சென்னை: “அரசு மருத்துவப் பணிக்கு தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மறுக்கும் தமிழக அரசின் போக்கு சமூக நீதிக்கு எதிரானது” என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு ஒதுக்கீடு வழங்கும் நடைமுறை கடந்த 2010-இல் அமல்படுத்தப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் வாயிலாக, தமிழக மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்காக 1021 மருத்துவர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை, கடந்த 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ஆம் நாள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதில், 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு தகுதியானவர்கள் இல்லை எனக் கூறி, அந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருப்பது வன்மையாக கண்டத்துக்குரியது.
தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்புகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தின்படி, அரசுப் பணிக்கான அடிப்படைத் தகுதி பட்டப்படிப்பு என்றால், அதை மட்டும் தமிழ்வழியில் படித்தால் போதுமானது என்பதால், அவ்வசதியை ஆங்கில வழியில் படித்த பலரும் தவறாக பயன்படுத்தி வந்தனர்.
» நில இழப்பீட்டுத் தொகை விவகாரம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விவரம் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
» தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இதனையடுத்து, பள்ளிக் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வகை செய்யும் சட்ட திருத்தம் கடந்த 2020-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு தற்போது நடைமுறையில் உள்ளது. அச்சட்டத்தின் அடிப்படையில், பள்ளிக் கல்வியையும், உயர் கல்வியையும் தமிழில் நிறைவு செய்தவர்களுக்கு மட்டுமே தமிழ் வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பு ஆங்கில வழியில் மட்டும் தான் கற்பிக்கப்படுகிறது; தமிழ்வழியில் கற்பிக்கப்படவில்லை என்ற அடிப்படை கள யதார்த்தத்தை உணராமல், மருத்துவப் படிப்பை தமிழில் படிக்கவில்லை என்று கூறி, மருத்துவர் பணி நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
தமிழக அரசின் அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது. இது தமிழ் வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதன் நோக்கத்திற்கு முழுக்க முழுக்க எதிரானது. இந்தியாவிற்கே இடஒதுக்கீட்டுக் கொள்கையில் வழிகாட்டி மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில் இவ்வாறு தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பது எந்த வகையிலும் ஏற்கக் கூடியது அல்ல.
மேலும், தமிழ்நாட்டில் இயங்கும் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு கிடையாது. பணத்தை பெருந்தொகையில் வாரிக் கொடுத்து பட்டம் வாங்கும் நிலையங்களாக அவை உள்ளன. ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்கள், ஏழைகள் ஆகியோருக்கு அக்கல்லூரிகளில் இடம் கிடைப்பதில்லை, தவிரவும் இக்கல்லூரிகளில் மிகப் பெரும் எண்ணிக்கையில் வெளி மாநில மாணவர்கள் இடம்பிடித்து விடுகின்றனர்.
தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டதன் நோக்கமே, பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பது தான். மருத்துவப் படிப்பும், பட்ட மேற்படிப்பும் தமிழ் வழியில் இருந்திருந்தால், பள்ளிக் கல்வியை தமிழில் படித்தவர்கள், அவற்றையும் தமிழ்வழியில் தான் படித்திருப்பார்கள். அந்தப் படிப்புகள் தமிழ் வழியில் நடத்தப்படாதது அரசின் தவறே தவிர, மாணவர்களின் தவறல்ல. இத்தகைய சூழலில், எந்த அளவுக்கு தமிழ் வழியில் படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு தமிழ்வழிக் கல்விக்கான இட ஒதுக்கீட்டை வழங்குவது தான் சரியானதாகவும், சமூகநீதியாகவும் இருக்கும்.
மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அந்த இட ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவப் படிப்பில் சேருபவர்களில் 90 விழுக்காடு பேர் தமிழ்வழியில் படித்தவர்கள். அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்வழிக் கல்விக்கான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது அவசியம். 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 178 இடங்கள் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு அரசு மருத்துவப் பணி வழங்க மறுப்பது, வர்ண - சாதி வழிப்பட்ட சமூக அநீதியை நிலை நாட்டும் கொடுஞ் செயலாகும்.
எனவே, மருத்துவப் படிப்பு, பட்ட மேற்படிப்பு போன்ற ஆங்கில வழியில் மட்டும் கற்பிக்கப்படும் படிப்புகளை கல்வித் தகுதியாகக் கொண்ட பணிகளுக்கு, தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். அதற்கேற்ப, எதிர்வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், தமிழ் வழிக் கல்விக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டு சட்டத்தில் தமிழ்நாடு அரசு திருத்தம் செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது'' என்று வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
40 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago