சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய பேருந்து வசதிகள் இல்லாததால் அவதிக்குள்ளான பயணிகள் 2-வது நாளாக பேருந்துகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கடந்த டிச.30-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே, பயணிகளுக்கான வசதிகள் முழுமையாக ஏற்படுத்தி தரப்படவில்லை என்றும், இதனால் மக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில் கடந்த 9-ம் தேதி (வெள்ளிக்கிழமை) வார இறுதி நாளையொட்டி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. ஆனால் அனைத்து பேருந்துகளும் முன்பதிவு செய்து நிரம்பி வழிந்ததால், முன்பதிவு செய்யாதவர்களை ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படும் நிலையில் பேருந்துகளுக்காக பயணிகள் பல மணி நேரம் காத்து நின்றனர்.
நேரம் அதிகரிக்க பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருந்த நிலையில், நள்ளிரவில் பேருந்துகள் இன்றி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்தும் விடியவிடிய மறியல் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.
» ‘திமுக ஆட்சி மிக மோசமானது’ - பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா @ சென்னை
» ''தமிழகத்தில் மக்களின் 60% வரி பணம் வெளியே சென்றுவிடுகிறது'': ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு
இதனால் சுமார் 2 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து முடங்கிய நிலையில், அதிகாரிகள் பயணிகளை சமாதானப்படுத்தி, கூடுதல் பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். மறுபுறம் பேருந்துகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள், முதியோர் என பலரும் நடைமேடைகளிலும், பேருந்து நிறுத்தங்களிலும் படுத்து உறங்கினர்.
இதையடுத்து 10-ம் தேதி கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் பேருந்து நிலையத்தில் இரவு 10 மணி வரை பேருந்துகள் நிரம்பி காணப்பட்டன. அதன் பின்னர் படிப்படியாக பேருந்துகள் குறைந்த நிலையில், மக்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்தது. உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆத்தூர், சேலம் போன்ற பகுதிகளுக்குச் செல்ல பேருந்துகளை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
ஆனால், போதிய பேருந்துகள் இல்லாததால் அதிருப்தி அடைந்த 300-க்கும் மேற்பட்ட பயணிகள் நள்ளிரவு முதல் அதிகாலை வரை மற்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். சிலர் நெடுஞ்சாலையில் சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேச்சுவார்த்தை நடத்தி மாற்று பேருந்துகள் மூலம் சொந்த ஊர்களுக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலையிலும் அநேக மாவட்டங்களுக்கு போதிய பேருந்துகள் இல்லை எனக்கூறி பயணிகள் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் சிவசங்கரிடமும், அதிகாரிகள் அலட்சியமாக பதில் சொல்வதாக பயணிகள் குற்றம்சாட்டினர். கூடுதல் பேருந்துகளை இயக்கவும் வலியுறுத்தினர்.
கோயம்பேட்டில் இருந்து நேரடியாக பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டபோது பிரச்சினைகள் எதையும் சந்திக்கவில்லை என்றும், தற்போது மாறிமாறி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் எனவும் கூறினர். மேலும், கிளாம்பாக்கத்தில் உணவகங்கள் குறைவாக இருப்பதோடு விலையும் அதிகமாக உள்ளதாக பயணிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சிஎம்டிஏ அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அவர்கள் பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் கூறும்போது, வழக்கமான நாட்களில் 1,097 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், 9,10 தேதிகளில் முறையே 1,592, 1,746 பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுராந்தகம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக பிப்.9-ம் தேதி பேருந்துகள் கிளாம்பாக்கத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டது. பொதுவாகவே இரவு 12 முதல் அதிகாலை 4 மணி வரை புறநகர் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.
நள்ளிரவு நேரத்தில் வருவோர் குறித்து ஆய்வு செய்யப்பட வேண்டும். கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இல்லை என செய்தி பரப்புகின்றனர். இவ்வாறு தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவது கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அமைச்சர் சிவசங்கர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago