டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள வெற்றி துரைசாமி குடும்பத்திடம் ரத்த மாதிரிகள் சேகரிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக வெற்றி துரைசாமி குடும்பத்தினரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை நிறுவனருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி (45). இவர், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த நண்பர் கோபிநாத்துடன் சில நாட்களுக்கு முன்பு இமாச்சல பிரதேசத்துக்கு சுற்றுலா சென்றிருந்தார். கடந்த 4-ம் தேதி மாலை கசாங் நளா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச்.5) சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் நிலை தடுமாறி, சட்லெஜ் ஆற்றில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில், கார் ஓட்டுநர் தன்ஜின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோபிநாத் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், காரில் பயணித்த வெற்றி துரைசாமியை காணவில்லை. கடந்த 8 நாட்களாக அவரை தேடும் பணி நடந்து வருகிறது.

இதற்கிடையே, விபத்து நடந்த பகுதியில் இருந்த ரத்தக் கறை, திசுக்களை இமாச்சல் போலீஸார் சேகரித்து, டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். அது வெற்றி துரைசாமியின் ரத்தக் கறைதானா என்பதை உறுதிசெய்ய, அவரது குடும்பத்தினரிடம் டிஎன்ஏ பரிசோதனை மேற்கொள்ள போலீஸார் திட்டமிட்டனர்.

இதையடுத்து, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வெற்றி துரைசாமி குடும்பத்தினரிடம் நேற்று ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இந்த மாதிரிகள் மற்றும் இமாச்சலில் சட்லெஜ் ஆற்றில் கிடைத்த திசுக்களின் டிஎன்ஏ ஒப்பீடு செய்யப்பட்ட பிறகே, அது வெற்றி துரைசாமியின் ரத்தக் கறை, திசுக்களா என்பது தெரியவரும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE