மற்ற மாநிலங்களுக்கு ‘மாடலாக’ திகழும் தமிழக அரசு: அமைச்சர் உதயநிதி பெருமிதம்

By செய்திப்பிரிவு

கோவை: தமிழகம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் மாடல் அரசாக திகழ்கிறது என, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

கோவை, சரவணம்பட்டி குமரகுரு பொறியியல் கல்லூரி அருகேஅரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகித்து, பில்லூர் 3-வது குடிநீர் திட்டம், அன்னூர், சூலூர், அவிநாசி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 708 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்டம் மற்றும் 56 முடிவுற்ற திட்டப் பணிகள் என மொத்தம் ரூ.1,377.93 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ.57 கோடி மதிப்பீட்டில் 62 பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 8,482 பயனாளிகளுக்கு ரூ.100.21 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதியாக கோவை மாநகர் முழுவதும் தங்குதடையின்றி குடிநீர் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். அந்த வாக்குறுதி இன்று நிறைவேற்றப் பட்டுள்ளது. பில்லூர் குடிநீர் திட்டத்தின் மூலம் கோவை மாவட்டத்தில் 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சீரான குடிநீர் விநியோகிப்பதற்கான திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தை 1971-ம் ஆண்டு கலைஞர் உருவாக்கினார். இன்று தமிழ்நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைப் பதற்கு அவருடைய தொலை நோக்கு பார்வை தான் காரணம். தமிழ்நாடு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. மாநகரங்கள் விரிவடைந்து வருகின்றன. அதற்கு தேவையான உட்கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.

2031 மற்றும் 2050-ல் மக்கள் தொகை எவ்வாறு இருக்கும் என்பதை கணித்து அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். இதனை கவனத்தில் கொண்டுதான் நம்முடைய அரசு நகராட்சி நிர்வாகத்துறையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் தமிழ்நாடு அரசு ஒரு மாடல் அரசாக திகழ்ந்து வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி, நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மக்களவை தொகுதி உறுப்பினர்கள் ஆ.ராசா, பி.ஆர்.நடராஜன், கு.சண்முக சுந்தரம் மேயர் கல்பனா, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், முன்னாள் எம்எல்ஏ நா.கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE