''தமிழகத்தில் மக்களின் 60% வரி பணம் வெளியே சென்றுவிடுகிறது'': ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: தமிழகத்தில் மக்களின் வரிப்பணத்தில் 40% மட்டுமே திட்டப் பணிகளுக்கு செயல்படுத்தப்படுகிறது; 60% வரி பணம் வெளியே சென்றுவிடுகிறது என்று புதிய நீதிக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று (பிப். 10) இரவு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்தியாவை வல்லாசு நாடாக பிரதமர் மோடி மாற்றி கொண்டிருக்கிறார். இந்தியாவின் பொருளாதாரம் 13-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து அரிசி, கோதுமை ஆகியவற்றை வாங்கிய நிலையில் இருந்து, தற்போது உலக நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். ராணுவ தளவாடங்களில் சாதாரண எந்திர துப்பாக்கி முதல் நவீன துப்பாக்கி வரை, 65 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். பிரமோஸ் ஏவுகனை பலநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. ராணுவத்தை வலுப்படுத்துவது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது ஆகியவற்றோடு, ஏழை எளிய மக்களின் வாழ்விலும் அக்கறை கொண்டுள்ள ஒரு பிரதமரை பெற்றுள்ளோம். 10 ஆண்டுகளாக ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை பிரதமர் மோடி நடத்துகிறார்.

500 ஆண்டுகளாக ராமர் கோயில் பிரச்சினை இருந்தது. இதற்காக பலர் உயிரிழந்துள்ளனர். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று, ராமர் கோயிலை அழகாக கட்டி முடித்து 500 ஆண்டுகால பிரச்சினைக்கு தீர்வு கண்டுள்ளார். இதனால் இந்துக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதன்மூலம் வட மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளது. தமிழகத்திலும் மோடியின் செல்வாக்கு வளர்ந்து வருகிறது. நாடாளுமன்ற தேர்தலில் 370 தொகுதிகள் முதல் 400 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என நாடாளுமன்றத்தில் மோடி தெரிவித்துள்ளார். நல்லாட்சியை மக்கள் விரும்புகின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிவிட்டதால், திமுக எளிதாக வெற்றி பெறும் என நினைக்கின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தல்களில், ஒரு மாநிலத்தில் கூட பாஜக ஆட்சி அமைக்காது என கருத்து கணிப்பில் கூறினர். ஆனால் 3 மாநிலங்களில் ஆட்சியை பாஜக பிடித்துள்ளது. 2 மாநிலங்களில் ஆட்சியை காங்கிரஸ் இழந்துள்ளது. பிரதமர் மோடிக்கு மக்கள் செல்வாக்கு உள்ளதால் கருத்து கணிப்புகள் எடுபடாது. 2014-ல் நடைபெற்ற வேலூர் மக்களவை தொகுதியில் பாஜகவின் தாமரை சின்னத்தில் புதிய நீதிக் கட்சி போட்டியிட்டது. அப்போது திமுக தலைமையில் ஒரு கூட்டணி, அதிமுக தலைமையில் ஒரு கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி என மும்முனை போட்டி இருந்தது. அப்போது 3.25 லட்சம் வாக்குகளை தாமரை சின்னம் பெற்றது.

10 ஆண்டுகளில், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், கழிப்பறை கட்டிக் கொடுக்கும் திட்டம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டம் ஆகியவற்றை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள், தமிழகத்துக்கு வரும்போது தமிழக அரசின் திட்டங்களாக மாறிவிடுகின்றன. என் மண், என் மக்கள் யாத்திரையால், தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை பாஜக பெற்றுள்ளது. தமிழகத்தில் மாற்று சக்தியாகவும், இளைஞர்களின் நம்பிக்கையை பெற்று அண்ணாமலை வளர்ந்து வருகிறார். நேர்மையான ஆட்சி, ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்கிறார். தமிழகத்தில் நடைபெற்ற திட்டப் பணிகளில் 40 சதவீத நிதி மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. மக்களின் 60 சதவீத வரி பணம் வெளியே சென்றுவிடுகிறது. நல்லாட்சி அமைய வேண்டும் என அண்ணாமலை குரல் கொடுக்கின்றார். ஆரணி தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும்." என்று ஏ.சி.சண்முகம் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE