கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அரசின் தோல்வியை காட்டுகிறது: மத்திய அமைச்சர் முருகன் விமர்சனம்

By செய்திப்பிரிவு

சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் திமுக அரசின் தோல்வியை காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திமுக அரசு தோல்வி அடைந்த அரசு என்பதை கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விவகாரம் காட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறது. கோயம்பேடு பேருந்து நிலையத்தை அவசர அவசரமாக மூடியதற்கான காரணத்தை திமுக அரசு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும். தினந்தோறும் ஆர்ப்பாட்டம், போராட்டம் என மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் நிலையை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

நாடாளுமன்றத்தில் தவறான தகவலை தெரிவிக்கிறீர்கள் என டி.ஆர்.பாலுவை சொன்ன ஒரே காரணத்துக்காக அவர் என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார்.

இதுவரை தமிழகம் முழுவதும் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாமல், சுமூகமாக நடந்தது. ஆனால், சென்னையில், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட சில காரணங்களை கூறி அனுமதி மறுத்திருக்கின்றனர். அதற்கும் நாங்கள் ஒத்துழைப்பு கொடுத்து, பொதுக்கூட்டம் மட்டும் நடத்த அனுமதி பெற்றிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE