‘தூண்டில்’ அரசியலும், ‘நழுவல்’ வியூகமும்: பாஜகவுக்கு அதிமுக ஏன் தேவை?

By நிவேதா தனிமொழி

பாஜக கூட்டணிக்கு ‘நோ’ சொல்லியும், அதிமுகவை பல வழிகளில் அணுகிப் பார்க்கிறது பாஜக. பிடிகொடுக்காமல் நழுவி வருகிறது அதிமுக. ஒரு தேசியக் கட்சியாக மத்தியில் ஆட்சியில் இருந்தும், தமிழகத்தில் அதிமுகவின் துணையை பாஜக நாடுவது ஏன்?

அமித் ஷாவின் மறைமுக அழைப்பு: உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ‘‘பாஜகவின் கூட்டணிக் கதவு இப்போதும் திறந்திருக்கிறது,’’ எனப் பேசியிருந்தார். ‘இது, அதிமுகவுக்கு விடும் தூது’ எனப் பலராலும் கருத்து சொல்லப்பட்டது. இதற்கு எதிர்வினையாற்றிய அதிமுக அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார், ‘‘கூட்டணிக்கான கதவுகளை பாஜக திறந்து வைத்திருக்கலாம். ஆனால், அதிமுக கதவை மூடிவிட்டது. பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்பது அதிமுக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் முடிவு. பாஜகவுக்கான கதவு சாத்தப்பட்டுவிட்டது. முன்வைத்த காலைப் பின்வைக்கப் போவதில்லை” என பாஜகவை நேரடியாக நோகடித்தார்.

இதையடுத்து, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ‘‘மோடி தலைமையை ஏற்று யார் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வந்தாலும் எங்கள் கதவுகள் திறந்தே இருக்கும் என்று அமித் ஷா தெளிவாகக் கூறியுள்ளார். மற்றபடி, எந்தக் கட்சியையும் குறிப்பிட்டு சொல்லவில்லை’’ என, விளக்கி, ‘அதிமுகவுக்கு அமித் ஷா கூட்டணி அழைப்பு விடுத்துள்ளார்’ என்ற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஜி.கே.வாசனை தூதுவிட்ட பாஜக: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனைத் தூது அனுப்பி, அதிமுகவை தங்கள் கூட்டணியில் சேர, பேச்சுவார்த்தை நடத்த பாஜக திட்டமிட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார் வாசன். ஆனால், ‘அதிமுக பாஜகவுடன் இணைய வாய்ப்பில்லை’ என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார் பழனிசாமி. இந்த முயற்சி பலன் அளிக்காததால்தான், அதிமுகவுக்கு அழைப்பு விடுக்கும்படி பேசியிருந்தார் அமித் ஷா. மாநிலக் கட்சியாக இருக்கும் அதிமுக, தொடர்ந்து தேசியக் கட்சியான பாஜகவைப் புறக்கணித்து வருகிறது. இருப்பினும், அதிமுகவுடன் கூட்டணி வைக்க, பாஜக தீவிரம் காட்டுவது ஏன்?

தென்னிந்தியாவில் சறுக்கல்: ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, தமிழகத்தில் சிறிய அளவில் வேரூன்றத் தொடங்கியது பாஜக. ஆனால், பாஜகவின் கொள்கைகளால், தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் அதிமுக சறுக்கலைச் சந்தித்தது. இதை உணர்ந்து பிறகுதான், பாஜகவிடமிருந்து விலகத் தொடங்கியுள்ளது அதிமுக.

தென்னிந்தியா முழுவதிலும் பாஜக சறுக்கலைத்தான் சந்தித்து வருகிறது. இந்த முறை மாநிலக் கட்சிகளுடன் கைகோத்து சில தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும் என காய் நகர்த்தி வருகிறது பாஜக. ஆனால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியிருப்பது பாஜகவுக்கு தமிழகத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

‘என்னதான் அதிமுக நீங்கலாக மற்ற கட்சிகளுடன் பாஜக மூன்றாவது அணி அமைத்தாலும், வாக்கு வங்கியை உயர்த்தலாமே தவிர, வெற்றியைப் பதிவு செய்வது சிரமம் தான். பாமக போன்ற சாதி வாக்கு வங்கியுள்ள கட்சிகளுடன் இணைந்து களம் கண்டாலும், எதிர்தரப்பில் அதே சாதியைச் சேர்ந்தவரைக் களமிறக்குவர். மும்முனைப் போட்டி நிலவுவதால், கணிசமான வாக்குகளைப் பெற முடியலாம். ஆனால், வெற்றிக் கனியைப் பறிக்க அது உதவாது’ என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.

எப்போதும் வலுப்பெறாத 3-ம் அணி! - தேர்தல் களத்தில் தாங்கள் அமைத்திருப்பது பலமான கூட்டணி என்னும் பிம்பத்தை மக்கள் மனதில் பதியவைக்க வேண்டியது, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சிகளின் முதல் பணி. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக - அதிமுக தவிர, மற்ற கட்சிகள் கூடி அமைத்த கூட்டணி மக்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று, வலுவாய் அமைந்ததாக வரலாறு இல்லை.

கடந்த 2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக - அதிமுக நீங்கலாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மறுமலர்ச்சி திமுக, தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் என, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து ‘மக்கள் நலக் கூட்டணி’யை உருவாக்கின. ஆனால், அந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது. அதில் அதிக கட்சிகள் இடம்பெற்றிருந்தாலும் ’வலுவான கூட்டணி’ என்னும் பிம்பத்தை உருவாக்க முடியவில்லை. தமிழக அரசியல் களத்தில், மூன்றாம் அணி எந்தவொரு தேர்தலிலும் வெற்றிபெற்ற வரலாறு இல்லை. அதனால், என்னதான் அதிமுக நிர்வாகிகள் நேரடியாக நோகடித்தாலும், அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறது பாஜக.

தடுமாறுகிறதா அதிமுக தலைமை! - சிறுபான்மையினர் வாக்குகளைக் கவர்ந்திழுக்க, சிறுபான்மையினர்களின் மேடைகளில், ‘பாஜகவுடன் கூட்டணி இல்லை’ என எடப்பாடி பழனிசாமி பேசினார். அவரைத் தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளும் பாஜகவை கடுமையாக விமர்சித்து, ‘கூட்டணிக்கு வாய்ப்பில்லை’ எனக் கூறி வருகின்றனர். ஆனால், அமித் ஷாவின் மறைமுகக் கூட்டணி அழைப்பு, அதிமுக தலைமையைத் தடுமாறச் செய்துள்ளதோ என்னும் சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக, அமித் ஷா கருத்து குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘நான் அதைப் பார்க்கவில்லை’’ எனச் சொல்லிவிட்டு, கடந்து சென்றார் எடப்பாடி பழனிசாமி. எனவே, தேர்தல் முன்போ, பின்னரோ ’அதிமுக - பாஜகவுடன் கூட்டணி’ அமைத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஏதுமில்லை.

பாஜகவுக்கு வேறு வழியில்லை! - இந்தத் தேர்தலில் தனித்தோ, மூன்றாம் கூட்டணி அமைத்தோ களம் கண்டால், அதிக தொகுதிகளில் நிற்க வேண்டிய நிலை பாஜகவுக்கு ஏற்படும். மும்முனைப் போட்டியால் அதிக வாக்குகள் பெற முடியாமல் போகலாம். கடந்த தேர்தல்களைப் போலவே வாக்கு சதவீதம் குறைவாக இருந்தால், அது பாஜகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அதிமுக போன்ற பெரும் கட்சியுடன் கூட்டணி அமைத்தால், பாஜக நிற்கும் இடங்கள் குறைவாகும். எனினும், வெற்றி பெற வாய்ப்பு இருக்கலாம். அப்படி வெற்றி பெறாவிட்டாலும் பெறும் வாக்குகள் கணிசமான அளவு உயரவும் வாய்ப்புள்ளது. அந்த வாக்கு சதவீதத்தைக் காட்டியே அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலை பலத்துடன் சந்திக்க முடியும் என நம்புகிறது பாஜக.

அதிமுகவுக்கு வேண்டுமானால் பாஜக ஆப்ஷனாக இருக்கலாம். ஆனால், பாஜகவுக்கு தமிழகத்தில் வேரூன்றி வளர இருக்கும் ’ஒரே ஆப்ஷன் அதிமுக’ மட்டும்தான். இதைத்தான் மீண்டும் மீண்டும் தங்கள் செய்கையால் உணர்த்தி வருகிறது பாஜக.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

7 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்