புதுச்சேரி: ''புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் ரங்கசாமி நகராட்சி தலைவராகிவிடுவார்'' என அதிமுக ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி. பேசினார்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்காதது, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்காதது, மத்திய பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காதது, ஜிப்மர் கல்லூரி வேலைவாய்ப்பில் புதுச்சேரிக்கு இடஒதுக்கீடு வழங்காதது ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்தும், ரேஷன் கடைகளை திறந்து பொது விநியோக திட்டத்தை அமல்படுத்தாதது, சிறப்புக் கூறு நிதியை முழுமையாக செலவு செய்யாதது, புதிய தொழிற்சாலைகளை அமைக்காதது, உள்ளாட்சி தேர்தலை நடத்தாதது என்பது உள்ளிட்டவற்றுக்கு மாநில அரசை கண்டித்தும் புதுச்சேரி அதிமுக சார்பில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
அதிமுக அமைப்பு செயலாளரும், விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சி.வி.சண்முகம் எம்.பி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் முன்னிலை வகித்தார். அதிமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கடலூர் சாலை ஏஎப்டி மைதானத்தில் தொடங்கிய பேரணி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை, அண்ணா சாலை, நேருவீதி, மிஷன் வீதி வழியாக சட்டப்பேரவை பின்புறம் வந்தடைந்தது. தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சி.வி.சண்முகம் பேச்சு: ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் எம்.பி பேசியது: ''பாஜக அடிமை ஆட்சியில் மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். புதுச்சேரி யூனியன் பிரதேசமாக இருப்பதால் அத்தியாவசிய திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் அனுமதிக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. முதல்வரால் ஒரு அமைச்சரை நீக்கக்கூட முடியவில்லை. இப்படிபட்ட பதவி முதல்வருக்கு தேவையா? மாநிலம் வளர்ச்சி பெற, நிதி ஆதாரம் கிடைக்க புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தேவை. புதுச்சேரிக்கு பல துறையிலும் வரி வருவாய் உள்ளது. ஆனால் இந்த வரி அனைத்தும் மத்திய பாஜக அரசுக்கு செல்கிறது. மத்திய அரசு அந்த வரியில் புதுச்சேரிக்கு பிச்சை போடுகிறது.
புதுச்சேரியில் ரேஷன் கடை இல்லை. ரேஷன் பொருட்கள் கொடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சிகரமான விஷயம். இந்தியாவிலேயே பொது விநியோகத் திட்டத்தை இன்று சிறப்பாக கட்டமைத்து செயல்படுத்தி வரும் மாநிலம் தமிழகம். அரிசிக்கு பணமாக வழங்கியதுபோல லேப்டாப் பணத்தையும் வழங்க வேண்டியதுதானே? மாநில அந்தஸ்து கிடைக்காவிட்டால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையாது. காங்கிரஸ், திமுக, என்.ஆர்.காங்கிரஸ், பாஜக ஆட்சி செய்த 43 ஆண்டுகளாக புதுச்சேரி எந்த வளர்ச்சியும் அடையவில்லை.
புதுச்சேரி மக்களவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றால் யூனியன் பிரதேச அந்தஸ்தும் குறைந்துவிடும். முதல்வர் ரங்கசாமி நகராட்சி தலைவராகிவிடுவார். மாநில அரசுகளை மத்திய பாஜக அரசு நசுக்கி வருகிறது. கூட்டாட்சி தத்துவத்தை பாஜக சிதைத்து வருகிறது. என்.ஆர்.காங்கிரஸ் தொடங்கப்பட்டதே மாநில அந்தஸ்து பெறத்தான் என ரங்கசாமி கூறினார். 2-வது முறையாக அவர் முதல்வராகிவிட்டார். மாநில அந்தஸ்து பெற என்ன நடவடிக்கையை முதல்வர் ரங்காமி எடுத்தார்? அவர் வாய்சவடால் விட்டு புதுச்சேரி மக்களை ஏமாற்றி வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் மத்திய இணை அமைச்சராக நாராயணசாமி இருந்தார், புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி இருக்கின்றார். இவர்கள் நினைத்திருந்தால் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்தை பெற்றிருக்கலாம். 3 ஆண்டில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு என்ன செய்தார்? என பாஜகவினர் விளக்கட்டும்'' என்றார்.
அன்பழகன் பேச்சு: புதுச்சேரி மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், ''மத்தியில் திமுக, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போதும், பாஜக ஆட்சியிலும் மாநிலத்துக்கு வழங்க வேண்டிய உரிமைகள் இதுவரை வழங்கவில்லை. 90 சதவீதமாக இருந்த மத்திய அரசின் நிதியுதவி படிப்படியாக குறைக்கப்பட்டு இன்று 10 சதவீதமே மத்திய அரசு நிதியுதவி வழங்குகிறது. மத்திய அரசின் மக்கள் விரோத திட்டங்களை செயல்படுத்தும் சோதனை எலியாக புதுச்சேரியை மத்திய அரசு பயன்படுத்துகிறது. இலவச சைக்கிள், லேப்டாப்புக்கு ஏன் பொருட்கள் வழங்குகிறார்கள்? இதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. லேப்டாப் கொள்முதல் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மாநில அந்தஸ்து வழங்க முடியாது என மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டது. இந்நிலையில் பாஜக வேட்பாளரை முதல்வர் ரங்கசாமி ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? மாநில அந்தஸ்து வழங்காத பாஜக கூட்டணியில் இருந்து ரங்கசாமி வெளியேற வேண்டும். அவர் தனியாக வேட்பாளரை நிறுத்த வேண்டும் அல்லது அதிமுக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும். புதுச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அதிமுக மாபெரும் வெற்றி பெறும்'' என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
18 hours ago