மதுரை ஹாஜிமார் தெருவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

By சுப. ஜனநாயகசெல்வம்


மதுரை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் மதுரையில் இன்று ஹாஜிமார் தெருவிலுள்ள வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவரிடம் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதில் அவரது செல்போன், சிம்கார்டுகள், புத்தகம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மதுரை ஹாஜிமார் தெரு பகுதியில் உள்ள சாமியார் சந்து பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல் அஜிம். இவர் வஹ்ததே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் முன்னாள் மாவட்டத் தலைவர். இவரது வீட்டுக்கு இன்று அதிகாலையில் 6 மணியளவில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக வருகை தந்தனர். அப்போது அவரது வீடு பூட்டியிருந்ததால் காலை 7.30 மணிக்குமேல் ஹாஜிமார்தெரு சாவடி எதிரேயுள்ள அவரது சகோதரரின் வீட்டில் இருந்ததால் என்ஐஏ அதிகாரிகள் அங்கு சென்று சோதனையை செய்தனர். சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக முகம்மது அப்துல் அஜிமிடம் விசாரணை செய்தனர்.

அப்போது அவரிடம் முந்தைய வழக்குகள், சமூக வலைதள செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்தினர். செல்போன், சிம்கார்டுகள் மற்றும் புத்தகம் ஒன்றையும் பறிமுதல் செய்து சென்றனர். என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தபோது திடீர்நகர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர் மீது விளக்குத்தூண் காவல் நிலையத்தில் 2019ல் பாபர் மசூதி சுவரொட்டி ஒட்டியது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து ஹாஜிமார்தெரு முஸ்லிம் ஜமாத் செயலாளர் அயாஸ் கூறுகையில், ''எம்.பி தேர்தல் நெருங்குவதால் என்ஐஏ அதிகாரிகள் சமூகப் பணிகளில் ஈடுபடும் இளைஞர்களை குறிவைத்து சோதனை நடத்துகின்றனர். ஊடகங்களில் தான் சோதனை குறித்து தெரிந்துகொண்டோம். என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்துவது குறித்து ஜமாத்திடம் தெரிவித்தால் விசாரணைக்கு ஒத்துழைப்போம். என்ஐஏ இஸ்லாமிய இளைஞர்களுக்கு அதிகளவிற்கு தொந்தரவு அளிப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுபோல் இளைஞர்களை தேடித்தேடி விசாரணை என்ற பெயரில் அலைக்கழிக்கின்றனர்'' என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE