மக்களவை தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் பாஜக போட்டி: முதல்வர் ரங்கசாமி உறுதி

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரி மக்களவை தொகுதியில் பாஜகதான் போட்டியிடுகிறது என்பதை முதல்வர் ரங்கசாமி உறுதிசெய்துள்ளார்.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் உள்ளது. இங்கு புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களையும் உள்ளடக்கியதாக புதுச்சேரி மக்களவை தொகுதி உள்ளது. இத்தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு, கடந்த ஓராண்டாகவே அதற்கான பணிகளில் பாஜக முனைப்பு காட்டி வருகிறது. கடந்த வாரம் புதுச்சேரிக்கு வந்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா, முதல்வர் ரங்கசாமியை சந்தித்து இதை உறுதிப்படுத்தினார்.

ஆனால், கடந்த 5-ம் தேதி நடந்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சி கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், ‘‘புதுச்சேரி மக்களவை தொகுதியில் நமதுஎன்.ஆர்.காங்கிரஸ் கட்சியே போட்டியிட வேண்டும். கூட்டணி கட்சியான பாஜகவிடம் இதை உறுதிபட தெரிவிக்க வேண்டும்’’ என்று வலியுறுத்தியதால், சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் 14-ம் ஆண்டுதொடக்க விழா கூட்டம் புதுச்சேரியில் நேற்று நடந்தது. இதில்பேசிய கட்சி தலைவர் ரங்கசாமி, ‘‘மக்களவை தேர்தலில் கூட்டணி கட்சி (பாஜக) வேட்பாளரின் வெற்றிக்கு நாம் முழுமனதோடும், பலத்தோடும் பணியாற்றி, அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த ஆட்சி அமைந்து, பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். இதை மக்களிடம் எடுத்துக்கூறி என்.ஆர்.காங்கிரஸார் பணியாற்ற வேண்டும். அடுத்தும் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி புதுச்சேரியில் மலர வேண்டும். அதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும். அரசுக்கு உறுதுணையாக இருக்கும் பிரதமர், மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். இதன்மூலம் புதுச்சேரியில் பாஜகதான் போட்டியிடுகிறது என்பதை ரங்கசாமி உறுதி செய்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE