திமுக கூட்டணியில் மநீம இணைந்தால் கமலுக்கு கோவை மட்டும் தானா?

By நிவேதா தனிமொழி

வரும் மக்களவைத் தேர்தலை, வலுவான கூட்டணியுடன் எதிர்கொள்ள வேண்டும் எனக் கருதி, காய்களை நகர்த்தி வருகிறது திமுக. அதனால், கூட்டணிக் கட்சிகளை இறுதி செய்வதிலும், அவர்களுக்குத் தொகுதிகளைப் பங்கீடு செய்து தருவதிலும் திமுக தீவிர முனைப்புடன் செயலாற்றத் தொடங்கியுள்ளது. திமுகவுடன் தற்போது வரை காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக, இந்திய முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொங்கு தேசிய மக்கள் கட்சிகளின் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் மக்கள் நீதி மய்யமும் இணையுமா என்னும் கேள்வி எழுந்தது.

கடந்த பிப்ரவரி 4-ம் தேதி, மக்களவைத் தேர்தலுக்கான ஆலோசனைக் கூட்டத்தை மக்கள் நீதி மய்யம் நடத்தியது. அதில், ‘எங்கள் கட்சியின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி வைப்போம்’ என முடிவெடுக்கப்பட்டது. ஆனால், தொடக்கம் முதலே திமுக கூட்டணியில்தான் மக்கள் நீதி மய்யம் இணையும் என சொல்லப்பட்டு வந்தது. அந்த வகையில், தென் சென்னை, கோவை ஆகிய இரு இடங்களை ஒதுக்கச் சொல்லி, திமுகவுடன் மக்கள் நீதி மய்யம் கேட்டு வந்தது. ஆனால், திமுக ஒரு தொகுதியை மட்டுமே ஒதுக்க முடிவெடுத்திருப்பதாகத் தகவல்கள் கசிந்தன.

கேட்கும் தொகுதி கிடைக்கவில்லை என்றால், திமுக கூட்டணிக்கு ஆதரவை மட்டும் கொடுத்துவிட்டு, மாநிலங்களவையில் ஓர் உறுப்பினர் பதவியைப் பெற்றுக்கொள்ள கமல் திட்டமிட்டிருப்பதாக கட்சி வட்டாரங்கள் முணுமுணுத்தன. ஆனால் தற்போது, திமுக கைகாட்டும் ஓர் இடத்தில் களமிறங்க மக்கள் நீதி மய்யம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கமலுக்கு ஏன் கோவை? - மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு தொகுதிதான் என்றால், தென் சென்னை தொகுதிதான் வேண்டும் என கேட்கப்பட்டது. ஆனால், கோவையில் கமலை களமிறக்கவே திமுக திட்டமிட்டுள்ளது. கோவையில் அதிமுக பலத்துடன் இருக்கிறது; பாஜகவின் கையும் அங்கு ஓங்கித்தான் உள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், கோவை தொற்குத் தொகுதியில் கமல் களமிறங்கினார். அவரை எதிர்த்து களமாடிய பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை விட 1,728 வாக்குகள் மட்டுமே குறைவாகப் பெற்று தோற்றார். இதனால், கோவையில் போட்டியிட கமல் சரியானவர் என திமுக தலைமை நினைக்கிறது. இதனால், கோவையை கமலுக்கு கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளது. ஆனால், தங்கள் சின்னத்தில் நிற்கவும் கேட்டுக்கொண்டுள்ளது.

‘திமுக ஒரு சீட் கொடுத்தால், அதில் கமல் நிற்பார். திமுக சின்னத்தில் அல்லாமல் மக்கள் நீதி மய்யத்தின் சின்னத்தில் அவர் நிற்க வேண்டும். கட்சியின் தலைவர் கூட்டணி கட்சிச் சின்னத்தில் நிற்பது சரியாக இருக்காது’ என கமலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தென் சென்னை தொகுதி, விசிட் அடிக்க எளிதாக இருப்பதோடு, திமுக தலைமைக்குத் தொடர்ந்து நெருக்கமாக இருந்து செயல்பட வாய்ப்பும் இருக்கும் என்பதால்தான் கமல் தென் சென்னையைக் குறி வைக்கிறார். ஆனால், தென் சென்னையை திமுக தன் வசம் வைத்துக்கொள்ள நினைக்கிறது. மேலும், காங்கிரஸும் தென் சென்னை கேட்பதாகத் தெரிகிறது. அதனால், கமலுக்கு கோவை தொகுதி ஒதுக்கவே வாய்ப்புகள் அதிகம்.

இன்னும் சில தினங்களில் ஸ்டாலினை கமல் நேரில் சந்திப்பார். அப்போது தொகுதிப் பங்கீடு குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வரலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE