மதுரையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்துக்கேட்பு கூட்டம்

By என். சன்னாசி

மதுரை: மதுரையில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கருத்துக்கேட்பு ஆலோசனைக்கூட்டம் நடந்தது. இதில் கோரிக்கை, புதிய திட்டங்கள் குறித்து பல்வேறு மனுக்கள் பெறப்பட்டன.

மதுரை காமராசர் சாலையிலுள்ள தமிழ்நாடு வர்த்தக சங்க கட்டிடத்தில் மதுரை மண்டலத்தைச் சார்ந்த மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கான அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு கருத்துக்கேட்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி. உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செம்மலை, ஓஎஸ்.மணியன், வளர்மதி, விஜயபாஸ்கர், வைகைசெல்வன் மற்றும் ராஜன் செல்லப்பா எம்எல்ஏ உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்கான கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வாங்கினர்.

தமிழ்நாடு தொழில் வர்த்தகம், வணிகர்கள், அனைத்து வியாபாரிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள், விவசாயிகள் சங்கம், தொழில் முதலீட்டாளர்கள் சங்கம், சிறு, குறு முதலீட்டாளர்கள் சங்கம், கைத்தறி, விசைத்தறி மோட்டார் வாகன உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழில் சார்ந்த சங்கங்களும், அமைப்புகளும் அதிமுக தேர்தல் அறிக்கை தொடர்பான கோரிக்கைகள் குறித்த மனுக்களை வழங்கினர்.

நத்தம் விசுவநாதன், செல்லூர் கே.ராஜூ, ஆர்பி. உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் தங்களது தொகுதி சார்ந்த சங்கங்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டனர். இங்கு வழங்கிய மனுக்கள் குறித்து மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும் என்றும், தங்களது கட்சி எம்பிக்கள் மூலமும் வலுவாக குரல் எழுப்பி நிறைவேற்ற முயற்சிப்போம் எனவும் அமைச்சர்கள் உறுதியளித்தனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட இளைஞர் செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், விருதுநகர் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட தென்மாவட்ட அதிமுக செயலாளர்கள், நிர்வாகிகள் என, ஏராளமானோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE