பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி பிப்.15-ல் அரசு அலுவலர்கள் வேலைநிறுத்தம்

By செய்திப்பிரிவு

சென்னை: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 15-ம் தேதி ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன் கூறினார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்தது. ஆனால், இதுவரை அதை செயல்படுத்தவில்லை. இந்த திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

அதேபோல, நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகையையும் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அலுவலர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, ரூ.15 ஆயிரத்துக்கும் குறைவான மாத ஊதியம் பெறும் இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல், அரசுத் துறைகளில் காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி, துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

இவற்றை வலியுறுத்தி வரும் 15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். மேலும், அன்று வட்டக் கிளைகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். பின்னரும் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், வரும் 26-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE