'ஆளுநர் உரையில் தமிழக அரசின் பொய்கள்' - பட்டியலிட்டு அண்ணாமலை விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: "சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு, தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஆளுநர் உரையில் இதுபோன்ற பொய்களை சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிக்கு வந்தபின், தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது சட்டப்பேரவையில் இல்லாமல் வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டு, பத்திரிகையாளர்களை சந்தித்து ஆளுநர் உரையை ஏன் புறக்கணித்தார்கள் என்று காரணம் சொன்னதை எல்லாம் தற்போது மறந்துவிட்டார்கள் போல் தெரிகிறது. ஆளுநர் உரையை புறக்கணிக்க அவர்கள் சொன்ன காரணங்களை உங்களுக்கு முதலில் நினைவூட்டிவிட்டு இந்த ஆண்டு ஆளுநர் உரையில் மிகுதியாக அடுக்கப்பட்ட பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் கடமை தமிழக பாஜகவுக்கு உள்ளது.

கடந்த காலங்களில்... - 2018-ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின், "நான் தொடக்கத்திலேயே சொன்னது மாதிரி இந்த ஆளுநர் உரை என்பது, மஸ்கோத் அல்வாவாக அமைந்துள்ளது" . 2019 ஆம் ஆண்டு - மு.க.ஸ்டாலின், "ஒரு அரசின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது வெட்கக்கேடான செயல். எனவே, அரசு எழுதி தந்திருக்கக் கூடிய Failure பேப்பர்களை ஆளுநர் சட்டமன்றத்தில் இப்போது படித்துக் கொண்டிருக்கிறார். எனவே, நாங்கள் அதை கண்டித்து, அவரது உரையை புறக்கணித்து, திமுக சார்பில் வெளிநடப்பு செய்திருக்கிறோம்".

2020-ஆம் ஆண்டு - மு.க.ஸ்டாலின், "ஆளுங்கட்சியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதென்று முடிவெடுத்து, அதை புறக்கணித்துவிட்டு வெளிநடப்பு செய்திருக்கிறோம்". இதேபோல், 2021-ஆம் ஆண்டும், ஆளுநர் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தீர்கள் என்பதை திமுகவினர் தற்போது மறந்துவிட்டனர்.

இப்படி கடந்த காலங்களில் ஆளுநர் உரையை புறக்கணித்தும், விமர்சித்தும் வெளிநடப்பு செய்த திமுக, ஆட்சிக்கு வந்தபின் பொய்களை தொகுத்து வழங்கிய ஓர் உரையை ஆளுநர் கட்டாயமாக வாசிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நகைமுரண். | முழுமையாக வாசிக்க > உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த அரசு - பேரவையில் நடந்தது என்ன?

ஆளுநர் உரையில், நாட்டிலேயே அந்நிதய முதலீடுகளை ஈர்க்கும் முதல் முகவரியாக தமிழகம் திகழ்கிறது, அதற்கு சான்று சமீபத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரம், திமுக ஆட்சிக்கு வந்தபின், தமிழகத்தில் தொழில்முனைவோர் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதை பலமுறை தமிழக பாஜக முன்வைத்தும் அதற்கு எந்த தீர்வும் காணாமல், வசூலில் மட்டுமே குறியாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

தவறான தகவல்: சமீபத்தில் நாங்கள் முன்வைத்த SGST refund குற்றச்சாட்டாக இருக்கட்டும், மின்சார கட்டணம் மற்றும் Demand Charge-ஐ உயர்த்தியதாக இருக்கட்டும், வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பும் நிலையாக இருக்கட்டும், திமுக ஆட்சிக்கு வந்தபின் அவர்களின் நடவடிக்கைகளால் முதலீடுகள் குறைந்துகொண்டே வருவது கண்கூடாக தெரிகிறது. கடந்த ஆண்டு உளுந்தூர்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு ஒரு காலணிகள் தயாரிப்பு நிறுவனத்துடன் திமுக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. அதன்பின் அந்த தொழிற்சாலை பணிகள் நடைபெறுவதாக எந்த செய்தியும் இல்லை. இவ்வாறே உள்ளது தமிழக அரசின் செயல்பாடு.

உலக முதலீட்டாளர் மாநாட்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கொண்டுவந்துள்ளதாக பெருமைப்படுவதற்கு முன்பு, நமது நாட்டில் முன்னணி மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாடுகளில் கொண்டு வந்த முதலீடுகள் எவ்வளவு என்பதாவது திமுகவுக்கு தெரியுமா? உத்தரப்பிரதேசம்-33 லட்சம் கோடி ரூபாய், குஜராத்-26 லட்சம் கோடி ரூபாய், கர்நாடகம் -10 லட்சம் கோடி ரூபாய், இவ்வாறு இருக்கையில், முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலம் என்பது தவறான தகவல் என்பதை திமுக உணர வேண்டும்.

sink-ஆகுற சென்னை: சென்னை மற்றும் தென் தமிழகத்தில் பலத்த மழையால் அதிகளவில் வெள்ளம் ஏற்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. இயற்கைப் பேரிடர்களை திறம்படக் கையாண்ட இந்த அரசுக்கு எனது பாராட்டுகள், என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மை நிலவரம், சிங்கார சென்னையை sink-ஆகுற சென்னையாக மாற்றியது திமுக. சமீபத்தில் பெய்த மழை திமுக அரசு சொன்ன பொய்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டது. நேர்மையான ஆட்சியாளராக இருந்திருந்தால், சொன்ன பொய்களுக்கும் செய்த தவறுகளுக்கும் திமுக பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.

கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே, 95% வடிகால் பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறியிருந்தனர். பத்து நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால், மழை நீர் வடிகால் பணிகள் முழுவதுமாக நிறைவடைந்துவிடும் என்றார் அமைச்சர் சேகர்பாபு. அதன்பின் 99 சதவீத பணிகள் நிறைவுபெற்றதாக கூறிய செய்திகளும் உள்ளன. மழைக்கு முன்பு 98 சதவீதம் வடிகால் பணிகள் நிறைவடைந்ததாகக் கூறிய அமைச்சர் கே.என்.நேரு, சென்னை வெள்ளக்காடாக மாறியபின், 42 சதவீத மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெற்றதாக கூறினார். 99 சதவீத பணிகள் நிறைவைடந்தது என்று சொன்ன நீங்கள் கடைசியில் மிக்ஜாம் புயலின்போது மக்களை தத்தளிக்கவிட்டதுதான் மிச்சம்.

இதுபோதாது என்று, தென் தமிழகத்தில் வெள்ளத்தால் மக்கள் தத்தளித்துக் கொண்டிருந்தபோது இண்டியா கூட்டணி கூட்டத்துக்கு புதுடெல்லி சென்றவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இதுதான் பேரிடரை திறம்பட கையாண்ட விதமா? இப்படி மக்களை அவதிக்குள்ளாக்கிவிட்டு தமக்கு தாமே பாராட்டி கொள்ளும் மனம் திமுகவினருக்கே உரித்தான குணம்.

20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எப்படி? - சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக தமிழகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், 2017-18 ஆம் நிதியாண்டில் சரக்கு மற்றும் சேவை வரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியபோது, மாநிலங்களின் வரி வருவாய் அதற்கு முந்தைய நிதியாண்டை ஒப்பிடும்போது 14 விழுக்காடு வளர்ச்சி காணவில்லை எனில், அந்த பற்றாக்குறையான வரிவருவாயை இழப்பீடு தொகையாக மத்திய அரசு 5 ஆண்டுகளுக்கு வழங்கும் என்று தெரிவித்திருந்தது. | முழுமையாக வாசிக்க > மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி பற்றாக்குறை: ஆளுநர் உரை 2024 முக்கிய அம்சங்கள்

சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்துவதற்கு முன்னர், தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி விகிதம்,2013-14 -3%;2014-15 -7%;2015-16 -2%; 2016-17 -7% என்று இருந்தது. சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்திய பின்னர், தமிழகத்தின் சொந்த வரிவருவாயின் வளர்ச்சி விகிதம், 2018-19 -14%; 2019-20 -10%;2020-21 -12% (கரோனா காலக்கட்டம்); 2021-22 -16% ; 2022-23 -24% ஆக மாறியுள்ளது. 2017 ஆண் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை சுமார் 27,959 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக கொடுத்தது மட்டுமல்லாது கரோனா காலக்கட்டத்தில் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க 14,336 கோடி ரூபாய் கடன் உதவியும் வழங்கியது மத்திய அரசு. சரக்கு மற்றும் சேவை வரியால் ஒரே ஆண்டில் 20,000 கோடி ரூபாய் வருவாய் இழப்பு எவ்வாறு ஏற்பட்டுள்ளது என்பதை திமுக அரசு தமிழக மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். இல்லையெனில், ஆளுநர் உரையில் இதுபோன்ற பொய்களை சேர்த்ததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.

கஞ்சா தலைநகரமாக... - சட்டம் ஒழுங்கு பராமரிப்பு மற்றும் மத நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு மாநில அரசு முன்னுரிமை வழங்குகிறது. என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், சட்டம் ஒழுங்கு எவ்வாறு உள்ளது என்பதை தாங்கள் தங்கியிருக்கும் மாளிகையில் இருந்து இறங்கி வந்து பொதுமக்களிடம் கேட்டால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உண்மை நிலை புரியும். கோவை தற்கொலைப்படை தாக்குதலை சிலிண்டர் வெடிப்பு என்று சொன்னவர்களுக்கு சட்டம் ஒழுங்கின் மீது எவ்வளவு அக்கறை இருக்கும் என்பது தெளிவாக புரிகிறது.

ஆட்சிக்கு வந்தபின் தமிழகத்தை கஞ்சா தலைநகரமாக மாற்றியதை தவிர என்ன சாதனை செய்தது திமுக. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தின் போது அமைச்சர் உட்பட அனைவரும் திரைக்கு பின்னால் மறைந்துகொண்டு வேடிக்கை மட்டும்தானே பார்த்தீர்கள். சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று தமிழகத்தின் விளையாட்டு அமைச்சர் உதயநிதி பேசிய பின்பும் மத நல்லிணக்கத்தைப் பற்றி பேச திமுக அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது.

என்ன பெருமை உள்ளது? - மகளிர் உரிமைத் திட்டத்தை செயல்படுத்தி தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை என்று தேர்தல் வாக்குறுதி வழங்கிவிட்டு, சுமார் 1.2 கோடி குடும்ப அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்காமல் ஏமாற்றியதால் என்ன பெருமை உள்ளது? இப்படி கொடுத்த என்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் கட்சி மேடைகளில் மட்டும் 99 சதவீத தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டோம் என்று கூசாமல் பொய் சொல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை ஆளுநர் உரையில் சேர்க்காமல் விட்டது உள்ளபடியே மகிழ்ச்சி.

புதுமைப் பெண் திட்டம் மூலமாக 2.73 லட்சம் பெண்கள் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை நிலவரம், தமிழகத்தில் இதற்கு முந்தைய ஆட்சியின்போது நடைமுறையில் இருந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக புதுமைப் பெண் என்ற திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. முந்தைய திட்டத்தை நிறுத்திவிட்டு புதிய திட்டம் அறிமுகப்படுத்த என்ன காரணம், என்று 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டப்பேரவையில் விவாதம் நடந்தபோது, புதுமைப்பெண் திட்டம் மூலமாக வருடத்துக்கு 6 லட்சம் மாணவிகள் பயனடைவர் என்று தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சரிபாதியைகூட நிறைவேற்றாதது எப்படி சாதனை ஆகும்? - இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த திட்டத்தில் பயனடைந்த மாணவிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 11 ஆயிரத்து 506 என்று சமீபத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், 2 வாரங்களு்ககுப் பின்னர், அந்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரமாக உயர்ந்துவிட்டது. இப்படி உண்மைக்குப் புறம்பான தகவலை ஆளுநர் உரையில் கொடுத்தது தவறு. அது ஒருபுறம் இருக்க, முந்தைய திட்டத்தை கைவிட தமிழக முதல்வர் சொன்ன உத்தேச பயனாளிகளில் சரிபாதியைகூட நிறைவேற்றாதது எப்படி சாதனை ஆகும்?

போஷன் திட்டத்தின் கீழ் ரூ.1,146 கோடி... - முதல்வரின் காலை உணவுத் திட்டம் நாட்டின் முதன்மை மாநிலம் என்று கூறப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில், பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு மட்டுமல்லாது, காலை உணவும் போஷன் திட்டத்தில் வழங்க வேண்டும் என்று 2020 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில், போஷன் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட்ட நிதி 1,146 கோடி ரூபாய்.

இந்தியாவில் பல மாநில அரசுகள் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து காலை மற்றும் மதிய உணவு திட்டத்தை பல ஆண்டுகளாக செயல்படுத்தி வருகிறார்கள். என்பதை தமிழக முதல்வர் புரிந்துகொள்ள வேண்டும். மத்திய அரசு நேரடியாக இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவச அரிசியும், ஒரு வேளை உணவுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கி வருவது அந்த தொண்டு நிறுவனங்களின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கர்நாடகம், ஆந்திரா மற்றும் மகராஷ்டிரா மாநிலங்களிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் செயல்பாட்டில் உள்ளதையும் அறிய முடிகிறது.

நம்பிக்கை இல்லை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான தமிழ்நாடு மேம்பாட்டுச் செயல் திட்டம் -2024 எனும் சட்ட முன்வடிவை நடப்புக் கூட்டத் தொடரின்போது அரசு அறிமுகப்பட்டுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், கடந்த ஆண்டு பட்டியல் சமுதாய மக்களுக்கு மத்திய அரசு வழங்கிய சுமார் 10,000 கோடி ரூபாய் நிதியை செலவிடாமல் வீணாக்கியதை தமிழக பாஜக கண்டித்தது.

அதன்பின்னர், பட்டியல் சமுதாய மக்களுக்கு SCSP மூலமாக வரும் நிதியை சரியாக செலவிட ஒரு சட்டமுன்வரைவு அறிமுகப்படுத்தப்படும் என்று திமுக அரசு சொல்லி சுமார் ஒரு ஆண்டாகிவிட்டது. இனியும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை மக்கள் நம்ப தயாராக இல்லை. திமுக தற்போது தெரிவித்துள்ள செயல் திட்டம் தடையின்றி செயல்படும் என்ற நம்பிக்கையும் எங்களுக்கு இல்லை.

குலசேகரன் கமிஷன்:சாதிவாரி மக்கள் கணக்கெடுப்பை நடத்துமாறு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில், கடந்த ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க குலசேகரன் குழுவை தமிழக அரசு அமைத்தது. ஆட்சி மாற்றத்துக்கு பிறகு, அறிக்கை சமர்ப்பிக்க தங்களுக்கு 6 மாத கால நீட்டிப்பு வேண்டும் என்று குலசேகரம் கமிசன் விடுத்த கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இவ்வாறு இருக்கையில், மத்திய அரசிடம் இதுதொடர்பாக எதற்கு வலியுறுத்துகிறீர்கள் என்பதே எங்கள் கேள்வி.

ஒரே ஒரு குறைதான் - தமிழக அரசின் இன்னுயிர் காப்போம் திட்டம் நாட்டின் முன்னோடி திட்டம் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மருத்துவமனையில் கொண்டு சேர்ப்பவர்களை, சிறந்த குடிமகன் என்று அங்கீகரித்து, அவர்களுக்கு 5,000 ரூபாய் வழங்கப்படும் என்று மத்திய அரசின் நெடுஞ்சாலைத்துறை 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அறிவித்தது. இந்த திட்டத்துக்கு திமுக அரசு சூட்டிய பெயர் இன்னுயிர் காப்போம்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கும் கடன்கள் மீதும் திமுக ஆளுநர் உரையில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. விவசாயிகளின் நலன் காக்க பல முன்னோடித் திட்டங்களை இந்த அரசு நடைமுறைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டபோது, திருவண்ணாமலை விவசாயிகள் மீது போடப்பட்ட குண்டாஸ் வழக்கும், தமிழக அரசின் முயற்சியால் 2023 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 243 மீனவர்களில் 242 விடுவிக்கப்பட்டதாக சொன்னபோது, மத்தியில் திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 80-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதும்தான் நினைவுக்கு வந்தது. | முழுமையாக வாசிக்க > சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ராஜ்பவன் விளக்கம்

திமுக அரசு தயாரித்த ஆளுநர் உரையில், ஒரே ஒரு குறைதான். கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தின் சாதனை இந்த ஆளுநர் உரையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இது இடம்பெறாமல் போனது உள்ளபடியே மிகப்பெரிய ஏமாற்றம்" என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்