மேட்டூர் அணையில் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளர் திடீர் ஆய்வு

By த.சக்திவேல்

மேட்டூர்: மேட்டூர் அணையில் நீர்வளத் துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தொடர்ச்சியாக, 5 நாட்களாக விநாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா வியாழக்கிழமை, மேட்டூர் அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அணையின் வலது, இடது கரை, கீழ் மட்ட மதகுகள், 16 கண் மதகுகள், பூங்கா உள்ளிட்ட பகுதிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, திருச்சி மண்டல தலைமை பொறியாளர் சுப்ரமணி பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் சிவகுமார் உதவி செய்ய பொறியாளர் செல்வராஜ், மேட்டூர் சார் ஆட்சியர் பொன்மணி, வட்டாச்சியர் விஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர், தமிழக நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்திப் சக்சேனா செய்தியாளர்களிடம் கூறியதாவது: "மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர், டெல்டா மாவட்டங்களுக்கு சென்றுள்ளதா என்பது குறித்து, மேட்டூர் அணையில் இருந்து திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதியில் ஆய்வு செய்கிறேன்.

டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நாளை மாலைக்குள் நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழைக்கு இன்னும் 4 மாதங்கள் உள்ள நிலையில், அணையில் நடைபெற்று வரும் பராமரிப்பு மற்றும் புணரமைப்பு பணிகள் அனைத்தும் நிறைவு பெறும்" என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE