கோவை: “மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்குவதால் ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. கோவை புறக்கணிக்கப்படவில்லை” என கனிமொழி எம்.பி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி,திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக கனிமொழி எம்.பி. தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று (பிப்.10) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர், விவசாய அமைப்பினர், பொதுமக்களிடம் கருத்துகளை கேட்டறிந்து அவர்களின் மனுக்களை பெற்றனர். இதில், தொழில்துறையினர், விவசாயிகள், மக்கள் உள்ளிட்டோர் பங்கேற்று தங்களது கருத்துக்களையும், கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அதைத் தொடர்ந்து கனிமொழி எம்.பி செய்தியாளர்களிடம் கூறியது: “கோவை மட்டுமல்ல. தமிழகம் முழுவதும் தொழில் அமைப்பினர் குறிப்பாக சிறு, குறு தொழில் செய்பவர்கள் பணமதிப்பு இழப்பு, ஜிஎஸ்டி, கரோனா உள்ளிட்டவற்றால் மிகப்பெரிய பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக ஜி.எஸ்.டி.யில் நிறைய சிக்கல்கள் உள்ளன. அதை கட்ட முடியாமல் சிறு, குறு தொழில் அமைப்பினர் தொழில் செய்ய முடியாத சூழ்நிலைகளில் இருப்பதாக தங்களது கோரிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர்.
தொழில்துறையினர் மின்கட்டண உயர்வை குறைக்க கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுதொடர்பாக பலமுறை அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்களின் கோரிக்கைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுவதால்தான் திமுக தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றுவதற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் குறைந்த அளவே மத்திய அரசு நிதி ஒதுக்குவதால் ரயில்வே துறையில் கூட திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. கோவை புறக்கணிக்கப்படவில்லை. பல தொழிற்சாலைகளுக்கு கோவை மையமாக உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் இங்கு தொழில் கூடங்களை உருவாக்கினார். பல பன்னாட்டு நிறுவனங்கள் கோவை வருவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மேலும், முதலீடுகளை கொண்டுவரும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகிறார். தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக தொடர்ந்து முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தேர்தல் அறிக்கையில் என்ன வரும் என்பதை முதல்வர் ஸ்டாலின் முடிவு செய்வார். அதில் என்னென்ன வரும் என்பது என்னால் தெரிவிக்க முடியாது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மருத்துவ கல்லூரிகளில் நம்முடைய பிள்ளைகள் படிக்க முடியாத அளவுக்கு நீட் என்கிற ஒரு தேர்வை வைத்துள்ளனர். சாதாரண குடும்பத்தில் இருக்கும் பிள்ளைகள் படிப்பதற்கு, இந்தியாவிலேயே அதிகமான மருத்துவ கல்லூரிகள் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. மாநிலம் தோறும் மாவட்ட தோறும் கல்லூரி வேண்டுமென திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி.
இந்த கல்லூரிகள் யாருக்காக கொண்டுவரப்பட்டதோ அந்த கல்லூரியில் பிள்ளைகள் படிக்க முடியாத நிலை உள்ளது. அதை விமர்சிக்க முடியாதவர்கள் ஏன் இதைப் பற்றி பேச மறுக்கிறார்கள்” என்று கூறினார். இந்நிகழ்வின் போது, எம்.பிக்கள் ராஜேஷ்குமார், அப்துல்லா, சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட குழு உறுப்பினர்கள், கோவை மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக், தொ.அ.ரவி, தளபதி முருகேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
உதவிய கனிமொழி: கோவையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கனிமொழி எம்.பி, கார் மூலம் திருப்பூர் நோக்கி இன்று மதியம் சென்று கொண்டிருந்தார். கணியூர் சுங்கச்சாவடி அருகே சென்ற போது, அவ்வழியாக தனியார் கல்லூரி மாணவர் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி மயங்கிக் கிடந்தார். அவரை கனிமொழி எம்.பி மீட்டு, வாகனம் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago