சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்.12-ல் ஆளுநர் உரையுடன் தொடக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் பிப்ரவரி 12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்குகிறது.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதம் ஆளுநர் உரையுடன் தொடங்கும். கடந்த ஆண்டு சட்டப்பேரவை முதல் கூட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றியபோது, தமிழக அரசு தயாரித்து அளித்த உரையில் சிலவற்றை தவிர்த்தும், சிலவற்றை சேர்த்தும் வாசித்தார். இதனால், ஆளுநர் இருக்கும்போதே, அவருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அப்போது, ஆளுநர் அவையில் இருந்து வெளியேறிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே, பல்வேறு நிகழ்ச்சிகளில் ஆளுநர் தெரிவித்த கருத்துகளால், அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலவிய பனிப்போர் மேலும் தீவிரமடைந்த நிலையில், கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தையும் ஆளுநர் முடித்து வைக்காமல் இருந்தார். இந்த காரணங்களால் இந்த ஆண்டு முதல் கூட்டத்தில் ஆளுநர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாக இருந்தது. ஆனால், மசோதாக்கள் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார். இந்த சூழலில், கடந்த மாதம் சட்டப்பேரவை கூட்டத் தொடரை முடித்து வைக்க ஆளுநர் அனுமதி அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை இடம்பெறுவது உறுதியானது.

பிப்.19-ல் பட்ஜெட் தாக்கல்: இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 1-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த பேரவைத் தலைவர் மு.அப்பாவு, ‘‘சட்டப்பேரவை பிப்ரவரி 12-ம் தேதி காலை 10 மணிக்கு கூடும். அன்றைய தினம்ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுவார்’’ என்று அறிவித்தார். தமிழகஅரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ம் தேதி தாக்கல் செய்வார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பேரவைத் தலைவர் அப்பாவு, சட்டப்பேரவை நிகழ்வுகளில் பங்கேற்க வருமாறு முறைப்படி அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையே, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளதால், பேரவை அரங்கம் வண்ணம்பூசப்பட்டு, இருக்கைகள், மேஜைகளில் வார்னிஷ் அடிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தயாராகி வருகிறது.

சட்டப்பேரவை அரங்கம் அமைந்துள்ள கட்டிடத்தின் முகப்பு பகுதி, ஆளுநர், பேரவைத் தலைவர் வருகை தரும் பகுதிகள், உறுப்பினர்கள் வரும் வாயில்கள், எதிர்க்கட்சி தலைவர் அறை அமைந்துள்ள பகுதி உள்ளிட்ட இடங்களும் தயாராகி வருகின்றன.

மக்களவை தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், தமிழக பட்ஜெட்டும் விரைவாக தாக்கல் செய்யப்படுகிறது.

ஆளுநர் உரை மீதான விவாதம்: முன்னதாக, சட்டப்பேரவை ஆண்டு முதல் கூட்டத்தில், ஆளுநர் உரையாற்றியதும், அவரது உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசிப்பார். அதைத் தொடர்ந்து, அலுவல் ஆய்வு குழு கூடி, பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்து அறிவிக்கும். அந்த வகையில், அடுத்த 3 நாட்கள் வரை கூட்டம் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதும் அன்றே முடிவு செய்யப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்