கட்டிட பணி முடிப்பு சான்றிதழ் பெற சட்டப்படியான வழிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: கட்டிடப் பணி முடிப்பு சான்றிதழ் வழங்கும் நடைமுறையில், சட்டப்படியான வழிமுறைகளைப் பின்பற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நகராட்சி நிர்வாகத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களுக்கும் நகராட்சி நிர்வாக இயக்குநர் அனுப்பிய சுற்றறிக்கை: தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளின்படி, கட்டிடப் பணி முடிப்பு சான்று பெற விரும்பும் விண்ணப்பதாரர் அல்லது உரிமையாளர் அல்லது பொது அதிகாரம் பெற்றவர் அல்லது பதிவு பெற்ற அபிவிருத்தியாளர் மற்றும் யாராக இருந்தாலும், கட்டிடப் பணி முடிவு சான்றுக்கான விண்ணப்பத்தை உரிய படிவங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

குறிப்பாக அக்கட்டிடத்துக்கு தேவையான மின் இணைப்பு, குடிநீர், கழிவுநீர் இணைப்பு பெறும் முன்னதாகவே தங்கள் கட்டுமானத்துக்கு திட்ட அனுமதி வழங்கிய அதிகாரியிடம் இருந்து முடிவு சான்றை பெற்றுக் கொள்ள வேண்டும். கட்டிட முடிவு சான்றை வழங்கும் பட்சத்தில் மட்டுமே, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புகளை சம்பந்தப்பட்ட அரசு நிர்வாகங்கள் வழங்க இயலும்.

இவ்வாறு இருக்கும்போது, சில நகர்ப்புற உள்ளாட்சிகளில் சட்டப்படி வழங்க அதிகாரம் இல்லாதவர்களால் இந்த சான்று வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இவ்வாறான செயல்பாடு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்ட விதிகளை மீறுவதாக அமைவதுடன், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்.

எனவே, இனிவரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர இடமளிக்கக் கூடாது என்பதுடன், தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள் மற்றும் அலுவலர்கள் அல்லதுதொடர்புடைய யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க நேரிடும்.

மேலும் உரிய அதிகாரியிடம் ஒப்புதலின்றி பெறப்படும் கட்டிடமுடிவு சான்று அடிப்படையில் சேவை இணைப்பை வழங்கக்கூடாது என்று தொடர்புடைய சேவை வழங்கும் அலுவலர்களுக்கு அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் அறிவுறுத்த வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE