மத்திய அரசால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி பற்றாக்குறை: ஆளுநர் உரை 2024 முக்கிய அம்சங்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: மத்திய அரசு கடந்த 2022, ஜூன் 30-ம் தேதி முதல் சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியதன்‌ விளைவாக, ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழக அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்‌ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும்‌ என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் திங்கள்கிழமை கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார். தமிழக அரசின் உரையைப் படிக்காமல் புறக்கணித்திருந்தாலும் தொடர்ந்து ஆளுநர் அவையிலேயே அமர்ந்திருந்தார். அவர் புறக்கணித்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

அந்த உரையில், “கடந்த பத்தாண்டுகளில்‌ நமது நாட்டின்‌ பொருளாதார வளர்ச்சியின்‌ ஆற்றல்‌ மையமாக தமிழகம் உருவெடுத்துள்ளது. நாட்டின்‌ நிலப்பரப்பில்‌ 4 சதவீதத்தையும்‌, மக்கள்தொகையில்‌ 6 சதவீதத்தையும்‌ மட்டுமே கொண்டுள்ள நமது மாநிலம்‌, இந்தியாவின்‌ பொருளாதாரத்தில்‌ 9 சதவீதத்துக்கும்‌ அதிகமான பங்கினை அளிக்கிறது. 2022-23ஆம்‌ ஆண்டில்‌,7.24 சதவீத நிலையான தேசிய வளர்ச்சி வீதத்தை விஞ்சி, நமது மாநிலத்தின்‌ பொருளாதாரம்‌ 8:19 சதவீதமாக உயர்ந்துள்ளது.

நாட்டை விட தமிழகத்தில் வேகமான வளர்ச்சி: அதே வேளையில்‌,சராசரி பணவீக்கத்தைப்‌ பொறுத்தவரை, 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ நாட்டின்‌ 6.65 சதவீத பணவீக்கத்துடன்‌ ஒப்பிடும்போது, தமிழகத்தின்‌ பணவீக்கம்‌ 5.97 சதவீதமாக உள்ளது. நாட்டைவிட தமிழகம் வேகமாக வளர்ச்சியடைவதோடு, அதே காலகட்டத்தில்‌ பணவீக்கத்தைக்‌ கட்டுப்படுத்துவதிலும்‌ நமது மாநிலம்‌ திறம்படச்‌ செயல்பட்டு வருவதை இது மெய்ப்பிக்கிறது.

முதல் மாநிலமாக தமிழகம்: தமிழக முதல்வரின் சீரிய தலைமையின்‌ கீழ்‌, இந்த அரசின்‌ அயராத முயற்சியின்‌ விளைவாக, குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சியினை தமிழகம் கண்டுள்ளது. மின்னணுப்‌ பொருட்கள்‌ ஏற்றுமதியில்‌ ஏற்பட்டுள்ளபெரும்‌ முன்னேற்றத்தினால்‌, 2021-22 ஆம்‌ ஆண்டில்‌ நான்காம்‌ இடத்திலிருந்த நமது மாநிலம்‌, 2022-23 ஆம்‌ ஆண்டில்‌ நாட்டிலேயே முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. நிதி ஆயோக்கின்‌ 2022ஆம்‌ ஆண்டு ஏற்றுமதித்‌ தயார்நிலைக்‌ குறியீட்டின்படி, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும்‌ குஜராத்‌ ஆகிய மாநிலங்களை விஞ்சி, நாட்டிலேயே முதல்‌ மாநிலமாகத்‌ தமிழகம் திகழ்கிறது.

வலுவான பொருளாதாரம்‌. சமூக இணக்கத்‌ தன்மை மற்றும்‌ மகத்தான மக்களாட்சி ஆகியவையே, நமது மாநிலம்‌ தொடர்ந்து நாட்டிலேயே அந்நிய முதலீடுகளை ஈர்க்கும்‌ முதல்‌ முகவரியாகத்‌ திகழ்வதற்கு வழிவகுக்கின்றன. கடந்த ஜனவரி 7 மற்றும்‌ 8 ஆம்‌ தேதிகளில்‌ சென்னையில்‌ வெற்றிகரமாக நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள்‌ மாநாடு அதற்கு ஒரு சான்றாகும்‌.

தமிழகத்தின்‌ தலைசிறந்த தொழில்‌ சூழலமைப்பையும்‌ அதன்‌ எதிர்காலத்துக்கேற்ற வகையிலான மனிதவளத்தையும்‌ உலகுக்குப்‌ பறைசாற்றும்‌ வகையில்‌ இந்நிகழ்வு அமைந்தது. முப்பதுக்கும்‌ மேற்பட்ட நாடுகளிலிருந்து புகழ்பெற்ற அறிஞர்கள்‌, முன்னணி நிறுவனங்களின்‌ மூத்த நிர்வாகிகள்‌, கொள்கை வகுப்பாளர்கள்‌ உள்ளிட்ட பலர்‌பங்கேற்ற இந்நிகழ்வு தமிழகத்தை உலகளவில்‌ தலைமை நிலைக்கு உயர்த்துவதற்கு உகந்த தளமாக அமைந்தது.

உலக முதலீட்டாளர்கள்‌ மாநாட்டின்போது, 14.54 லட்சம்‌ நபர்களுக்கு நேரடி வேவேலைவாய்ப்புகளை உருவாக்கும்‌ வகையில்‌, முன்‌ எப்போதும்‌ இல்லாத அளவிலான, மொத்தம்‌ 6.64 லட்சம்‌ கோடி ரூபாய்‌ முதலீடுகள்‌ செய்வதற்கு, சாதனை படைக்கும்‌ வகையில்‌ நிறுவனங்களுடன்‌ தமிழக அரசு 631 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும்‌, இந்நிகழ்வில்‌ தமிழக முதல்வர் 1டிரில்லியன்‌ டாலர்‌ தமிழ்நாடு பொருளாதாரம்‌ குறித்த தொலைநோக்கு ஆவணத்தை வெளியிட்டார்‌. இந்த உயரிய இலக்கை அடைவதற்குத்‌ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்‌ நமது அரசு மேற்கொண்டு வருகிறது.

இயற்கைப் பேரிடர்கள்: நமது மாநிலம்‌. கடந்த சில ஆண்டுகளில்‌ பல பேரழிவுகளைச்‌ சந்தித்தபோதிலும்‌, பொருளாதார வளர்ச்சி மற்றும்‌ சமூக முன்னேற்றம்‌ ஆகிய இரண்டிலும்‌ குறிப்பிடத்தக்க சாதனையை அடைந்துள்ளது என்பது பாராட்டத்தக்கது. சென்னை மற்றும்‌ அதன்‌ சுற்றுவட்டாரப்‌ பகுதிகள்‌ எதிர்கொண்ட மிக்ஜாம்‌ புயல்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ வரலாறுகாணாத மழையால்‌ ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளால்‌ மாநிலம்‌ அடுத்தடுத்து இரண்டு பெரும்‌ இயற்கைப்‌ பேரிடர்களைச்‌ சந்தித்தது.

மிக்ஜாம்‌ புயல்‌ காரணமாக சென்னை,திருவள்ளூர்‌, செங்கல்பட்டு மற்றும்‌ காஞ்சிபுரம்‌ மாவட்டங்களில்‌ 44 மணி நேரம்‌ வரலாறு காணாத அளவில்‌ தொடர்ந்து பெருமழை பெய்தது. வெள்ள நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள முழு அரசு இயந்திரமும்‌ போர்க்கால அடிப்படையில்‌ முடுக்கிவிடப்பட்டு, நிவாரணப்‌ பணிகளை தமிழக முதல்வர் தலைமையிலான அரசு மேற்கொண்டது. திறமையான திட்டமிடல்‌, மற்றும்‌ செம்பரம்பாக்கம்‌ நீர்த்தேக்கத்தின்‌ நீர்‌ மேலாண்மை போன்றவற்றால்‌ மனித உயிரிழப்புகள்‌ மற்றும்‌ சொத்து இழப்புகள்‌ பெருமளவில்‌ குறைக்கப்பட்டுள்ளன.

எனினும்‌ பலத்த மழையால்‌ அதிகளவில்‌ வெள்ளம்‌ ஏற்பட்டதால்‌, லட்சக்கணக்கான மக்கள்‌ தங்கள்‌ உடைமைகள்‌ மற்றும்‌ வாழ்வாதாரத்தை இழக்க நேரிட்டது. அரசால்‌ மேற்கொள்ளப்பட்ட துரித நிவாரணம்‌ மற்றும்‌ சீரமைப்புப்‌ பணிகளின்‌ விளைவாக பெரும்பாலான பகுதிகள்‌ ஒரு சில நாட்களிலேயே இயல்புநிலைக்குத்‌ திரும்பின. மிக்ஜாம்‌ புயலின்‌ பாதிப்பில்‌ இருந்து நமது மாநிலம்‌ மீள்வதற்கு முன்னரே, தென்‌ மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும்‌ கன்னியாகுமரி ஆகியவை வரலாறு காணாத கனமழையால்‌ ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால்‌ மிகவும்‌ பாதிக்கப்பட்டன. இப்பகுதிகளில்‌ ஏற்பட்ட வெள்ளப்‌ பெருக்கினால்‌ கணிசமான அளவில்‌ உயிரிழப்புகள்‌ ஏற்பட்டு, உடைமைகளும்‌ சேதமடைந்தன.

மக்களின்‌ துயர்‌ நீக்கும்‌ பொருட்டு, தமிழக முதல்வர்‌, 1487 கோடி ரூபாய்‌ செலவில்‌, சென்னை மற்றும்‌ அதன்‌ சுற்று வட்டாரப்‌ பகுதிகளில்‌ பேரிடரால்‌ பாதிக்கப்பட்ட 24.25 லட்சம்‌ குடும்பங்களுக்கு தலா 6,000 ரூபாய்‌ ரொக்கம்‌ உள்ளிட்ட பல நிவாரண உதவிகளை அறிவித்தார்‌. மேலும்‌, திருநெல்வேலி மற்றும்‌ தூத்துக்குடி மாவட்டங்களில்‌ பெரிதும்‌ சேதமடைந்த பகுதிகளில்‌, பாதிக்கப்பட்ட 6.63 லட்சம்‌ குடும்பங்களுக்கு ரொக்க நிவாரண உதவியாக தலா 6,000 ரூபாயும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்‌ தென்காசி மாவட்டங்களில்‌ சேதமடைந்த பகுதிகளிலுள்ள, பாதிக்கப்பட்ட சுமார்‌ 14.31 லட்சம்‌ குடும்பங்களுக்கு, தலா 1,00௦ ரூபாயும்‌, 541 கோடி ரூபாய்‌ செலவில்‌ வழங்கப்படும்‌ என அறிவித்தார்‌.

மிக்ஜாம்‌ புயல்‌ மற்றும்‌ தென்‌ மாவட்டங்களில்‌ வரலாறு காணாத எதிர்பாரா மழைப்பொழிவினால்‌ மாநிலத்தின்‌ பொதுச்‌ சொத்துகள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளுக்கு பெருமளவில்‌ சேதம்‌ ஏற்பட்டுள்ளது. எனவே, தற்காலிக மற்றும்‌ நிரந்தர மறுசீரமைப்புப்‌ பணிகளுக்காக தென்‌ மாவட்டங்களுக்கு 18,214 கோடி ரூபாயும்‌, சென்னை மற்றும்‌ அதனைச்‌ சுற்றியுள்ள பகுதிகளுக்கு 19,692 கோடி ரூபாய்‌ நிதி தேவைப்படுகிறது.

இப்பேரழிவின்‌ பாதிப்புகள்‌ குறித்து மத்திய அரசிடம்‌ வழங்கப்பட்ட இரண்டு விரிவான அறிக்கைகளின்‌ அடிப்படையிலும்‌ மத்திய அரசு அலுவலர்‌ குழுவின்‌ நேரடி ஆய்வின்‌ அடிப்படையில்‌ தேசியப்‌ பேரிடர்‌ நிவாரண நிதியில்‌ இருந்து உடனடியாக மத்திய அரசு நிதி வழங்கும்‌ என்று நம்புகிறோம்‌. இயற்கைப்‌ பேரிடர்களைத்‌ திறம்படக்‌ கையாண்ட இந்த அரசுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. எதிர்வரும்‌ மாதங்களில்‌ நமது மாநிலமும்‌ அதன்‌ பொருளாதாரமும்‌, இந்த பாதிப்புகளிலிருந்து வலிமையுடன்‌ மீண்டெழும்‌ என்று உறுதியாக நம்புகிறேன்‌.

இயற்கைப்‌ பேரிடர்களால்‌ ஏற்பட்ட பெரும்‌ நிதிச்சுமை நிலவும்‌ நிலையில்‌, சரக்கு மற்றும்‌ சேவை வரி (ஜிஎஸ்டி) நடைமுறைப்படுத்தப்பட்டதைத்‌ தொடர்ந்து, மாநிலங்களின்‌ நிதி ஆதாரங்களைத்‌ திரட்டும்‌ திறனும்‌ வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் பற்றாக்குறை: மாநிலங்கள்‌ தங்களது வரிவிதிக்கும்‌ அதிகாரங்களை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டபோது, சரக்கு மற்றும்‌ சேவை வரிமுறையின்‌ முந்தைய காலத்துக்கு இணையான வருவாய்‌ எட்டப்படும்‌ வரை மாநிலங்களுக்குப்‌ போதுமான இழப்பீடு வழங்கப்படும்‌ என்ற நியாயமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால்‌, மத்திய அரசு 30.06.2022 அன்று சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீட்டு முறையை நிறுத்தியயன்‌ விளைவாக, ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழக அரசுக்கு ஏறத்தாழ 20,000 கோடி ரூபாய்‌ பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த சரக்கு மற்றும்‌ சேவை வரி இழப்பீட்டு முறையை மத்திய அரசு தொடர்ந்திட வேண்டும்‌ என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு மீது அதிருப்தி: இந்நிதி நெருக்கடிக்கு இடையே, சென்னை மெட்ரோ ரயில்‌ இரண்டாம்‌ கட்டத்‌ திட்டப்‌ பணிகளுக்கு தனது பங்களிப்பை வழங்குவதாக உறுதியளித்திருந்த மத்திய அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இத்திட்டத்தில்‌ மத்திய அரசும்‌ தமிழக அரசும்‌ 50:50 என்ற விகிதத்தில்‌ சமபங்களிப்பு இருக்கும்‌ என்ற அடிப்படையில்‌ 63,246 கோடி ரூபாய்‌ மதிப்பீட்டில்‌ ஒப்புதல்‌ அளிக்கப்பட்டது. இத்திட்டம்‌, 2021-22 ஆம்‌ ஆண்டின்‌ மத்திய வரவு-செலவுத்‌ திட்ட உரையில்‌ மத்திய நிதியமைச்சரால்‌ அறிவிக்கப்பட்டு, மத்திய உள்துறை அமைச்சரால்‌ தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால்‌, 17.08.2021 அன்று திட்ட முதலீட்டு வாரியம்‌ ஒப்புதல்‌ அளித்தும்‌ இத்திட்டத்துக்கு மத்திய அரசால்‌ ஒப்புதல்‌ அளிக்கப்படவில்லை.

சென்னை மெட்ரோ ரயில்‌ திட்டத்தின்‌ இரண்டாம்‌ கட்டத்தின்‌ கருத்துரு நிலுவையில்‌ வைக்கப்பட்டுள்ள நிலையில்‌,இதே காலகட்டத்தில்‌ பிற மாநிலங்களின்‌ திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியுதவி வழங்க ஒப்புதல்‌ அளித்துள்ளது மேலும்‌ வருத்தத்தை அளிக்கின்றது. இந்த நியாயமற்ற அணுகுமுறையின்‌ விளைவாக, இரண்டாம்‌ கட்டத்துக்கான முழுச்‌ செலவினமும்‌ மாநில அரசால்‌ அதன்‌ வரவு-செலவுத்‌ திட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. இதனால்‌. மாநில நிதிநிலையில்‌ கடுமையான நெருக்கடி ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு இத்திட்டத்துக்கான ஒப்புதலை விரைவில்‌ அளிக்குமாறு வலியுறுத்துகிறோம்‌. இத்தகைய சவால்களுக்கு இடையேயும்‌ மக்களின்‌ குறைகளை உடனுக்குடன்‌ களைந்திடும்‌ திறன்மிகு நிர்வாகத்தை வழங்கிட இந்த அரசு உறுதியாக உள்ளது” என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, மக்களுடன் முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம், நான் முதல்வன், மக்களைத் தேடி மருத்தும், இல்லம் தேடி கல்வி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடர்பான அரசின் சாதனைகள் குறித்து ஆளுநர் உரையில் விவரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE