உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த அரசு - பேரவையில் நடந்தது என்ன?

By நிவேதா தனிமொழி

2024-ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை கூடியது. இதில், தமிழக அரசின் சட்டப்பேரவை உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்திருப்பதும், அதற்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டுவந்ததும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு சட்டப்பேரவையில் தன் உரையைத் தொடங்கினார் ஆளுநர். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. மேலும், உரையில் உண்மைத்தன்மை மற்றும் தார்மிக கருத்துகளில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, தமிழக அரசின் உரையைப் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.

இப்படியாக, வெறும் 3 நிமிடங்களில் ஆளுநர் ஆர்.என்.ரவி தன் உரையை முடித்துக்கொண்டார். இதனால், அவையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அதன்பின் சபாநாயகர் அப்பாவு தமிழில் உரையைப் படித்தார். கடந்த முறை தமிழக அரசு வழங்கிய உரையில் சிலவற்றை நீக்கியும் சேர்த்தும் வாசித்திருந்தார் ஆளுநர். இதனால், அவர் உரையை நீக்க தீர்மானம் கொண்டு வந்தது திமுக அரசு. எனவே, ஆளுநர் அதற்கு எதிர்ப்புப் தெரிவித்து அவையைவிட்டு வெளியேறினார். இந்த நிலையில், இந்த ஆண்டு ஆளுநர் தமிழக உரையைப் புறக்கணித்துள்ளார்.

அதன்பின், அவைமுன்னவர் துரைமுருகன் தீர்மனத்தை வாசிக்கத் தொடங்கியதும் ஆளுநர் அவையிலிருந்து வெளியேறினார். அந்தத் தீர்மானத்தில், ‘ஆளுநர் ஒப்புதல் வழங்கிய உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏற்றப்படும். ஆளுநர் அவையில் பேசியது அவைக்குறிப்பில் நீக்கப்படும்” என சொல்லப்பட்டிருந்தது. அந்தத் தீர்மானம் அவையில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், தேசிய கீதத்துடன் அவை நடவடிக்கை முடிந்தது.

இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ”ஆளுநர் சொன்ன சொந்த கருத்துகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆளுநர் சட்டப்பேரவைக்கு வரும் முன்பு பேரவைத் தலைவரும் முதன்மைச் செயலாளரும் அவரை வரவேற்று ’காட் ஆஃப் ஹானர்’ (God of Honour) வழங்கும்போது முழுமையாக தேசிய கீதம் இசைக்கப்படுகிறது. பின் அவர் சட்டசபைக்கு அழைத்து வரப்படுகிறார். பேரவை விதி 176(1)-ன் படி சட்டசபை தொடங்கும்போது, முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவாக தேசிய கீதம் பாடப்படும்.

நாங்கள் உரையைக் கொடுக்கும்போது, அதை ஏற்றுக் கொண்டார். அவையில் அதைப் புறக்கணிக்கிறார். குறிப்பிட்டு ஒரு கருத்தில் முரண்பாடு என்றால் பரவாயில்லை; மொத்த உரையும் முரண்பாடு என சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இப்படியான மோதல் போக்கு காரணமாகத்தான் பல மாநிலங்களில் ஆளுநரைக் கூட சட்டப்பேரவைக்கு அழைப்பதில்லை. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் முதல்வராக இருந்தபோது, ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை அழைக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் மாண்பைக் கடைபிடிக்கிறோம். அதனால் கொள்கை வேறுபாடு இருந்தாலும் சட்டத்தின்படி ஆளுநர் அழைத்து சபையைத் தொடங்குகிறோம். ’பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தமிழகத்தின் பேரிடர் நிதி ஒதுக்க வேண்டும்’ என எண்ணம் தமிழக மக்களுக்கு இருக்கிறது. இதை ஆளுநரின் உரையில் வைக்க முடியுமா? அதனால், அவையில் நான் குறிப்பிட்டுப் பேசினேன்” என விளக்கமளித்தார்.

ஆளுநர் உரை சட்டசபையில் நீக்கப்பட்ட நிலையில், ராஜ்பவன் செய்திக்குறிப்பை வெளியிட்டது. அதில், “கடந்த 9-ம் தேதி உரை சட்டப்பேரவை உரை எங்களுக்கு கிடைக்கப் பெற்றது. அதில் பல கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பாக இருந்தது. மேலும், தமிழக அரசின் தனித்த அரசியல் கண்ணோட்டங்களும் அதில் இடம்பெற்றிருந்தது. மேலும், தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்னும் கோரிக்கை முன்வைத்தும் உரை திருப்பி அனுப்பப்பட்டது.

ஆனால், இந்தக் கோரிக்கைகளைத் தமிழக அரசு புறந்தள்ளியுள்ளது. பல பத்திகள் உண்மைக்குப் புறம்பாகவும், தார்மிக கருத்துகள் முரண்பாடாகவும் இருப்பதாகக் கூறி உரையைப் புறக்கணித்தார். இருப்பினும், சபாநாயகர் தமிழில் படிக்கும்போது அவையில் இருந்த ஆளுநரை கோட்சேவைப் பின்பற்றுவர் என சட்டப்பேரவை மாண்பை மீறும் வகையில் சபாநாயகர் பேசியதால் ஆளுநர் வெளிநடப்பு செய்தார்” என விளக்க அளித்துள்ளது. முழுமையாக வாசிக்க > சபாநாயகரின் அநாகரிக செயலால் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு: ராஜ்பவன் விளக்கம்

முன்னதாக, “சவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல” என்று ஆளுநர் ரவியை குறிப்பிட்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் சபாநாயகர் அப்பாவு பேசினார். | அதன் விவரம்: “சவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சற்றும் குறைந்தவர்கள் அல்ல...” - ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு பதிலடி

பின்னர், “ஆளுநருடைய சொந்த கருத்துகள் அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. பல மாநிலங்களில் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை. ஆனால் இங்கே நாம் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள்” என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார். அதன் விவரம் > “பல மாநிலங்கள் ஆளுநரை சட்டப்பேரவைக்கு அழைப்பதே இல்லை” - மரபு மீறல் புகார்களுக்கு சபாநாயகர் அப்பாவு விளக்கம்

இதனிடையே, "தென் மாநில ஆளுநர்களின் திருவிளையாடல் எல்லாம் அந்தந்த மாநில அரசுகளுக்கு எதிராக அமைந்திருக்கின்றன. இதையெல்லாம் இந்திய மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.ஜனநாயகத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்” என்று தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். அதன் முழு விவரம்: “தென் மாநில ஆளுநர்கள் திருவிளையாடல் நடத்துகிறார்கள்” - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி

கடந்த மாதம் கேரளாவில் சட்டசபைக் கூட்டத்தில் வெறும் 2 நிமிடங்களில் தன் உரையை முடித்துக்கொண்டு வெளியேறினார் ஆளுநர் ஆரிப் முகமது கான். இந்த நிலையில், தமிழக ஆளுநரும் உரையைப் புறக்கணித்திருக்கிறார். தமிழக ஆளுநர் அரசின் சட்டசபை உரையைப் புறக்கணிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடதக்கது.

முக்கிய அம்சங்கள்: மத்திய அரசு கடந்த 2022, ஜூன் 30-ம் தேதி முதல் சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியதன்‌ விளைவாக, ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழக அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்‌ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும்‌ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. | விரிவாக வாசிக்க > மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி பற்றாக்குறை: ஆளுநர் உரை 2024 முக்கிய அம்சங்கள்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 mins ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்