மதுரை | அரசியல் அழுத்தத்தால் மாநகராட்சி ஆணையாளர் இடமாற்றம் - பாதிக்கப்படும் நிர்வாகப்பணிகள்

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: மதுரை மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், அரசியல் அழுத்தம் காரணமாக திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 5 மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் நிர்வாகப்பணிகள் ஸ்தம்பிக்கத் தொடங்கியிருப்பதாக புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் மதுரை மாநகராட்சி அரசியல் முக்கியத்துவம் பெற்ற மாநகராட்சியாக திகழ்கிறது. ஆளும் கட்சி, எதிர்கட்சிகளின் அரசியல் அழுத்தம், கவுன்சிலர்களுடைய நெருக்கடி, தொழில் அதிபர்களுடைய அரசியல் பின்னணி மற்றும் ஒத்துழைக்காத ஒப்பந்ததாரர்கள் போன்றவற்றை சமாளித்து நிர்வாகத்தை மேற்கொள்வது, இந்த மாநகராட்சி ஆணையாளராக வரக்கூடியவர்களுக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. அதனால், ஆணையாளராக இருப்பவர்கள், 6 மாதம் மதுரையில் பணிபுரிவதே அபூர்வமாக இருந்து வருகிறது.

கடைசியாக மதுரை மாநகராட்சியில் அதிக காலம் மாநகராட்சி ஆணையாளராக இருந்தவர் விசாகன். இவரது காலத்தில் மேயர், கவுன்சிலர்கள் இல்லாததால் இவரால் ஒரளவு சுதந்திரமாக செயல்பட முடிந்தது. இவருக்குப் பிறகு கடந்த 3 ஆண்டுகளில் மாநகராட்சி ஆணையாளராக வந்தவர்கள் அதிக காலம் நீடிக்க முடியவில்லை. விசாகனுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட கார்த்திகேயன் 6 மாதங்களிலயே சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவருக்கு பதிலாக வந்த சிம்ரன் ஜீத் சிங், பிரவீன் குமார் போன்றோரும் வந்த வேகத்தில் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். ஏன், எதற்கு இடமாற்றம் செய்யப்பட்டோம் என்று தெரியாமலேயே விரக்தியுடன் இவர்கள் சென்றனர்.

கடைசியாக கடந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி லி.மதுபாலன் மதுரை மாநகராட்சி ஆணையாளராக நியமிக்கப்பட்டார். தற்போது இவரும் திடீரென்று தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளராக உள்ள தினேஷ்குமார், மதுரை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். லி.மதுபாலன் ஆணையாளராக வந்து மூன்றரை மாதத்திலேயே தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 5 மாநகராட்சி ஆணையாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாநகராட்சி ஆணையாளர்கள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் மாநகராட்சி நிர்வாகப்பணிகள், வளர்ச்சிப்பணிகள் ஒட்டு்மொத்தமாக ஸ்தம்பித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலனுக்கும், மேயர் இந்திராணிக்கும், கடந்த சில மாதங்களாக ஒத்துப்போகவில்லை. அதிருப்தியடைந்த மேயர் தரப்பினர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் புகார் தெரிவித்துள்ளனர். அவர், கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அதுபோல், மற்றொரு புறம் அமைச்சர் பி.மூர்த்தி தரப்பினருடனும் ஆணையாளர் லி.மதுபாலன் முரண்பட்டு நின்றார். புதிய லே அவுட்களுக்கு ஒப்புதல் வழங்குவது, ஒப்பந்ததார்களை விரட்டி வேலை வாங்குவது, மாநகராட்சி அதிகாரிகளை இடமாற்றம் செய்வது, டெண்டர் விடுவது போன்ற காரியங்களில் லி.மதுபாலன் ஆளும்தரப்பு அழுதத்திற்கும், தலையீட்டுக்கும் அடிப்பணியவில்லை. இதனால், இரு அமைச்சர்கள் தரப்பின் அரசியல் அழுத்தத்தின் காரணமாக ஆணையாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு முன் கார்த்திகேயன், சிம்ரன் ஜீத் சிங், பிரவீன்குமார் போன்றவர்களும் இதுபோல் மதுரை அரசியலில் தாக்குப்பிடிக்க முடியாமல் வந்த வேகத்தில் சென்றனர். தற்போது அந்த பட்டியலில் லி.மதுபாலனும் சேர்ந்துள்ளார். லி.மதுபாலன் நேர்மையான அதிகாரி. அந்த நேர்மைதான், அவரது பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. மேலும், மதுரை மாநகராட்சியில் யார் அதிகார மையம் என்பது தெரியவில்லை. ஒரு பக்கம் அமைச்சர் பி.மூர்த்தி, மற்றொரு புறம் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் போன்றவர்கள் மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிடுகிறார்கள். இதற்கிடையில் மேயர், கவுன்சிலர்களுடைய நெருக்கடியையும் சமாளித்து நிர்வாகத்தை நடத்த வேண்டும். இதை சமாளித்துக் கொண்டுதான் இந்த 3 மாதத்தில் லி.மதுபாலன் மாநகராட்சியில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

மாநகராட்சி நிதி நெருக்கடி, பாதாளசாக்கடை பிரச்சினைகள், புதிய சாலைகள் போடுவதில் மந்தம், வருவாய் இனங்களை ஏலம் விடுவதில் அரசியல் தலையீடு போன்ற பல்வேறு சிக்கலான நிலையில் லி.மதுபாலன் பதவியேற்றார். மற்ற அதிகாரிகளை போல் அறையில் முடங்கிவிடாமல், நேரடியாக 100 வார்டுகளுக்கும் ஆய்வுக்கு சென்று, அந்த வார்டுகளின் முக்கிய பிரச்சினைகளையும், கவுன்சிலர்களையும் தெரிந்து கொண்டார். மாநகராட்சி கூட்டங்களில் கவுன்சிலர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை நேரடியாக வார்டுக்கு சென்று ஆய்வு செய்து, அதனை உடனுக்குடன் சரி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தார். அதனால், கடந்த 3 மாதத்துக்கு முன்பிருந்த பாதாளசாக்கடை பிரச்சினைகளும், குடிநீரில் கழிவு நீர் கலக்கும் சம்பவங்களும் தற்போது ஒரளவு இல்லாமல் இருக்கிறது.

கடந்த அக்டோர் முதல் தற்போது வரை புதிதாக 1,885 வருவாய் இனங்களுக்கு சொத்து வரி விதித்தும், 2274 காலிமனைகளுக்கு வரி விதித்தும், புதிய 1,120 இனங்களுக்கு தொழில் வரி விதித்தும் மாநகராட்சி வருவாயை அதிகரிக்க உதவினார். அனுமதி பெறாமல் கட்டிய 107 கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுத்தார். அரசியல் அழுத்தத்துக்கு அடிபணியாமல் 7 பெரிய கட்டிடங்களுக்கு பூட்டி சீல் வைத்தார். புதிய சாலைப்பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களை அழைத்து கூட்டம் நடத்தி, கிடப்பில் போடப்பட்ட புதிய சாலைகளை முடுக்கிவிட்டு, கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை 150 கி.மீ., தொலைவுக்குள் சாலைகளை முடிக்க நடவடிக்கை எடுத்தார். சாலைகளை போடாமல் ஏமாற்றிய ஒப்பந்ததார்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.

மாநகராட்சியின் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கவனிப்பாரில்லாமல் கிடந்தது. இவர், பொறுப்பேற்றதும், ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தை நேரடியாக ஆய்வு செய்து, அந்த பேருந்து நிலையத்தை பராமரிக்க நடவடிக்கை எடுத்தார். மாநகராட்சி தயிர் மார்க்கெட் மற்றும் சுப்பிரமணியபுரம் மார்க்கெட்டில் உள்ள பழைய கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டுவதற்கு நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணி செய்யப்பட்டு வந்தது. இந்த பணிகள் அனைத்தும் பல மாதங்களாக ஆரம்ப கட்டநிலையிலே இருந்தன. இவர் வந்ததும், இந்த பணிகளை ஆய்வு செய்து ஒப்பந்ததாரரை விரட்டியதை அடுத்து, தற்போது முடியும் தருவாயில் உள்ளது.

சாலைகளில் தூசி அதிகளவு காற்றில் பறந்ததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை ஓட்டுவதில் சிரமம் அடைந்தனர். டிராக்டெர் மற்றும் கிரேப் மாஸ்டர் இயந்திரங்களை பயன்படுத்தி தண்ணீர் தெளித்து சாலைகளில் தூசி பறப்பதை ஒரளவு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். தற்போது லி.மதுபாலன் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் புதிதாக வரக்கூடிய மாநகராட்சி ஆணையாளர், மாநகராட்சியை பற்றி அறிந்து கொள்வதற்கே 3 மாதம் ஆகும். அதன்பிறகு அவர் நடவடிக்கை எடுக்க ஆரம்பிப்பதற்குள் அவர் இடமாற்றம் செய்யப்படுகிறார். தமிழக அரசு ஒன்று ஆளும்கட்சிக்கும், அமைச்சர்களுக்கும் ஒத்துபோகக்கூடிய ஐஏஎஸ் அதிகாரியை மாநகராட்சிக்கு ஆணையாளராக நியமிக்க வேண்டும். இல்லையென்றால், ஆணையாளர் எடுக்கும் நடவடிக்கைகளில் அமைச்சர்கள், ஆளும்கட்சியினர் தலையீடுவதை அனுமதிக்க கூடாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்