சீருடையில் கேமரா பொருத்தி கண்காணிக்கும் முறை சோதனை ஓட்ட முறையில் போக்குவரத்து போலீஸாருக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு வாகன ஓட்டிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீஸார் அபராதம் விதிக்கின்றனர். இதில், சில நேரங்களில் தகராறு ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் வேண்டும் என்றே தகராறில் ஈடுபடுவதாக போக்கு வரத்து போலீஸாரும், பணம் பறிக்கும் நோக்கத்தோடு போக்குவரத்து போலீஸார் அத்துமீறுவதாக வாகன ஓட்டிகளும் ஒருவர் மீது மற்றொருவர் பல நேரங்களில் குற்றம் சாட்டுகின்றனர்.
`சீட் பெல்ட்’ அணியாத விவகாரம் தொடர்பாக அநாகரீகமாக நடந்துகொண்ட போக்குவரத்து போலீஸாரை கண்டித்து திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கால்டாக்ஸி ஓட்டுநர் கடந்த மாதம் 24-ம் தேதி தரமணியில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் உதவி ஆய்வாளர் தாமரைச்செல்வன் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
போக்குவரத்து போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகளிடையே மோதலைத் தடுக்கும் வகையில் `பாடி ஓன் கேமராஸ்’ (Body worn Cameras) என்ற நவீன கேமராக்களைப் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் சோதனை ஓட்ட முறையில் அறிமுகம் செய்துள்ளனர்.
முதல்கட்டமாக சென்னையில் உள்ள வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு மண்டலங்களில் தலா ஒரு கண்காணிப்பு கேமரா என தேனாம்பேட்டை, மெரினா, கோயம்பேடு, பூக்கடை ஆகிய 4 போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த கேமராவை சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர் வாகன சோதனையின் போது தனது சீருடையின் முன் பகுதியில் பொருத்திக் கொள்ள வேண்டும்.
கேமராவின் சிறப்பு
போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா எதிரில் உள்ள வாகன ஓட்டிகளைத் துல்லியமாக படம் பிடிக்கும். மேலும் போலீஸார் மற்றும் வாகன ஓட்டிகளின் உரையாடல்கள் துல்லியமாக பதிவாகும். 10 முதல் 15 அடி தூரத்தில் நின்று பேசினால் கூட ஒலி, ஒளியை பதிவு செய்ய முடியும். 360 டிகிரி சுழலும். 15 நாட்கள் வரை தொடர்ந்து பதிவு செய்துகொள்ள முடியும். ஜிபிஎஸ் கருவியை கேமராவில் பொருத்திக்கொள்ள முடியும்.
விரைவில் கட்டுப்பாட்டு அறை அமைத்து கேமராவில் பதிவாகும் காட்சிகளை நேரடியாக கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இரவில் படம் பிடிக்க முடியாது. சம்பந்தப்பட்ட போக்குவரத்து பிரிவு போலீஸார் தான் தவறு செய்யும் காட்சிகள் கேமராவில் பதிவாவதை அறிந்து அதை அழித்தால் கூட அதை திரும்ப எடுக்கும் தொழில் நுட்பமும் கேமராவில் உள்ளது என சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அருண் தெரிவித்துள் ளார்.
சென்னையில் உள்ள 67 போக்குவரத்து ஆய்வாளர்கள், 248 போக்குவரத்து உதவி ஆய்வாளர்களுக்கு இந்த வகை கேமராக்களை விரைவில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விபத்து தகவல்களைச் சேகரிக்கும், சாலை மறியலை கண் காணித்து வரும் சென்னையில் உள்ள 15 போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாருக்கும் தலா ஒரு கேமரா வீதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி கள் தெரிவித்துள்ளனர்.
ஆதரவும் எதிர்ப்பும்
பூக்கடை போக்குவரத்து ஆய்வாளர் வேலு கூறுகையில், "கேமராவை வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் எங்களது சீருடையில் பொருத்தியுள்ளோம். இதனால், வாகன ஓட்டிகள் தேவை இல்லாத செயல்கள், வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்ப்பார்கள். இதனால், வாகன ஓட்டி களுக்கும் எங்களுக்கும் நல்லிணக்கம் ஏற்படும்" என்றார்.
குணசேகர் என்ற வாகன ஓட்டி கூறுகையில், "போலீஸார் எங்களது வாகனங்களை மடக்குவது, எங்களிடம் பேசுவது அனைத்தும் கேமராவில் பதிவாகும். இதனால், அவர்கள் எங்களிடம் கண்ணிய மாக நடந்து கொள்வார்கள். இதனால், நாங்கள் மரியாதையாக நடத்தப்படுவோம். தேவை இல்லாமல் பண வசூல் செய்யவும் முடியாது" என்றார்.
கல்லூரி மாணவி மித்திகா, மருத்துவர் தீபிகா கூறுகையில், "விதி மீறலில் ஈடுபடாமல் வாகனம் ஓட்டிச் செல்லும் எங்களை கேமராவில் படம் பிடிப்பது எங்களது தனிப்பட்ட சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உணர்கிறோம். ஒட்டு மொத்தமாக பார்த்தால் இது நல்லது தான்" என்றனர்.
டிஜிபி அலுவலக தொழில் நுட்ப பிரிவு அதிகாரிகளிடம் கேட்டபோது, ``டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவுப்படி சென்னையில் 4, திருச்சி, மதுரை, கோவையில் தலா 2 என தமிழகம் முழுவதும் 12 கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பயன்பாட்டைப் பொருத்து கேமராக்களை தமிழகம் முழுவதும் அதிக அளவில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். தேவைப்பட்டால் கேமராவில் தேவையான தொழில் நுட்பமும் புகுத்தப்படும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
24 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago