கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் 27 இடங்களில் என்ஐஏ சோதனை: முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தமிழகம் முழுவதும் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் அருகே 2022 அக். 23-ம் தேதி கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் காரை ஓட்டிவந்த உக்கடம் ஜி.எம்.நகரை சேர்ந்த ஜமேஷா முபின் (25) என்பவர் உயிரிழந்தார். போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜமேஷா முபினுக்கு தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதாகவும், மக்கள் கூடும் இடத்தில் கார் சிலிண்டரை வெடிக்கச் செய்து உயிரிழப்புகளை ஏற்படுத்த சதி திட்டம் தீட்டியிருப்பதும் தெரியவந்தது. பின்னர், இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

என்ஐஏ விசாரணை நடத்தி, இதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 14 பேரை கைது செய்துள்ளது. மேலும், கோவையில் இயங்கி வந்த அரபிக் மொழியை கற்றுக் கொடுக்கும் தனியார் அரபிக் கல்லூரியிலும் என்ஐஏ அதிகாரிகள் கடந்த ஆண்டு சோதனை நடத்தினர். சோதனையில், அக்கல்லூரியில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவிப்பது தொடர்பான ஆவணங்கள், அந்த அமைப்புக்கு ஆட்களை மூளைச்சலவை செய்து அனுப்புவது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டன. அதனடிப்படையில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவு விவகாரம் தொடர்பாக என்ஐஏ சென்னை பிரிவு அதிகாரிகள் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தனியாக வழக்கு பதிந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் தொடர்ச்சியாக கோவை, சென்னை, நெல்லை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தின் 27 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடிசோதனை நடத்தினர். கோவைக்கு வந்த என்ஐஏ அதிகாரிகள் அடங்கிய 12 குழுவினர் நேற்று உக்கடம் அல் அமீன் காலனியில் ஹபிபுல்லா, அருள் நகரில் (அன்புநகர்) அபுதாகீர், என்.எஸ்.கார்டனில் பைசல் ரகுமான், அற்புதம் நகரில் சலாவுதீன், கரும்புக்கடை கிரீன் கார்டனில் அனீஷ்முகமது, ஆர்.எஸ்.புரம் பால் கம்பெனியில் கமீல், குனியமுத்தூர் ராஜூநகரில் சுதிர்முகமது, மதுக்கரை சீரபாளையத்தில் முகமது அலி ஜின்னா, போத்தனூர் அமீர்சாகிப் வீதியில் நாசர் ஆகியோரது வீடுகள் உட்பட 12 இடங்களில் சோதனை நடத்தினர்.

மதியம் வரை நடைபெற்ற சோதனையில், வீட்டில் இருந்தவர்களிடம் கோவை கார் வெடிப்பு வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. இதேபோல், சென்னை பெரம்பூர் தில்லைநாயகம் பிள்ளை 5-வது தெருவை சேர்ந்த முகமது அப்துல்லா பாட்ஷா(40) வீட்டில் சோதனை நடத்தினர். இவர் மனித நேய மக்கள் கட்சி வட சென்னை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் இருக்கிறார். அதிகாலை 5.30 மணிக்கு சோதனையை தொடங்கிய அதிகாரிகள் 8 மணிக்கு சோதனையை நிறைவு செய்தனர்.

பல்லாவரம் சோமசுந்தரம் தெருவில் வசித்து வரும் பைக் டாஸ்சி ஓட்டுநரான நவீத்கான்(44) வீட்டில் 10-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். வில்லிவாக்கம் சிட்கோ நகரை சேர்ந்த பட்டு புடவைகளுக்கு சாயம் பூசும் தொழில் செய்து வரும் ரியாஸ் அக்ரம்(68) வீட்டில் 4 என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதேபோல், கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் சுலைமான் என்பவரது வீட்டில் நேற்று என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் பயன்படுத்திய செல்போன் கடந்த சில மாதங்களில் பல வெளிநாடு அழைப்புகளை பெற்ற நிலையில், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

திருச்சி பீமநகர் கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த எலெக்ட்ரிக்கல் கடை நடத்தி வரும் அஷரப் அலி(67) வீடு மற்றும் கடையில் நேற்று அதிகாலை 5 மணி முதல் என்ஐஏ அதிகாரிகள் 3 பேர் சோதனை நடத்தினர். பின்னர் அஷரப் அலி, அவரது மகன் இப்ராஹிம் அலி (27) ஆகியோரிடம் கோவை கார் வெடிப்பு தொடர்பாகவும், பாகிஸ்தானில் இருக்கும் உறவினர் ஒருவரை பார்க்க அவரது உறவினர்கள் அடிக்கடி சென்று வந்தது குறித்தும் விசாரித்துள்ளனர்.

மதுரையில் ஹாஜிமார் தெருவில் சாமியார் சந்தில் வசிக்கும் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரான முகம்மது அப்துல் அஜிமின் வீட்டில் சோதனை நடத்தி, அவரிடம் 4 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். அவரது மொபைல் போன், சிம் கார்டுகள் மற்றும் புத்தகம் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி முகைதீன் நகரிலுள்ள ரஜத் தெருவில் வசித்து வரும் பக்ருதீன் அலி அகமது (35) வீட்டிலும் சோதனை நடந்தது. இவர் பழனிபாபா அரசியல் எழுச்சி கட்சி கழகம் என்ற அமைப்பில் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். வங்கியின் மூலம் ஹவாலா பணப் பரிமாற்றம் எதுவும் நடந்ததா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இவரிடம் சோதனை நடத்தியதாக தெரிகிறது.

அந்தவகையில், தமிழகத்தில் மொத்தம் 27 இடங்களில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில், செல்போன்கள், சிம் கார்டுகள், லேப்டாப், வங்கி பணப்பரிவர்த்தனை ஆவணங்கள், ஆதார் அட்டை உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார்வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், சர்ச்சைக்குரிய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட தனியார் அரபிக் கல்லூரியில் நேரடியாக படித்தவர்கள், ஆன்லைன் வாயிலாக படித்தவர்கள், அவர்களுடன் தொடர்புடையவர்கள் என்பதன் அடிப்படையிலும் மேற்கண்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்