டேக்வாண்டோ பயிற்சியாளர் மீதான போக்சோ வழக்கு ரத்து: புகாரளித்தோர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: பெரம்பலூரைச் சேர்ந்த டேக்வாண்டோ பயிற்சியாளர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பயிற்சியாளருக்கு எதிராக பொய் புகார் அளித்தவர்கள் மீது 4 வாரத்துக்குள் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன். இவர் 3 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் தர்மராஜனுக்கு எதிராக போக்சோ சட்டம் மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், புலன் விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையை உள்ளூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தர்மராஜன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட மூன்று பெண்கள் கொடுத்த வாக்குமூலத்தையும் படித்துப் பார்த்தார். பின்னர், அந்த மூன்று சிறுமிகளையும் பெற்றோருடன் நேரில் ஆஜராக உத்தரவிட்டார். இதன்படி கடந்த 2-ம் தேதி நீதிபதி அறையில் வைத்து இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது.

அப்போது அந்த மாணவிகள் மூன்று பேரும் தங்களுக்கு எந்த ஒரு பாலியல் தொந்தரவும் ஏற்படவில்லை என்றும் அரவிந்தன், பிரதீப் ஆகியோர் தூண்டுதலின் பேரில் இந்த புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதுகூட தங்களுக்கு தெரியாது. புகார் கொடுப்பதற்காக வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து போட்டுக் கொடுத்ததாக கூறியுள்ளனர்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி டேக்வாண்டோ பயிற்சியாளர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், மூன்று மாணவிகளை இதுபோல பொய் புகார் கொடுக்கத் தூண்டிய அரவிந்தன், பிரதீப் ஆகியோர் மீது போக்சோ சட்டப்பிரிவு 22-ன் கீழ் நான்கு வாரத்துக்குள் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். மேலும், உண்மையை சொல்லி மனுதாரரை அப்பழுக்கற்றவர் என்று ஊருக்கு பறைசாற்ற வைத்த மூன்று மாணவிகளுக்கும் நீதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE