சென்னை: "ஸ்பெயின் நாட்டில் செய்த சுற்றுப்பயணத்தின் காரணமாக 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழகத்துக்கு வரவிருக்கின்றன" என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ள முதல்வர் ஸ்டாலின், "ஒரு டிரில்லியன் டாலர் என்ற பொருளாதார வளர்ச்சி இலக்குக்கேற்ப, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 2022-ம் ஆண்டில் ஐக்கிய அரபு நாடுகளில் துபாய், அபுதாபி ஆகிய இடங்களுக்கான நான் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக அமைந்தது. 2023-ம் ஆண்டில் தெற்காசிய நாடுகளான சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்த்தேன். 2024-இன் தொடக்கத்தில் ஐரோப்பாவின் நான்காவது பொருளாதார நாடான ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்துடன் பயணத்தை மேற்கொண்டேன்.
ஸ்பெயின் நாட்டில் தரையிறங்கிய மறுநாளே முதலீட்டாளர் சந்திப்பிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அந்நாட்டின் முக்கியமான தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர். விழாவில் இந்திய தூதர் தினேஷ் பட்நாயக் உரையாற்றும்போது, “இந்தியாவிலிருந்து பல மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து உங்களிடம் பேசியிருக்கலாம். முதலீடுகளைக் கோரியிருப்பார்கள். இந்தியாவின் முக்கியமான மாநிலங்களின் ஒன்றான தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அவர்கள் உங்களுக்கு என்ன உத்தரவாதம் தருகிறார்களோ அதனை நிச்சயம் நிறைவேற்றித் தருவார்கள். அந்த மாநிலத்தில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் இதனை உணர்கின்றன. அதனால், நிச்சயமாக நீங்கள் முதலீடு செய்யலாம்” என்ற நம்பிக்கையைக் கொடுத்தார்.
இந்த விழாவில் பேசிய நான், “ஸ்பெயின் மக்களைப் போலவே தமிழர்களும் தங்கள் மொழி மீது மிகுந்த பாசம் கொண்டவர்கள். எங்கள் தமிழ் மொழியில் எழுதப்பட்ட திருக்குறள் என்கிற அறநூல் ஏறத்தாழ பல்வேறு மொழிகளில் வெளியாகியுள்ளது. ஐரோப்பா கண்டத்தில் நான்காவது பெரிய பொருளாதார வலிமை கொண்ட நாடாகத் திகழும் ஸ்பெயின் நாட்டில் ஃபார்ச்சூன் 500-இல் உள்ள நிறுவனங்களில் 8 நிறுவனங்களைத் தன்னகத்தே கொண்டிருப்பதுடன், ஃபார்ச்சூன் 2000-இல் உள்ள நிறுவனங்களில் 20 நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. இந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வரவேண்டும் என அன்புடன் அழைக்கிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் 9 ஸ்பெயின் கம்பெனிகள் முதலீடுகள் செய்திருப்பதால் நீங்களும் நம்பிக்கையுடன் முதலீடுகள் செய்யலாம்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ள ஸ்பெயின் நாட்டு நிறுவனமான ரோகா, எங்கள் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு பற்றி உங்களிடம் சொல்லியிருப்பார்கள். அவர்களுக்குத் தருவது போலவே அனைத்து ஒத்துழைப்பும் உங்களுக்கும் தரப்படும்” என்ற உறுதியினை வழங்கினேன். மொத்தம் 9 நிறுவனத்தினரைத் தனித்தனியாகச் சந்தித்து உரையாடியதன் பலனாகவும், தமிழ்நாடு அரசின் தொழிற்கட்டமைப்பின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையிலும் போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி 3 ஆயிரத்து 440 கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரவிருக்கின்றன.
ஐரோப்பாவின் தனித்துவமான நாடுகளில் ஒன்று ஸ்பெயின் என்பதையும், எந்தெந்த வகையில் அது முக்கியமானது என்பதையும் பத்து நாள் பயணத்தில் அறிந்துகொள்ள முடிந்தது. ஏறத்தாழ 4 கோடியே 75 லட்சம் மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் நாடு ஸ்பெயின். ஒப்பீட்டளவில் தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்கள் தொகையைவிட ஸ்பெயின் என்கிற நாட்டின் மக்கள்தொகை குறைவுதான். ஆனால், நாங்கள் தங்கியிருந்த இடத்தின் அருகிலும், பிற இடங்களிலும் மக்கள் நெருக்கமும் அவர்களின் புழக்கமும் அதிகமாக இருந்ததைக் காண முடிந்தது. இது பற்றி அங்குள்ளவர்களிடம் கேட்டபோது, “ஆண்டுக்கு 9 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் ஸ்பெயினுக்கு வருகிறார்கள். அதனால் எப்போதும் மக்கள் நெருக்கத்துடன் இந்த நாடு இருக்கும்” என்றனர்.
ஸ்பெயின் நாட்டின் தட்பவெப்பம் என்பது நம் நாட்டை, அதுவும் குறிப்பாக நமது மாநிலமான தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது மிகவும் குளிராகத்தான் தெரியும். ஆனால், ஐரோப்பிய நாடுகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது ஸ்பெயின் நாட்டின் வெப்பநிலை மைனஸ் டிகிரிக்குச் செல்வதில்லை என்பதால் மற்ற நாடுகளிலிருந்து இங்கு வருகிறார்கள். அத்துடன், ஸ்பெயின் நாட்டின் கலைப்படைப்புகள் உலகின் பல நாடுகளையும் ஈர்க்கக்கூடியனவாக இருக்கின்றன. அவற்றைப் பார்க்கவும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகிறார்கள்.
தலைநகர் மேட்ரிட் மற்றும் புகழ் மிக்க நகரங்களான பார்சிலோனா, செகோவியா, டொலிடோ எனப் பலவும் தனது பழம்பெருமை மிக்க கலைவடிவங்களால் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. டொலிடோ நகரம், ஸ்பெயினின் பழமையான தலைநகரமாகும். நாங்கள் தங்கியிருந்த மேட்ரிட் நகரிலிருந்து ஒரு மணி நேரத்தில் காரில் செல்லக்கூடிய தூரம். போகும் வழியெல்லாம் ஆலிவ் மரங்கள் தலையசைத்து வரவேற்பது போல இருந்தன. “ஆலிவ்தான் இந்த மண்ணின் அழகு. எல்லாப் பக்கமும் நிறைந்திருக்கும்” என்று அங்குள்ளவர்கள் தெரிவித்தார்கள். பழமையான நகரங்கள் உள்ள ஸ்பெயினில் பார்த்த மனிதர்கள் பலரும் வயதானவர்களாக இருந்தார்கள். இளைய தலைமுறையினரின் எண்ணிக்கை முதியோர் அளவிற்கு இல்லை.
சீனாவிலும் ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் தொகையில் மூத்த குடிமக்கள் நிறைந்திருக்கிறார்கள். இளைஞர்களின் விகிதம் குறைவு. ஆனால், தமிழ்நாட்டில் இளைஞர்கள் அதிகம். அவர்கள் மிகப் பெரும் மனிதவளமாக இருப்பதுதான் நமக்கு பலம். இளைஞர்களின் ஆற்றல் அவர்களுக்கும் நாட்டிற்கும் பயன்படும் வகையில் வேலைவாய்ப்புகளிலும் கொள்கை சார்ந்தும் வளர்த்தெடுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் நமக்கு இருக்கிறது.
பழமைப் பாரம்பரியம் மிக்க டொலிடோ நகரத்திற்குள் நுழையும்போது ஓர் அரங்கம் கண்ணில் பட்டது. நம் ஊரில் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவுதல் போட்டி போன்ற, ஸ்பெயினின் புகழ்மிக்க எருது விளையாட்டுப் போட்டிக்கான அரங்கம் அது. ஸ்பெயின் நாட்டின் தேசிய விளையாட்டாக இந்த எருது விளையாட்டுப் போட்டிகள் அமைந்துள்ளன. மார்ச் மாத இறுதியில் தொடங்கி அக்டோபர் மாதத்தின் நடுப்பகுதி வரை இந்த எருது விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இது பிப்ரவரி மாதம் என்பதால், ஸ்பெயினின் ‘ஏறுதழுவதல்’ போட்டியைக் காண முடியவில்லை.
ஸ்பெயின் நாட்டின் விளையாட்டுத் திடல்களில் கால்பந்து விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தனர். நம் நாட்டு இளைஞர்களுக்குக் கிரிக்கெட் போல, அந்த நாட்டிலும் அருகிலுள்ள ஐரோப்பிய நாடுகளிலும் கால்பந்து மிகவும் பிரபலம். உலகக் கோப்பை, ஐரோப்பியக் கோப்பை ஆகியவற்றுடன் கால்பந்து கிளப்கள் நடத்தும் போட்டிகளும் மிகவும் புகழ் பெற்றவை. நாங்கள் சென்றிருந்த நேரத்திலும் அங்கே கால்பந்து போட்டிகள் நடைபெறுவதை அறிந்து கொண்டோம்.
டொலிடோ நகரத்தின் அழகை இரசித்ததுடன், அதன் பழமைமிக்க வரலாற்றுச் சிறப்பையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘மூன்று பண்பாடுகளின் நகரம்’ என்ற சிறப்புப் பெயர் டொலிடோவுக்கு உண்டு. முதலில் யூதர்கள், பிறகு கிறிஸ்தவர்கள், அதன்பின் முஸ்லிம்கள் என மூன்று மதங்களைச் சார்ந்த மன்னர்களின் படையெடுப்பு நிகழ்ந்திருந்தாலும், மூன்று மதத்தின் மக்களும் அவரவர் பண்பாட்டைக் காப்பாற்றிக் கொண்டு, ஒற்றுமையாக வாழ்ந்த - வாழ்ந்து வருகிற பெருமை டொலிடோ நகரத்திற்கு உண்டு.
கி.பி. 3-ஆம் நூற்றாண்டில் ரோமானிய அரசாட்சியின் அரண்மனையாக இருந்த இந்தக் கோட்டை, 15-ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னரால் மீண்டும் பொலிவு பெற்றுள்ளது. பழமை மாறாத கோட்டையும் அதன் மதில்களும் டொலிடோ நகரத்திற்குப் பெருமை சேர்க்கின்றன. தொன்மை மாறாத கட்டடக்கலைகளைக் காப்பாற்றி, அடுத்த தலைமுறையினருக்குக் கலைச்செல்வமாக ஒப்படைக்கும் தொலைநோக்குப் பார்வையை அந்நாட்டில் காண முடிந்தது.
வேறு மதத்தைச் சேர்ந்த மன்னர்களால் கட்டப்பட்ட கட்டடம் என்பதால் இன்றைய ஆட்சியாளர்கள் அதை இடித்துத் தகர்த்திடவும் இல்லை, மாற்று மதத்தினரிடம் வெறுப்பை விதைத்துத் தேர்தல் இலாபம் தேடும் அரசியலும் அங்கு இல்லை. மூன்று மதத்தினரின் பண்பாட்டுச் சிறப்பு மிக்க நகரமாக டொலிடோ இன்றும் திகழ்வதைக் காண முடிந்தது. இந்தப் பண்பாட்டுப் பெருமையும் பன்முகத்தன்மையும்தான் இந்தியாவுக்கும் சிறப்பு சேர்க்கக்கூடியது என்பதை நாம் மறந்துவிட முடியுமா?
கோட்டைகள் போலவே பழங்காலத்தில் கட்டப்பட்ட பெரிய தேவாலயங்களான கதீட்ரல்களும் பழமை மாறாமல் பாதுகாக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை ஆண்ட மன்னர்கள் கட்டிய திருக்கோயில்கள் பலவும் திராவிடக் கட்டடக் கலையின் சின்னங்களாக விளங்குவதுபோல, ஐரோப்பியக் கட்டடக் கலையின் அடையாளங்களாக இந்த தேவாலயங்கள் திகழ்கின்றன.
வரும் வழியில், “இது என்ன இன்னொரு கோட்டை?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். “இது கோட்டை அல்ல, பிராடோ மியூசியம்” என்று தெரிவித்தனர். ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை ஆவணப்படுத்தும் விதமாக 1819-ஆம் ஆண்டில், அரண்மனை போன்ற இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. நமது மன்னர்களின் வரலாற்றைக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் தெரிந்துகொள்வது போல, ஸ்பெயின் நாட்டை ஆட்சி செய்த மன்னர்களின் வரலாறு - ஆட்சி முறை ஆகியவற்றை அறிந்து கொள்ள அவர்கள் காலத்தில் வரையப்பட்ட ஓவியங்களே சான்றுகளாக உள்ளன. அத்தகைய பழமைமிக்க ஓவியங்களைப் பாதுகாத்து, அவற்றின் வாயிலாக 12-ம் நூற்றாண்டிலிருந்து ஸ்பெயின் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில் பிராடோ அருங்காட்சியகம் அமைந்துள்ளது.
நாங்கள் அங்கே சென்றிருந்தபோது இளைய தலைமுறையினர் பலரும் அருங்காட்சியகத்தைப் பார்வையிடுவதைக் காண முடிந்தது. வரலாற்றை ஒவ்வொரு தலைமுறைக்கும் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டும். நம்மிடம் பெருமைமிகு வரலாறு உண்டு. நாம் அதனைச் சொல்லத் தவறியதால், வரலாறு இல்லாத ஒரு கூட்டம், நம் வரலாற்றைத் திரிக்கும். பண்பாட்டைச் சிதைக்கும். மொழி மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கும். வதந்திகளைப் பரப்பும். அவதூறுகளால் அரசியல் பிழைப்பு நடத்தும். உண்மை வரலாற்றை இளந்தலைமுறையினர் உணர்ந்துகொண்டால்தான், வரலாற்றைச் சிதைக்க நினைக்கும் வதந்தியாளர்களை, அவர்கள் தங்களின் வாக்குரிமையால் விரட்டி அடிப்பார்கள். அடுத்தடுத்த தலைமுறையினருக்கும் ஆபத்து நேராமல் தடுப்பார்கள்.
திமுக அரசு அமைந்தபிறகு, கீழடி அகழாய்வுகளில் கிடைத்த தமிழரின் நாகரிக - பண்பாட்டு வரலாற்றுச் சுவடுகளை ஆவணப்படுத்தும் வகையில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றங்கரை நாகரிகம் முதல் வைக்கம் போராட்டம் வரை உண்மை வரலாற்றை ஆவணப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை அரசாங்கம் மட்டுமல்ல, தமிழர் என்ற உணர்வு கொண்ட ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களைச் சந்தித்த இனிமையான நிகழ்விலும் இதனைக் கூறினேன்.
ஸ்பெயின் நாடு தன் வரலாற்றையும் பண்பாட்டையும் பாதுகாப்பதுடன் மொழியையும் வளப்படுத்தி உலகம் முழுவதும் பரவச் செய்திருப்பதைக் கண்டு வியந்தேன். நாலே முக்கால் கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டிற்கு, 9 கோடி சுற்றுலாப் பயணிகள் வருவதற்கான அடிப்படைக் காரணம், உலகமெங்கும் பரவியுள்ள ஸ்பானிஷ் மொழிதான்.
ஐரோப்பிய நாட்டவர் பிற கண்டங்களில் உள்ள நாடுகளுக்கு கடல்வழி கண்டறிய பயணித்தபோது, அதில் ஸ்பெயின் நாட்டின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக, தென் அமெரிக்க நாடுகள் பலவற்றிற்கு ஸ்பெயின் நாட்டவர் கடல்வழியாகச் சென்றதுடன் அங்கு குடியேறிய காரணத்தால், அந்த நாடுகளில் ஸ்பானிஷ் மொழி இன்று அலுவல் மொழியாக இருக்கிறது. ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக உலகளவில் பரவிய ஐரோப்பிய மொழிகளில் ஸ்பானிஷ் மொழிக்கு முக்கிய இடம் உண்டு. 20 நாடுகளில் அது அலுவல் மொழியாக உள்ளது. அந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஸ்பெயினுக்குச் சுற்றுலாப் பயணிகளாக வருகிறார்கள். தங்கள் முன்னோர்களின் நிலத்தைப் பார்க்கும் ஆவலுடன் வருகிறார்கள்.
தமிழ் மன்னர்கள் தங்களின் கடற்படை மூலம் தெற்காசிய நாடுகளான இன்றைய இந்தோனேஷியா, கம்போடியா, மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட நாடுகளின் அன்றைய பகுதிகளில் பண்பாட்டுச் சின்னங்களை நிறுவி, தமிழ் மொழியைப் பொறித்தது போல, தமிழர்கள் கடல்வழி வாணிகம் மேற்கொண்டு தமிழ்நாட்டில் கிடைத்த பொருட்களுடன் தமிழ் மொழியையும் கிரேக்கம்-ரோமாபுரி பேரரசுகளில் பரப்பினார்களோ அதுபோல தென் அமெரிக்க நாடுகளில் ஸ்பானிஷ் மொழி செல்வாக்குப் பெற்றிருக்கிறது. அது ஸ்பெயின் நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கிறது என்பதை இந்தப் பயணத்தில் உணர்ந்து கொண்டேன்.
பயணம் என்பது உலகத்தைக் காண்பதற்கான ஜன்னல். நாம் அறியாத பல செய்திகளை நமக்கு நேரடியாகக் கற்றுத் தருவதற்குப் பயணத்தைப் போன்ற சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. அதனை இந்தப் பத்து நாள் பயணத்தில் முழுமையாக அறிந்தேன். பயணத்தில் இருந்தாலும் எனக்குள்ள பொறுப்புகளையும் அதற்குரிய பணிகளையும் மறந்துவிடவில்லை. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய தருணம் நெருங்கி வருவதால் அது குறித்துக் காணொலி வாயிலாக அமைச்சர்களுடனும் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டேன். நம்முடைய உடனடி களப்பணி என்பது நாடாளுமன்றத் தேர்தல் களம்தான். அதற்காக அமைக்கப்பட்ட மூன்று குழுக்களுமே தங்களுடைய பணியைத் தொடங்கி, சிறப்பாகத் தொடர்கின்றன.
தனிப்பட்ட என்னுடைய - உங்களுடைய மகிழ்ச்சியைவிட, இந்தியாவின் ஜனநாயகத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைத் தகர்த்து நாட்டைக் காப்பாற்றும் போது ஏற்படும் மகிழ்ச்சியே முதன்மையானது. ஸ்பெயின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததுபோல, தேர்தல் களத்தில் ‘இண்டியா’வின் வெற்றியும் அமையும். தமிழ்நாடு வளம் காணும். இந்தியாவின் ஜனநாயகம் காக்கப்பட்டால்தான் தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியும் நிரந்தரமாக அமையும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago