பனிப்பொழிவால் உதிரும் மல்லிகைப்பூ - கிலோ ரூ.2,600 ஆக விலை உயர்வு

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பனிப்பொழிவால் மல்லிகைப்பூ வரத்து குறைந்து கிலோ ரூ.2,600 விற்பனையாகிறது. முக்கிய முகூர்த்தம் இல்லாத நாட்களிலே இந்த விலையில் பூக்கள் விற்பதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் உற்பத்தியாகும் மல்லிகைப்பூக்களுக்கு உள்ளூர் முதல் உலக சந்தைகள் வரை வரவேற்பு இருந்து வருகிறது. முக்கிய முகூர்த்த நாட்கள் மட்டுமில்லாது சாதாரண நாட்களில் கூட மல்லிகைப்பூக்கள் கிலோ ரூ.1000 வரை விற்பனையாகும். ஆனால், கரோனாவுக்கு பிறகு மல்லிகைப்பூ வரத்து குறைந்து சந்தைகளில் நிரந்தரமாக அதன் விலை உயர்ந்து காணப்படுகிறது. முகூர்த்த நாட்கள், விழா காலங்களில் கிலோ ரூ.3,500 வரையும், மற்ற நாட்களில் கிலோ ரூ.2000 வரையும் விற்பனையாகிறது. இன்று மல்லிகைப்பூ திடீரென்று கிலோ ரூ.2,600க்கு விற்பனையானது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “மல்லிகை பூ வரத்து குறைவாக இருப்பதால் இந்த ஆண்டு ஆண்டு மல்லிகை பூ சீசன் தொடக்கத்திலே விலை உயர்ந்துள்ளது. பூக்கள் உற்பத்தியும், விற்பனையும் பெரும் பின்னடைவை சந்திக்க ஆரம்பித்துள்ளது. தற்போது குளிர் காலம் முடிந்து கோடைகாலம் தொடங்கியநிலையில் அதிகாலை நேரங்களில், இரவு வேளைகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

அதனால், மல்லிகைப்பூ உற்பத்தி குறைந்துள்ளது. அதனாலே, மல்லிகைப்பூ தற்போது விலை அதிகரித்துள்ளது. அதுபோல் மற்ற பூக்கள் விலையும் சந்தைகளில் அதிகரித்துள்ளது. பிச்சிப்பூ ரூ.1200, முல்லைப்பூ ரூ.120, அரளிப்பூ ரூ.200, பட்டன் ரோஸ் ரூ.120, பன்னீர் ரோஸ் ரூ.160 செவ்வந்திப்பூ ரூ.180, கனகாம்பரம் ரூ.1000 போன்ற விலைகளில் விற்கிறது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE