திமுக அரசுக்கு எதிராக உள்ளூர் பிரச்சினைகளில் பாஜக தீவிரம் - அமைதி காக்கும் அதிமுக @ சிவகங்கை

By இ.ஜெகநாதன்


சிவகங்கை: மக்களவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், உள்ளூர் பிரச்சினைகளில் திமுக அரசுக்கு எதிராக சிவகங்கை மாவட்ட பாஜக தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக அமைதி காத்து வருகிறது.

தமிழகத்தில் திமுக அரசுக்கு எதிராக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடர்ந்து பேசி வருகிறார். அதே பாணியை, சிவகங்கை மாவட்ட பாஜகவும் கடைப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. அவ்வப் போது கட்சி தலைமை அறிவிக்கும் போராட்டங்கள், கூட்டங்களை தவிர்த்து, உள்ளூர் பிரச்சினைகளுக்காக திமுக அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், இளையான்குடி அருகே சாலைக் கிராமத்தில் உள்ளூர் அடிப்படை பிரச்சினை களுக்காக போராட்டம், காரைக்குடி சந்தைப் பேட்டையில் அரசு மதுக்கடையை அகற்றக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் அறிவிப்பு, ஒப்பந்ததாரருக்கு ஆதரவாக சிவகங்கை நகராட்சி அலுவலகம் முற்றுகை, ஏலதாரர்களுக்கு ஆதரவாக சிவகங்கை நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் போராட்டம் நடத்தியது என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும், காரைக்குடி அதிமுக பெண் கவுன்சிலரை அவதூறாகப் பேசியதாக திமுகவைச் சேர்ந்த நகராட்சித் தலைவரை கண்டித்தும், சிவகங்கை அருகே வீரவலசை பகுதியில் தவறாக பட்டா கொடுத்ததாக அதிகாரிகளை கண்டித்தும் குரல் கொடுத்ததோடு, சுவரொட்டிகளும் ஒட்டினர். இவ்வாறு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஏராளமான போராட்டங்களை பாஜகவினர் நடத்தியுள்ளனர்.

ஆனால், கடந்த ஒரு மாதத்தில் சிவகங்கை நகராட்சிக்கு எதிராக ஒரேயொரு போராட்டத்தை மட்டுமே அதிமுக நடத்தியுள்ளது. மற்ற பிரச்சினைகளுக்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறது.

இது குறித்து பாஜக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அதிமுக உள்ளூர் பிரச்சினைகளுக்கு குரல் கொடுப்பதில்லை. அதேபோல், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் திமுக கூட்டணியில் இருப்பதால், ஆளும்கட்சியை எதிர்க்க விரும்புவதில்லை. அதனால் நாங்கள் அதை கையிலெடுத் துள்ளோம். தமிழகம் முழுவதுமே உள்ளூர் பிரச்சினைகளுக்காக பாஜக குரல் கொடுத்து வருகிறது. ஆனால், சிவகங்கை மாவட்டத்தில் அது மேலும் தீவிரமாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த காலங் களை போல் இல்லாமல் தற்போது பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் திடீர் போராட்டத்துக்கு கூட பல நூறு பேர் கூடுகின்றனர். இதனால் திமுக அத்துமீறல்களை எதிர்த்து குரல் கொடுக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE