மாவட்ட அதிகாரிகள், காவல்துறையினருடன் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் 2-ம் நாளாக ஆய்வு

By செய்திப்பிரிவு

சென்னை: அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், தமிழகத்தில் ஆய்வு செய்வதற்காக, இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது, தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மல்லே மாலிக் ஆகியோர் நேற்று முன்தினம் டெல்லியில் இருந்து சென்னை வந்தனர்.

முதலில், தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மற்றும் தேர்தல் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். அதன்பின் பிற்பகலில் காவல்துறை, சுங்கத்துறை, வருமான வரித்துறை, வருவாய் புலனாய்வுத்துறை, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு, மத்திய ரிசர்வ் படை, ரயில்வே பாதுகாப்புப்படை, மத்திய தொழில் பாதுகாப்புப்படை உள்ளிட்டவற்றின் மாநில பொறுப்பு அதிகாரிகளுடன் தேர்தல் பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.

தொடர்ந்து, நேற்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, தமிழகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாநகர காவல் ஆணையர்கள், மாவட்ட எஸ்.பி.க்களுடன் தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலி மூலம் ஆலோசனை நடத்தினர். ஆலோசனை முடிந்த பின்னர் அவர்கள் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

இதையடுத்து, செய்தியாளர்களிடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறியதாவது: இந்திய துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது மற்றும் இந்திய தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் மலேய் மாலிக் ஆகியோர் நாங்கள் எந்த அளவுக்கு தேர்தல் நடத்த தயாராக இருக்கிறோம் என்பது குறித்து கடந்த 2 நாட்களாக ஆய்வு செய்தனர். அப்போது நாங்கள் தேர்தலை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளோம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE