மோசமான ஆட்சியால் தமிழகம் சீரழிந்து கொண்டிருக்கிறது: சென்னை பொதுக்கூட்டத்தில் ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: மோசமான ஆட்சி நடப்பதால் தமிழகம் சீரழிந்து கொண்டிருப்பதாக சென்னையில் நடந்த கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டினார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் 200-வது சட்டப்பேரவை தொகுதியாக துறைமுகம் தொகுதியில் நடைபயண பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை சென்னை வந்தார்.

அவரை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக பாஜக மக்களவை தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக் கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம், யாதவ மகாசபை மற்றும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் தலைவருமான தேவநாதன் யாதவ், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

கூட்டணி குறித்து ஆலோசனை: இதைத் தொடர்ந்து விமான நிலையத்திலேயே பாஜக கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஜெ.பி.நட்டா ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து அங்கிருந்து காரில் பொதுக்கூட்டம் நடைபெறும் தங்கசாலைக்கு ஜெ.பி.நட்டா வந்தார். கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு அப்பகுதியில் உள்ள ராமர் கோயிலில் நட்டா சுவாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கூட்டத்தில் ஜெ.பி.நட்டா பேசியதாவது:

தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு என்றுமே தனி பாசம் உண்டு. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் தமிழகத்தை பற்றியும், தமிழின் பெருமைகள் பற்றியும் பேசுவது பிரதமர் மோடியின் வழக்கம். எல்லாவற்றையும் விட மக்களவை வளாகத்தில் தமிழகத்தின் பெருமை சொல்லும் செங்கோலை நிறுவி அளவில்லா சிறப்பை சேர்த்திருக்கிறார். தொன்மை வாய்ந்த கலாசாரம், மொழி பண்பாட்டை கொண்ட தமிழகத்தின் பங்களிப்பை பிரதமர் மோடி என்றும் மறந்ததில்லை. இப்படி சிறப்பு வாய்ந்த தமிழகத்தில் மிக மிக மோசமான ஆட்சி நடந்து கொண்டிருப்பது வேதனை அளிக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சியில் தமிழகம் சீரழிகிறது. ஜனநாயகம் குறித்த அடிப்படை அறிவு இல்லை. பொதுக்கூட்டத்துக்கு வரும்போது கவனித்தேன். மார்க்கெட்டுகள், கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. விளக்குகள் அணைக்கப்பட்டன. இதுவா தமிழகத்தின் கலாச்சாரம்?

தமிழகத்தின் பாரம்பரியத்தை மதிக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இருந்து தூக்கி எறியப்படும் காலம் வந்துவிட்டது. திமுகவின் விளக்குகள் அணைக்கப்படும். இதையொட்டியே ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை கொண்டுவரப்பட்டுள்ளது. அரசியல் கலாச்சாரம் மாறியுள்ளது. ஊழல்வாதிகள் தண்டிப்படுகின்றனர். 500 ஆண்டுகால போராட்டத்துக்கு விடை கொடுத்து அயோத்தியில் உலகம் வியக்கும் வண்ணம் ராமர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறாக நாடு முழுவதும் மோடி அலை வீசி வருகிறது. மறுபுறம் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளில் வாரிசு அரசியல் மட்டும்தான் இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது, “பிரதமர் மோடியின் நல்லாட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் எனது யாத்திரையின் நோக்கம். இந்தியாவில் முக்கியமான பெரு நகரங்கள் அனைத்திலுமே பாஜக எம்பிக்கள் இருக்கின்றனர். அதேபோல, சென்னை நகரமும் பாஜக பக்கம் வரவேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE