து, பேரவைத் தலைவர் அவையில் ஆளுநர் உரை குறித்த சில தகவல்களை தெரிவிக்க, அவற்றை ஆளுநரின் செயலர் கிர்லோஷ் குமார் ஆளுநரிடம் தெரிவித்தார். இந்நிலையில், அவை முன்னவர் துரைமுருகன் எழுந்து, ஆளுநர் பேசும்போது, அரசு அளித்த உரையை தவிர்த்து பேசியவற்றை நீக்கும் வகையிலான தீர்மானத்தை முன்மொழிந்தார். துரைமுருகன் பேசிகொண்டிருக்கும்போதே, ஆளுநர் பேரவையை விட்டு வெளியேறி, தேசிய கீதம் இசைக்கப்படும் முன்னதாகவே ராஜ்பவன் புறப்பட்டு சென்றார். தொடர்ந்து, அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், அவை நிகழ்வுகள் முடிவுபெற்றன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE